சூழல் போராட்டங்களால் பாதுகாக்கப்படும் இயற்கை சூழல்!

 











புத்துயிர்ப்பு

தொழில்வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவது இடையறாமல் நடந்து வருகிறது. இதோடு ஒப்பிடும்போது, மரக்கன்றுகளை நடும் செயல் சற்றுவேகம் குறைவானதாகவே உள்ளது. காடுகள் வளர்க்கப்பட்டால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு குறையும். மண் அரிப்பு மெல்ல குறையும். இதெல்லாம் தாண்டி இயற்கை வளம் சீரானால் வேலைவாய்ப்புகள் கூடும்.

மரங்கள், கார்பனை உறிஞ்சி தனது வேர்ப்பகுதியில் சேமிக்கிறது. 20-30 சதவீத அளவுக்கு மரத்தின் உயிரியல் பகுதி, கார்பனை உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போல செயல்படுகிறது. இறந்த அழுகிய மரத்தின் வேர்கள் கார்பனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்யும் மரங்கள், கழிவுப்பொருளாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.

காடுகள் அழிந்தாலும் அதனை செயற்கையாக முறையில் மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புறங்களில் உருவாக்க முயல்கிறார்கள். இந்தவகையில் நகர்ப்புற கட்டுமானங்களுக்கு புகழ்பெற்ற சிங்கப்பூரில் கூட செயற்கையான பசுமைப்பரப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இயற்கை சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டால் அதை மறுகட்டுமானம் செய்வதற்கு சிறிது காலம் தேவை. மனிதர்கள் தங்களது தலையீட்டாலும், மாசுபாடுகளை உருவாக்குவதாலும் இயற்கை தனது இயல்பான நிலைக்கு திரும்பமுடியாமல் தடுமாறுகிறது.

மண்ணை மாசுபடுத்தும் பொருட்களை அ கற்றி, அங்குள்ள மண்ணுக்கேற்ப மரக்கன்றுகளை நடுவது முக்கியம். இப்படி செய்வதால், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் திரும்ப அங்கு வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

காலநிலை மாற்றத்தின் வெளித்தெரிந்த முக்கியமான பாதிப்பு என காட்டுத்தீயைக் கூறலாம். குறிப்பிட்ட பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயற்கையானதுதான் என்றாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது பரிதாபமான நிலை.

காட்டில் காட்டுத்தீ ஏற்படுவது மின்னல் மூலமாக இயற்கையாகவே ஏற்படுகிறது. இதுதவிர, காட்டுக்குள் செல்லும் மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாகவே அதிகளவு பாதிப்புகள் நடைபெறுகின்றன. எனவே, காட்டுக்குள் சுற்றுலா அல்லது வணிக காரணங்களுக்காக செல்பவர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியம்.

காட்டுத்தீயை அணைப்பதற்கென நெருப்பு தடுப்பு அமைப்புகளை அமைத்தாலே அதன் பாதிப்பை கட்டுப்படுத்திவிடலாம். காட்டுத்தீ பாதிப்பு ஏற்படும்போது வேகமாக செயல்பட வேண்டும்.

காலநிலை மாற்றத்தில் இன்னொரு பாதிப்பு என்றால் அது புயல். காற்று, மழை என மக்களை நிலைகுலைய வைக்கும் ஆற்றல் இதற்குண்டு. எனவே, புயல் ஏற்பட்டால் அரசு அமைப்புகள் மூலம் எந்தளவு தீவிரமான புயல் என அடையாளம் கண்டு அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.

அரசு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களை தங்க வைக்க முகாம்களுக்கான இடங்களை தயார் செய்யவேண்டும். சூழலைக் கண்காணித்து அதற்கேற்ப மருத்துவ வசதிகளை தர குழுக்களை அமைக்க வேண்டும்.

ரேடார், செயற்கைக்கோள் ஆகிய வசதிகளை பயன்படுத்தி புயலின் தீவிரத்தை அறியலாம். இதில் பெறும் தகவல்களைக் கொண்டு புயலின் தீவிரத்தை அளவிட்டு மாதிரிகளை அமைக்க முடியும்.  ஏற்படும் பாதிப்புகளை முன்னதாகவே யூகிக்க முடியும். பல்வேறு நிவாரண பணிகளை முடுக்கிவிட முடியும்.

கார்பன் வெளியீட்டைக் குறைக்க தனிப்பட்ட மனிதர்களின் விழிப்புணர்வு அவசியம். இந்த விழிப்புணர்வு இனக்குழு அளவில் வளர்ந்தால் அதுதான் உள்ளூர் திட்டங்களிலும் பயன்கொடுக்கும். பிறகு, மற்ற திட்டங்களுக்கும் பரவும். இப்படி செயல்படுவதை ‘உலகளவில் சிந்தனை செய்வோம். உள்ளூர் அளவில் செயல்படுத்துவோம்’ என்று குறிப்பிட்டனர்.

கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் சிந்தனை மகத்தானதுதான். ஆனால், அதை உள்ளூர் அளவில் நடைமுறைக்கு ஏற்றபடி மாற்றி செயல்படுத்துவது முக்கியம். இப்படி செயல்படாதபோது அதில் எந்த முடிவும் கிடைக்காது.

அரசு தானாக முன்வந்து காலநிலை பிரச்னைகளை காதுகொடுத்து கேட்கும் என நினைப்பது  முட்டாள்தனமானது. எனவே, இதை அறிந்துகொண்ட சமூக அக்கறை கொண்ட தனிநபர்கள் மக்களை திரட்டி தெருக்களில் போராடத் தொடங்கினர். இதன் விளைவாக உலக நாடுகளிலுள்ள அரசுகளுக்கு நெருக்கடி தொடங்கியது. தொழில்துறையினருக்கு ஆதரவாக இருந்த அரசுகள் கூட மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கால வரம்பை கூறும் நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்று கார்பன் வெளியீட்டைக் குறைக்கவே  போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், அதை ஏற்கவே பல்வேறு நாட்டு அரசுகளும் மறுத்தன.

2019ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் ஆறாயிரத்திற்கும் அதிகமான சூழல் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசு அமைப்பின் கட்டிடங்கள், பாலங்கள், எண்ணெய் நிறுவனங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இதில் பயன்படுத்தப்பட்ட வாசகங்களைப் பார்ப்போம்.

‘’பணத்தை நாம் சாப்பிட முடியாது எண்ணெய்யை குடிக்க முடியாது.’’

‘’காலநிலை மாறுகிறது. நாமும் ஏன் மாறக்கூடாது’’

‘’கரிம எரிபொருட்களுக்கான முதலீட்டை நிறுத்து’’

‘’கல்வியில் சீர்திருத்தம் தேவை’’

2019ஆம் ஆண்டு நடைபெற்ற காலநிலை மாற்ற போராட்டங்களில் மட்டும் 4 மில்லியன் மக்கள் பங்கேற்றுள்ளனர்.

அரசும் சும்மா இருக்கவில்லை. இயற்கை வளங்களை அடிப்படையாக கொண்டுதான் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. எனவே, போராடும் அமைப்பினரை காவல்துறை வைத்து அடித்து நொறுக்குவது, அமைப்புக்கு கிடைக்கும் நன்கொடையை தடுப்பது, நிதி கொடுப்போரை மிரட்டுவது, வரி ஏய்ப்பு அவதூறை வெளியிடுவது, விசாரணையின்றி சிறையில் தள்ளுவது என பல்வேறு வகையில் செயல்பாட்டாளர்களை கட்டுப்படுத்த முயன்றன. முயன்று வருகின்றன.

சூழல் போராட்டக்காரர்கள், அரசு நிலங்களை தனியார் அமைப்புகள் ஆக்கிரமிப்பது, அதை மாசுபடுத்துவது, காடுகளை அழிப்பது ஆகிய செயல்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இப்படி அநீதியான செயல்களை போராளிகள் செய்கிறார்களே என அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது, விசாரணையற்ற சிறைவாசம், வெளிநாட்டு முகவர் என செய்தி வெளியிடுவது, வரி ஏய்ப்பு ஊடக அவதூறு, வன்முறை, கூலிப்படை வைத்து கொல்வது ஆகியவற்றை செயல்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா? காடுகளில் உள்ள பழங்குடிகளை கூலிப்படை வைத்து கொன்று, பெண்களை வல்லுறவு செய்து மிரட்டி விரட்டுவது உலக நாடுகளில் நடந்து வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கூட அதைக் காக்க முயன்ற, பாதுகாக்கும் படைகளை அமைத்த பெரிரா, பிலிப்ஸ் என இரு பத்திரிகையாளர்களை கூலிப்படை சுட்டுக் கொன்றது. இதற்கு அந்த நாட்டு அதிபர் பொல்சனாரோவே ஆதரவாக இருந்தார்.

2018ஆம் ஆண்டு ஸ்வீடனின் மிக வெப்பமான ஆண்டு. 262 ஆண்டுகளில் இந்தளவு வெப்பத்தை அந்த நாடு சந்தித்ததில்லை. அந்த ஆண்டுதான் பதினைந்து வயதான பள்ளிச்சிறுமி கிரேட்டா துன்பெர் பள்ளி செல்லாமல் தனியாளாக உட்கார்ந்து காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார். அந்த ஆண்டு கிரேட்டாவுக்கு அதிக ஆதரவாளர்கள் சேரத் தொடங்க உலகமெங்கும் ஏராளமான காலநிலை மாற்ற போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. கொரானா காலத்தில் கூட போராட்டங்கள் டிஜிட்டல் வடிவில் மாறின. இந்தியாவிலும் கிரேட்டாவின் சூழல் போராட ஆதரவாளர்கள் உள்ளனர்.

சிறிய மாற்றம், பெரிய விளைவு

குறிப்பிட்ட தொலைவுக்கு செல்கிறோம் என்றால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காரில், விமானத்தில் செல்லலாம். ஆனால், குறைந்த தொலைவு என்றால் பொதுப்போக்குவரத்து அல்லது சைக்கிளைப் பயன்படுத்தலாம். நடப்பதும் கூட சிறந்ததுதான். திடீரென அதிக தொலைவு நடப்பது, சைக்கிளில் செல்வது உடலுக்கு பலத்த அதிர்ச்சியைத் தரும்.எனவே உடலுக்கு மெல்ல நடையை, சைக்கிள் ஓட்டுவதை பழக்கப்படுத்தி அதிக தொலைவு செல்வது நல்லது. மற்றவர்கள் உங்களை பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதல்ல விஷயம். உங்கள் வாழ்க்கையை முழுமையாக எப்படி வாழ்கிறீர்கள் என்பதில் கவனத்தைக் கொள்ளவேண்டும்.

எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தும் பேட்டரி மாசு ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் ஒப்பீட்டளவில் அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும்படி சூழல் அமைந்தால் நல்லது. இன்று பல்வேறு கார்களும் எலக்ட்ரிக் அமைப்புகளும் மென்பொருள் சார்ந்தவையாக உருவாகி வருகின்றன. இந்த வகையில் மாசுபாடு குறைவாகவே உள்ளது. எனவே, உங்களுக்கான பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார் வாங்கி பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதை மனதில் கொண்டால், எந்த பொருளும் அதிக மாசு ஏற்படுத்தாது.

 

 

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே புக்ஸ்

 images - pixabay, pinterest

 

மொழிபெயர்ப்பு

அன்பரசு சண்முகம்

தொகுப்பு

வின்சென்ட் காபோ

காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரைகளை வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றி!


கருத்துகள்