நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

 









நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள்.

அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர்.

பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது.

அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மின்துடிப்புகள் தெரிந்தன. இதுபற்றிய ஆய்வை ஆபர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்தனர்.

 நாய்கள் மனிதர்களின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதை எந்த வயதில் கற்கின்றன என பலருக்கும் மனதில் கேள்வி இருக்கும். இதற்கான ஆய்வை அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்தனர். அதில் பிறந்து இரண்டு மாதங்களான  375 நாய்க்குட்டிகள் பங்கேற்றன. இதில் சில நாய்குட்டி இனங்களில் மனிதர்கள் சொன்ன வேலையை உடனே செய்தன. இதற்கு காரணம், அதன் மரபணு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

நாய்களின் குண இயல்பில் ஆக்ரோஷம், நடந்துகொள்வதில் பிரச்னைகள் இருக்கிறதா? அப்படியென்றால் நாயை வளர்ப்பவர் குணம் எப்படி என ஆராயவேண்டும். அவர் புறவயமானவர் என்றால் நாயை சிகிச்சை அளித்து குணப்படுத்துவது சற்று எளிதாக இருக்கும். அகவயமானவர் என்றால் சற்று கடினம். உரிமையாளரின் குண இயல்பு நாயையும் பாதிக்கிறது என்பதுதான் நீங்கள் அறியவேண்டிய செய்தி.

நாய்களுக்கும் இன்சோம்னியா பிரச்னை உண்டு. மனிதர்களைப் போலவே கனவுகளைக் கண்டு பிதற்றுவதை கண்டிருப்பீர்கள். நாய் சரியான தூக்கம் இன்றி குண இயல்பில் ஏதேனும் மோசமான மாற்றங்களைக் கண்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது முக்கியம்.

குழந்தைகள் பிறருடன் சமூக இயல்பில் கலந்து பழகுவதற்கு தொடக்கமாக அமைவது நாய், பூனைகளுடனான  உறவுதான். ஆண், பெண் என இரு  பாலினத்தவருக்குமே நாயுடன் பழகுவது மன இயல்பில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என தெரிய வந்திருக்கிறது.

 நன்றி

பாப்புலர் சயின்ஸ் இதழ் 

படம் - பின்டிரெஸ்ட் 


கருத்துகள்