சங்க இலக்கிய நூல்களை அச்சு நூலாக்கி காப்பாற்றிய தமிழ் ஆர்வலர்! - என் சரித்திரம் - உ வே சா

 














என் சரித்திரம்

உ வே சா

விகடன் பிரசுரம்

நூல் எழுநூறு பக்கங்களுக்கும் அதிகம். தொடக்கத்தில் நூலை படிப்பதில் எவருக்கும் தடுமாற்றம் இருக்கலாம். ஆனால் உ வே சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சேர்ந்து தமிழ் இலக்கியங்களை, பாடல்களை கற்கும் பகுதிக்கு வந்துவிட்டால் அதற்குப் பிறகு நூலை கீழே வைக்க முடியாது.

ஏராளமான தமிழ் சங்க இலக்கியங்களை ஒலைச்சுவடிகளிலிருந்து அச்சு நூலுக்கு மாற்றியவர், உ வே சா. தமிழ் கற்ற பண்டிதராக மடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருப்பவர், தியாகராசர் மூலம் கும்பகோணம் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்க்கிறார். பிறகும் கூட ஓய்வெடுக்காமல் சிலப்பதிகாரம், மணிமேகலை என பல்வேறு சங்க இலக்கிய நூல்களை ஊரெங்கும் தேடிப் பிடித்து அதன் பிழைகளை களைந்து அச்சு நூலாக மாற்றுகிறார்.

உண்மையில் இந்த பயணத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு துணையாக நிற்கிறார். பொருளுதவி செய்கிறார். உ வே சாவின் குடும்பம் கும்பகோணத்தில் வீட்டைப் பிடித்து குடியேற உதவுகிறார். நூலில் உ வே சாவின் தனிப்பட்ட வாழ்க்கை, மக்கட்பேறு பற்றிய அதிக குறிப்புகள் ஏதுமில்லை. முழுக்க தமிழுக்கான உழைப்பு, அதில் ஏற்படும் தடுமாற்றங்கள், உருவாகும் எதிரிகள், தவறான வதந்திகள் ஆகியவையே நூலில் உள்ளன.

மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கும் , உ வே சாவுக்குமான அன்பும் பிரியமும் வெளியாகும் சம்பவங்கள், உ வ சா அம்மைக் காய்ச்சலுக்கு உள்ளாகி பிறகு உடல்நலம் தேறி தனது குருநாதரை சந்திக்க வரும் காட்சி.. குருநாதரின் இறுதிக் காலத்தில் அவரைப் பற்றி உ வே சா நினைப்பதும், அவருக்காக செய்யுள்களை படிப்பதுமான காட்சி. தியாகராசர் செய்த உதவியை எண்ணி நெகிழ்வது என வாசித்து நெகிழ்ச்சி அடைவதற்கான சம்பவங்கள் நிறைய உண்டு. தனது குருநாதர் செய்யுள்களை இயற்றுவதும், அதற்கான பொருளாதார உதவிக்கு பணக்காரர்களை நம்பியிருப்பதும் சரியானது அல்ல என உ வே சா எண்ணுகிறார். இதற்கு காரணமாக ஜமீன்தார் உ வே சாவின் செய்யுள் நூல்களை பறித்து வைத்துக்கொண்டு அவரை சோதிக்கும் காட்சிகளை கூறலாம்.

உ வே சாவுக்கு தமிழ்மேல் ஆர்வம் ஏற்படும் காலங்கள், அதை நினைத்து அவரது தந்தை கவலைப்படுவது, மகனுக்கு பிழைப்புக்கு ஏதேனும் வழிவகை செய்யவேண்டுமே என நினைப்பது என வரும் காட்சிகள் மனதை வேதனைப்படுத்துபவை. செலவுகளுக்காக விற்ற நிலத்தை உ வே சா தலையெடுத்து திருவாவடுதுறை ஆதீன வித்வானாக மாறிய பிறகுதான் மீட்க முடிகிறது.

ஊரிலுள்ள வசதியானவர்களின் கருணையால்தான் உ வே சாவின் குடும்பமே பிழைக்கிறது. உ வே சாவுக்கு ஆசிரியர் பணி கிடைத்தபிறகு நிலைமை சற்று ஸ்திரமாக மாறுகிறது. இந்த வேலை கிடைப்பதற்கு திருவாவடுதுறை ஆதீனமும், தியாகராசரும் முக்கியமான காரணங்களாக அமைகின்றனர்.

பசியில் வேறு வழியின்றி இறைவனுக்கு படைத்த மடப்பள்ளி பிரசாதங்களை உண்பது, உணவு விடுதிக்கு காசு கொடுக்க முடியாமல் தடுமாறுவது, குளிக்க உட்கார்ந்துவிட்ட குருவுக்கு காசு கொடுத்து எண்ணெய் வாங்கி வந்து தேய்க்க கூறுவது, தற்பெருமையும் ஆணவமும் கொண்ட ஜமீன்தாரால் செய்யுள் நூல் திருடப்பெற்று அவதிப்படுவது, திருவாவடுதுறையில் நகை காணாமல் போய் திருடன் என்ற அவதூறில் மாட்டுவது, சீவக சிந்தாமணியை தொகுக்கும் எண்ணத்தை முதலியார் மூலம் பெறுவது, அதற்காக உழைக்க நேரும் போது ஏற்படும் சங்கடங்கள், அவதூறுகள் என நூல் முழுக்க  உ வே சாவின் வாழ்க்கை அனுபவங்கள் நம்மை பெரிதும் பாதிப்பவை.

வறுமையிலும், நெருங்கியோரை இறந்த விரக்தியிலும், அவதூறுகள் பரவும் பொழுதிலும் கூட தமிழ் மொழிதான் அரணாக நின்று உ வே சாவுக்கு ஆறுதல் அளிக்கிறது. முதுகு தட்டி தேற்றுகிறது.

நூலை படிக்கும் தமிழ் மாணவர் ஒருவர் யாப்பிலக்கணம், செய்யுளை இயற்றுவது எப்படி, செய்யுளை பிரித்து எப்படி பொருள் கொள்வது, அந்த இடத்திலேயே பாடல்களை உருவாக்கிப் பாடுவது பற்றிய எளிதாக அறியலாம். பயன்படுத்தியுள்ள தொன்மையான அழகான சொற்களை நூலை தனித்துவமான உரைநடை நூலாக மாற்றுகின்றன. இடையிடையே ஏராளமான செய்யுட்கள் நிறைந்துள்ளன.

கோமாளிமேடை டீம்

நன்றி- எழுத்தாளர் பா ராகவன்

 அட்டைப்படம் - ஃப்ரீதமிழ் இபுக்ஸ் 

நூல், ஃப்ரீதமிழ் இபுக்ஸில் இலவசமாக கிடைக்கிறது. தரவிறக்கி வாசிக்கலாம். காசு கொடுத்து வாங்குவேன் என்றால் உடுமலை, காமன்ஃபோக்ஸ், விகடன் பிரசுரத்தில் வாங்கிப் படிக்கலாம். 


கருத்துகள்