சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்ட சகோதரியின் உடலைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரி! பியாண்ட் ஈவில்

 










பியாண்ட் ஈவில் - கே டிராமா





பியாண்ட் ஈவில்

கொரிய டிவி தொடர்

பதினாறு எபிசோடுகள்

ராகுட்டன் விக்கி ஆப்

 

2020ஆம் ஆண்டு லீ டாங் சிக் என்பவரின் சகோதரி, காணாமல் போகிறார். அவரது வெட்டப்பட்ட கைவிரல்கள் மட்டும் வீட்டின் முன் கிடைக்கின்றன. சம்பவ இடத்தில் லீ டாங் சிக்கின் கிடார் மீட்டும் கருவி கிடைக்க, அவரை வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படுகிறார்கள். அதனால், அவர் வாழும் ஊர் அவரை அக்காவைக் கொன்ற தம்பி என முன்முடிவு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அதை சிறப்பு செய்தியாக்குகின்றன.

ஆனால் அக்காவின் உடல் கிடைக்காத காரணத்தால் தம்பி குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். அவரை கைது செய்த காவல்நிலைய தலைவர், லீ டாங் சிக் விரும்பியபடி காவல்துறை செர்ஜென்ட் ஆக உதவுகிறார்.

பெண் பிள்ளை இறந்த துக்கத்தால் லீ டாங் சிக்கின் அப்பா, பனியில் பிள்ளைக்காக காத்திருந்து மனம் சிதைந்து போய் உறைந்து இறக்கிறார். அதைப்பார்த்த அவரது மனைவிக்கு புத்தி பேதலித்துவிடுகிறது. லீ டாங் சிக்கை ஊர் முழுக்க தூற்றுகிறது. ஏறத்தாழ அவரது நெருங்கிய நண்பர்களே ஒருவேளை கொலை செய்திருப்பானோ, சைக்கோ பயலோ என சந்தேகப்படுகிறார்கள். ஆனால் லீ மனம் கலங்காமல் அக்காவின் உடலை தேடிக்கொண்டே இருக்கிறார்.

இருபது ஆண்டுகள் கழித்து லீ வேலை செய்யும் மான்யாங் என்ற கிராமத்து காவல்நிலையத்திற்கு வான் என்ற இளம் அதிகாரி லியோடனன்ட் பதவியில் வேலைக்கு வருகிறார். அவரின் அப்பா, அடுத்த போலீஸ் கமிஷனராக வருவார் என பேச்சு இருக்கிறது. வானுக்கு அந்த காவல்நிலையம், அங்குள்ள சக அதிகாரிகள், குறிப்பாக லீ என யாரையும் பிடிக்கவில்லை. அவர் ஏற்கெனவே பெண்கள் காணாமல் போன வழக்குகளை ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார். அதில் அவர் லீ டாங் சிக்கை சீரியல் கொலையாளி என சந்தேகப்படுகிறார்.

லீக்கு ஒட்டுமொத்த காவல்நிலையமே ஆதரவாக இருக்கிறது. ஏனெனில் அவர் சீரியல் கொலைகாரனால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தவர். தனியாக வாழ்கிறார் என்ற பரிதாபம்  அனைவரின் மனதிலும் உள்ளது. சட்டம், நீதி என்பதில் உறுதியாக உள்ள மனிதர் லீ டாங் சிக்.

லீ டாங் சிக்கிற்கு அந்த ஊர் கவுன்சிலர் பெண்மணியின் பிள்ளை ஜியாங் ஜே உற்ற தோழன். அவர் தனது அம்மாவின் அதிகாரம் மூலமாக மூத்த நிர்வாக அதிகாரியாக காவல்துறையில் பணியாற்றுகிறார். லீ டாங் சிக்கிற்கு அவர் பள்ளியில் படித்த நண்பர்கள், காவல்நிலைய நண்பர்கள் என நட்பு வட்டாரம் உண்டு. அவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று முறையேனும் ஒன்றாக  கறிக்கடை ஒன்றுக்கு சென்று சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. இங்குதான் அனைவருமே மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கை பற்றி புகாரின்றி குடித்து கறி தின்று பேசிக்கொண்டிருப்பது.  பணம் இருக்கிறதா இல்லை. வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கிறதா இல்லை. அப்புறம் என்ன இப்போதைக்கு ச்ந்தோஷமாக குடிப்போம் என காவல்துறை தலைவர சுலோகன் சொல்ல விருந்து தொடங்குகிறது.

லீ டாங் சிக்கிற்கு ரத்த சம்பந்தமில்லாத சகோதரன் ஒருவர் உண்டு. அவர் பெயர் கங் மூன் சிக். மூளைவாதம் கொண்டவர் போல பேசுபவர், சூப்பர் மார்க்கெட் ஒன்றை கிராமத்தில் வைத்து நடத்துகிறார். அவருக்கு மியான் ஜே என்ற மகளுண்டு. மனைவி மூன் சிக்கை  விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.

ஒருமுறை டிமென்சியா வந்த முதியவரை தேடிக்கொண்டு சதுப்புநிலப்பகுதிக்கு லீ டாங் சிக், ஹூன், வான் மூவரும் போகிறார்கள். இந்த டிமென்சியா வந்தவரின் பெண் பிள்ளை கூட சீரியல் கொலைகாரனுக்கு பலியானவள்தான். அப்படி காணாமல் போன பெரியவரைத் தேடும்போது மண்ணில் புதைத்த பெண்ணின் உடல் கிடைக்கிறது.

 கையிலுள்ள மோதிரத்தை பார்த்ததும் வான் திடுக்கிடுகிறான். அந்த பெண்ணை உளவாளியாக சீரியல் கொலைகாரனை கண்டறிய அனுப்பியது அவன்தான். லீ டாங் சிக், அவன் அப்படி ஒரு பெண்ணை அனுப்பி வைத்தது தவறு என சொல்லி கோபப்படுகிறார். அதற்கு அவனுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்கிறார். வான் நீதிநெறி உணர்வு கொண்டவன் என்பதால், மனதில் பெருகும் குற்றவுணர்ச்சியால் ஒன்றும் பேச முடிவதில்லை.

லீ டாங் சிக், வான் ஆகிய இருவரும் எதிரெதிரான மனநிலை, குணங்கள் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து குற்றவாளிகளை பிடித்து தண்டிப்பதுதான் டிவி தொடரின் இறுதிப்பகுதி.

ஸ்லோபர்னர் என்று திரைப்படத்தில் ஒரு வகை உண்டு. மெதுவாக படம் வேகமெடுக்கும். மலையாளப் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. பியாண்ட் ஈவில் டிவி தொடரும் அப்படித்தான்.

அரசியல்வாதிகளும், வணிகர்களும் ஒன்றுசேர்ந்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படி உருக்குலைக்கிறார்கள். இதன் விளைவாக, நடைபிணங்களாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதை நன்றாக காட்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறார்கள்.

சில காட்சிகள் உதாரணங்களாக பார்ப்போம்.

லீ டாங் சிங் குற்றவாளி என உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரை ஊர் முழுக்க சகோதரியை கொன்றவன் என பழிபோடும். உச்சமாக அவர் சாப்பிடும் ஹோட்டலில் கூட உரிமையாளரான பாட்டி  அவனை சபிப்பாள். அந்த இடத்தில் மனம் வலியில் துடித்தாலும் விரக்தியான புன்னகையால் அதை மறைத்துக்கொண்டு சாப்பிடும் காட்சி.. சுற்றியிருக்கும் காவல்துறை தலைவர் நாம், வான் என இருவருமே தடுக்க முடியாத சங்கடத்தில் இருப்பார்கள்.

ஆதாரம் இல்லாமல் வாரண்ட் வாங்க முடியாது என்பதைப் பற்றி காவல்நிலையத்தில் பேசுவது..

ஹோட்டலில் உள்ள பாட்டி, லீ டாங் சிக்கை கொலைகாரன் என்று சொல்லி உப்பைத் தலையில் கொட்டி உணவு தராமல் விரட்டும் காட்சி. அதில், உப்பை தலையில் இருந்து எடுத்து வாயில் சுவைத்தபடி கரிக்கிறது என்று சொல்லியபடி லீ டாங் செல்வார். வான் அதைப் பார்த்து அப்படியே திகைத்துவிடுவான். இந்த அவமானத்திலும் லீ எப்படி புன்னகைக்கிறார் என யோசிப்பான்.

லீ டாங் சிக் ஏறத்தாழ வானின் அப்பாதான் கொலைக்கு ஏதோ ஒரு விதமாக காரணம் என யூகித்துவிடுவார். அதைப்பற்றி வானிடம் பேசி, அவனுடைய மனநிலை அறிய முயல்வார். அப்பா என்பதற்காக சட்டத்தை நியாயத்தை புறம் தள்ளுகிறானா இல்லையா என்பதை கவனிப்பார். இறுதியில் தனது அப்பா குற்றவாளி என தெரிந்தபிறகு, வான் லீயின் காலைப்பிடித்தபடி சற்றே குனிந்து அழுதபடி மன்னிப்பு கோரும் காட்சி.

தொடரின் இறுதிப்பகுதியில் சட்டத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து கைது செய்யக்கோரும் லீ டாங் சிக்கின் கையில் விலங்கை போட்டு நெற்றியை அவர் கையின் மேல் வைத்து வான் நெகிழ்ந்து அழும் காட்சி.

லீ டாங் சிக், வான் என இருவருமே சற்று மாறுபட்ட பின்னணியைக் கொண்டவர்கள். லீ வறுமையான பின்னணி கொண்டவர். காவல்நிலையத்திற்கு நடந்துதான் வருவார். ஆனால் வான் பளபளப்பான சொகுசு காரில் வருவார். வானுக்கு ஓசிடி பிரச்னை உண்டு. யாரும் தன்னை தொடக்கூடாது. தூசி, குப்பை,, சேறு ஆகாது. பிறர் பயன்படுத்திய துணி, காபி கோப்பை, ஹோட்டலில் சாப்பிட பயப்படுவார். யாரிடமும் நெருக்கமாக பழக மாட்டார்.

ஆனால் மெல்ல லீ டாங் சிக்கிடம் நெருக்கமாகிவிடுவார். நேரடியாக அவர்களது நட்பை அறிய முடியாவிட்டாலும் மனதிற்குள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொண்டிருப்பார்கள். இருவருமே மனதில் நீதி உணர்வு, குற்ற உணர்ச்சி, நேர்மை, செய்கின்ற செயலின் இயல்பு, பொறுப்புணர்வைக் கொண்டவர்கள்.

இந்த கொரிய தொடரில் சீரியல் கொலைகாரனின் குண இயல்பு, ஏன் கொலை செய்கிறான் என்பதை ஆராயவில்லை. காவல்துறையால் கறைபடிந்த ஊழல் அதிகாரிகளால் கைவிடப்பட்ட வழக்கு ஒன்றை மீண்டும் திறந்து குற்றவாளிகளை எப்படி பிடிக்கிறார்கள் என்பதை நிதானமாக சொல்லியிருக்கிறார்கள்.

தொடரில் லீ டாங் சிக் புன்னகைப்பது, சிரிப்பது என்பதை வெவ்வேறு வகை உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவரின் மனநிலையைக் காட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து இடங்களுமே அருமை. அதிலும் இறுதியாக அவர் புன்னகைப்பது தனது சகோதரி இறந்துவிட்டாள்தான் ஆனாலும் கூட குறைந்தபட்சம் அவளுக்கு நீதியைப் பெற்றுத் தர முடிந்ததே என்று சற்றே சோகம் கலந்தபடி புன்னகைப்பார். வான் அதைப் பார்த்து சற்றே மனநிறைவோடு தனது வேலைக்கு திரும்புவான்.  தொடரின் இறுதிக்காட்சி அதுதான்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்முடிவுகளை எடுத்து அதன்படி செயல்பட்டால் மக்களின் வாழ்க்கை எப்படி நரகமாக மாறும், ஊழல், லஞ்சம், அநீதியை எதிர்கொண்டாலும் அதை தடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் அமைதியாக இருப்பதால் நேரும் விளைவுகள் என பல்வேறு விஷயங்களை பியாண்ட் ஈவில் தொடர் யோசிக்க வைக்கிறது.

 

கோமாளிமேடை டீம்

---------------------

Writers: Kim Su-jin
Nominations: Baeksang Arts Award for Best TV Drama, MORE
First episode date: 19 February 2021 (South Korea)
Cinematography: Jang Jong-kyung; Kwon Byeong-soo
Directed by: Shim Na-yeon
Hangul: 괴물

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்