நட்பை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்!

 





நட்பு





நட்பை வளர்த்துக்கொள்ள மேற்குலகில் எப்போதும் போல ஏராளமான நூல்கள் உள்ளன. உண்மையில் மனிதர்கள் தனியாக இருக்கும்போது பல விஷயங்களையும் தானே கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சுய உதவி, முன்னேற்ற நூல்களின் சாதனை விற்பனை அதைத்தான் விவரிக்கிறது. நட்பை துணையா கொள்ள என்ன செய்யலாம்…

அதிர்ஷ்டம் உதவாது

நட்பை உருவாக்குவதில் எதிர்பாராத விஷயங்கள், அதிர்ஷ்டம் என்பது உதவும் என ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. நட்பு என்பது உருவாக்கப்படவேண்டியது. அது தானாக உருவாகாது என எழுத்தாளர் சாஸ்தா நெல்சன் கூறுகிறார். இவர் ஹவ் டு டீப்பன் ஃபிரண்ட்ஷிப் ஃபார் லைஃப்லாங் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார்.

நம்பிக்கை அதுதான் எல்லாம்

நம்பிக்கையோடு ஒருவரை சந்திப்பது, அவருக்கு சிறு பரிசுகளை அளிப்பது நட்பை புத்துயிர்ப்பு செய்யும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. பரிசு என்பதன் கூடவே பாராட்டையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைக்கு ஒருவரைப் பாராட்டுவதை கூட குழுவாதம் அடிப்படையில் தனக்குப் பிடித்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்து செய்கிறார்கள். இப்படி நடந்துகொள்வது ஒருவரின் அல்பத்தனத்தைத்தான் உலகிற்கு காட்டுகிறது.

பட்டியல் தேவை

ஒரு தாளில் மூன்று அல்லது ஐந்து நண்பர்கள் பெயர்களை எழுதுங்கள். இந்த நண்பர்களிடம் நீங்கள் ஏதாவது ஒரு வழியில் நட்பை மீண்டும் உருவாக்கிக் கொள்ள நினைக்கிறீர்கள். குறுஞ்செய்தி, காபி அழைப்பு, புகைப்படம் அல்லது நினைவுகள் பற்றிய குறிப்பு, கட்டுரை என அவர்களைப் பற்றிய ஏதாவது ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.

நிறைய நண்பர்கள் வைத்துக்கொள்ளலாம்

ஒரே ஒரு நண்பர் உங்களுக்கான நண்பராக போதுமானவராக இருக்கமாட்டார். எனவே, குறைந்தபட்சம் ஐந்து நண்பர்களையாவது காப்பாற்றி வைத்துக்கொள்ளுங்கள். 2020ஆம் ஆண்டு நார்த்தர்ன் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில், மத்திய வயது பெண்கள் மூன்று அல்லது ஐந்து நண்பர்களை வைத்துக்கொள்வது திருப்தி அளிப்பதாக கூறியிருந்தது தெரிய வந்துள்ளது.

நேரம் ஒதுக்குவது முக்கியம்

நண்பர்களை உருவாக்கிக்கொள்ள சிட்டி ஸ்னாக்ஸ் சென்டருக்கு டீ குடிப்பது கூட முக்கியம்தான். கும்பலோ, தனிநபரோ எந்தளவு நேரத்தை செலவிடுகிறீர்களோ அந்தளவு நட்பு செழித்து வளரும். குறிப்பிட்ட தன்னார்வ அமைப்பில் இணைந்து வேலை செய்பவர்கள் இயல்பாகவே மெல்ல நட்புணர்வு கொண்டவர்களாக மாறுவார்கள். முதலில் ஒருவரைச் சந்தித்து பேசுவது தர்ம சங்கடமாக இருந்தாலும் மெல்ல அந்த சூழ்நிலை மாறும்.

பயிற்சி.. பயிற்சி

சமூக திறன்களைக் கற்பது என்பது உடற்பயிற்சி செய்து தசைகளை அழகாக கட்டாக மாற்றுவது போலத்தான். நிறைய அறிமுகமற்ற ஆட்களை சந்திக்கும்போது, பிறரால் புறக்கணிக்கப்படும் பயம் மெல்ல அகன்று, உரையாடலில் நம்பிக்கை பிறக்கும்.

 கைட்லின் வால்ஸ் மில்லர்

ரீடர்ஸ் டைஜஸ்ட்

https://pixabay.com/photos/bonfire-camping-people-fire-1867275/

கருத்துகள்