மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

 



மனிதர்கள் இல்லாத உலகம்



ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை  எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்?

பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.  

தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள் பிற விலங்குகளை எதிர்கொண்டு தன்னைக் காத்தபடி உணவையும் தேடி அலையும் வாழ்க்கை விலங்குகளுக்கானது. நாயின் முன்னோர் ஓநாய்கள் என்பதால் அவை தம்மைக் காத்துக்கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது.

மனிதர்களை உணவுக்கு, பாதுகாப்புக்கு என சார்ந்தே வாழ்ந்துவிட்டதால் உயிர் பிழைத்துக்கொள்ளும் இயல்பு நாய்களுக்குள் இல்லாமல் போயிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். இந்த கருத்தை முழுமையாக மறுக்க முடியாது.

மனிதர்களை நம்பி வாழ்ந்த நாய்களுக்கு மனதளவில் அவர்கள் உலகில் இல்லாதது தொடக்கத்தில் சற்று கடினமான சூழலாகவே இருக்கும். இன்று உலகில் இருபது சதவீத நாய்களை மனிதர்கள் தங்கள் நண்பர்களாக கொண்டிருக்கிறார்கள். மீதியுள்ள எண்பது சதவீத நாய்கள் சுதந்திரமாகத்தான் தெருக்களில் திரிகின்றன. மனிதர்கள் சாப்பிட்டுவிட்டு கழித்துவிட்ட உணவு மிச்சங்களை, மலத்தை உண்கின்றன. எனவே, மனிதர்கள் இல்லாத் உலகில் நாய்க்கு உணவுக்கு மட்டும் சற்று சிரம்மாக இருக்கும். மற்றபடி அனைத்து விஷயங்களும் சுபம்தான். புதிய தலைமுறை நாய்கள் வந்தால், அவைகளுக்கு மனிதர்கள் பூமியில் இருந்தார்கள் என்றே தெரியாது. பிறகு எதற்கு மனிதர்களைப் பற்றி கவலைப்படவேண்டும்?

நாய்களை மனிதர்கள் பழக்கப்படுத்தி தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். அப்படி செய்யாதபோதும் நாய்கள் உலகில் வாழத்தான் செய்யும். இந்த கொள்கைப்படி பார்த்தால், உணவுத்தேவை தீர்ந்தால் உடல்தேவை எழுகிறது. அதாவது இனப்பெருக்கம். நாய்களைப் பொறுத்தவரை வாழ்நாள் குறைவு என்பதால் இனப்பெருக்க வேகம் அதிகம். குங்குமத்தில் ஷாலினி நியூட்டன், தெரு நாய்களுக்கு சோறு வைக்கும் இளம்பெண் பற்றி புகழ்ந்து எழுதி முடிப்பதற்குள், ஏராளமான நாய்குட்டிகள் உலகிற்கு வந்திருக்கும். கடற்கரையோரத்தில் புழங்கிய நிறைய பேர் நாயால் கடிபட்டு மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள்.

மனிதர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப ஆக்ரோஷம் குறைந்த நாய் இனங்களை மட்டும் இனப்பெருக்கம் செய்து வந்தனர். அவர்கள் இல்லாத சூழலில் நாய், ஓநாய், நரி, வேறுபட்ட நாய் இனங்களோடு இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும். இதனால், நாய்களின் தோற்றம், அதன் ரோமம், செயல்பாடு என அனைத்துமே மாறுபட்டிருக்கும்.

பாலைவனம், சமவெளி, மலைப்பகுதி, பனிப்பகுதி என உலகின் பல்வேறு சூழலில் வாழும் நாய்களின் தோற்றம் மாறுபடத் தொடங்கும். 

நன்றி

பாப்புலர் சயின்ஸ் இதழ் 

image - azucar

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்