கொல்லப்பட்டவர்களின் வாயில் மின்ட் மிட்டாய்! - டெ மீ வாட் யூ சீ - கே டிராமா -2020
டெல் மீ வாட்
யூ சா
கொரிய டிராமா
பதினாறு எபிசோடுகள்
ராக்குட்டன்
விக்கி ஆப்
பள்ளிச்சிறுமி
சூ, பள்ளி முடிந்து வெளியே வருகிறாள். அவளைக் கூட்டிப்போக அவளது அம்மா வரவில்லை. சற்று
வசதியான தோழி குடையுடன் அவளை கூட்டிக்கொண்டு போகிறாள். வழியில் வாய் பேச முடியாத சூவின்
அம்மா, குடையுடன் சாலையைக் கடந்து மகளின் பெயரை அழைத்துக்கொண்டே வருகிறாள். சூவுக்கு தனது தோழியிடம் தனது தாய் வாய் பேச முடியாத ஊமை என கூற வெட்கமாக இருக்கிறது. அவள் தன்னை அழைக்கும்
அம்மாவை புறக்கணித்துவிட்டு செல்கிறாள். அவளது அம்மா, சாலையைக்கடக்கும்போது கார் ஒன்று
அவளை மோதித் தூக்கியெறிந்துவிட்டு நிற்காமல் செல்கிறது.
சூ அதிர்ச்சியடைந்து
அம்மாவை நோக்கிப் போகிறாள். அம்மா, அங்கேயே அடிபட்டு இறந்துபோகிறாள். இறக்கும்போதும்
கூட குடையை மகளுக்கு கைகாட்டிவிட்டு மரணிக்கிறாள். மழையிலும் கூட சூ, அம்மாவை மோதிய
காரில் உள்ள இருவரைப் பார்த்துவிடுகிறாள். காரின் எண்ணையும் காவல்துறைக்கு கூறுகிறாள்.
போலீஸ்காரர்கள் அதை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லை. ஏழையின் குரல் என்றைக்கு கச்சேரி
ஏறியிருக்கிறது? அதே கதைதான். ஆனால் சூ, தனது அம்மா இறந்துபோனதற்க்கு தனது செயல்தான்
காரணம் என நினைக்கிறாள். போலீஸ்காரியாகி குற்றவாளியைத் தண்டிக்க நினைக்கிறாள். இது
ஒரு கதை.
சூ உள்ள கிராமத்தில்
ஒரு பெண் கொலையாகி கால்வாயில் கிடக்கிறாள். அவளைப் பார்த்து பயந்த சூ, கொலையான பெண்ணின்
அருகே கால் வழுக்கி விழுந்துவிடுகிறாள். துரதிர்ஷ்டவசமாக தடயங்களை அழித்துவிடுகிறாள்.
இதற்காக அவரை சக அதிகாரிகள், மேலிடம் எல்லாமே திட்டுகிறார்கள். ஆனால் சூவுக்கு பதற்றமாகும்போது
கவனிக்கும் விஷயங்கள் புகைப்படம் எடுத்தது போல பதிந்துவிடும். அதை நினைவில் வைத்து
நகரிலுள்ள மேலிட காவல்துறை அதிகாரி க்வாங்கிற்கு விளக்கம் சொல்கிறார். அவர் சூவை அந்த கொலைவழக்கு சார்ந்து தனது அலுவலகத்திற்கு வேலைக்கு
வர உத்தரவு பெற்றுவிடுகிறார்.
டீம் லீடர்
க்வாங், அவரது குழுவிலுள்ள மூன்று நபர்கள் என நால்வரோடு சூவும் இணைகிறாள். இவர்கள்
அனைவரும் மின்ட் மிட்டாய் சீரியல் கொலைகாரனை தேடுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், டிடெக்டிவ் ஓ ஹியான்
ஜே, புகழ்பெற்ற குற்றவியல் ஆய்வாளராக உள்ளார். மின்ட் சீரியல் கொலைகாரனை தேடும்போது
அவரது இசைக்கலைஞரான காதலியை(ஹான் இசு) பறிகொடுக்கிறார்.
சீரியல் கொலைகாரன் அவளை காரில் வைத்து விபத்து ஏற்படுத்தி
கொல்கிறான். அந்த விபத்து தொடங்கி டிடெக்டிவ் ஓ ஹியான் ஜே தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு
தனியாக ஒதுங்கிவிடுகிறார். விபத்தில் கண்பார்வை போய், கால்களும் செயல்படாத காரணத்தால்
சக்கர நாற்காலியில் முடங்கிப் போகிறார்.
அவரது தோழி
டீம் லீடர் க்வாங் மூலம், டிடெக்டிவ் ஓ மின்ட் கொலைகாரனை தேடிக்கொண்டே இருக்கிறார்.
கொலை பற்றிய செய்திகளை காவல்துறையினரின் ரேடியோவை இடைமறித்து கேட்கிறார். அவருக்கு
தேவையானது குற்றவாளியைப் பிடித்து தூக்கு தண்டனை விதிப்பதெல்லாம் கிடையாது.
தனது காதலியை சீரியல் கொலைகாரன் கொன்றது ஏன், கொல்லச்சொன்னது
யார்? என்ற கேள்விகள் மட்டும்தான் ஓவுக்கு
மனதில் தோன்றுகிறது. அதற்கான பதில் தேடி அலைகிறான். அப்போதுதான் சூ கிடைக்கிறாள்.
அவளை புலனாய்வுக்கு பயன்படுத்த டீம் லீடரும், ஓவும் முடிவெடுக்கிறார்கள். இது ஒரு கதை.
போலீஸ் சூப்பரிடெண்ட்
சோய், துணைத்தலைவர் ஆகிய இருவரும் சேர்ந்து மின்ட் சீரியல் கொலைகாரனை கண்டுபிடித்ததாக
போலியாக ஒரு ஜோடனை செய்கிறார்கள். இதற்காக அவர்கள் கேங்ஸ்டர் ஒருவரின் உதவியை நாடுகிறார்கள்.
அவர் மூலம் போலியாக ஒரு பிணத்தைப் பெற்று அதை வைத்து சீரியல் கொலைகாரன் இறந்துவிட்டான்
என நாடகமாடுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மின்ட் மிட்டாய் கொலைகாரன்
தலைகாட்ட ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு ரத்த அழுத்தம் உயர்கிறது.
நாம் மாட்டிக்கொள்வோமோ என பயப்படத் தொடங்குகிறார்கள்.
இதனால் சூப்பரிடெண்ட் சோய், தனது அதிகாரத்தைப் பயன்படுத்த டீம் லீடர் க்வாங்கின் குழு
குற்றவாளியைப் பிடிக்கும் முன்னர் தான் குற்றவாளியை பிடித்து ஹீரோவாகிட நினைக்கிறார்.
ஆனால், அவருக்கு உளவறிந்து சொல்லும் ஆட்கள் க்வாங்கின் டீமில் இருந்தாலும் கூட பெரிதாக
பயனில்லாமல் போகிறது.
அமைப்பைக்
காப்பாற்றவேண்டும் என பலமுறை கூறுபவர், உண்மையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே கடைசி
வரையில் முயல்கிறார். கொலைக்குற்றவாளியை அவரால் நெருங்க கூட முடிவதில்லை.
டிடெக்டிவ்
ஓ, நுட்பமாக திட்டம் போட்டு சூவின் உதவியால் மின்ட் கொலைகாரனின் ஆதரவு கூட்டத்தை பெரும்பகுதி
ஒழித்துக் கட்டிவிடுகிறார். ஆனால், ஒரு அமைப்பாக காவல்துறையினர் இருந்தும் துணிச்சலாக
செயல்பட முடியாதபடி அழுகிப்போன உள் அரசியல் காலைப்பிடித்து இழுக்கிறது. இதன் விளைவாக,
மக்கள் நிறையப் பேர் இறக்கிறார்கள். காவல்துறையினர் பிணங்களைப் பொறுக்கிப் போக தாமதமாக
வருகின்றனர்.
தொடரில் டிடெக்டிவ்
ஓ சொல்லும் வசனங்கள் தத்துவம் சார்ந்தவையாக ஒலிக்கின்றன.
‘’இங்கே பார்
சூ, நாம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறோம். அதுதான் முக்கியம். குற்றம் நடக்குறதுக்கு
முன்னாடியே கண்டுபிடித்து தடுக்க நாம் கடவுள் கிடையாது. குற்றம் செய்யறவங்களை அவர்கள்
அதை நிறுத்தற வரை துரத்திப் பிடித்து தடுப்பதுதான் நம் வேலை’’
‘’நா உனக்கு
உதவறது பச்சாதாபம் காரணமாகத்தான். உன்மீதும், என்மீதும் இருக்குற பச்சாதாபம் காரணமாத்தான்’’
‘’குற்றவாளிகளைப் பிடிச்சு சிறையில் அடைக்கிறது குறைந்தபட்சம்
அநியாயமா இறந்து போனவங்களுக்கு மனசளவில் ஒரு நிம்மதியைக் கொடுக்கும்னு நினைக்கிறேன்.
அதுதான் இந்த வேலையில கிடைக்கிற நிம்மதி’’
தொடரில் முக்கியமான பாத்திரங்கள் டீம்
லீடர் க்வாங், டிடெக்டிவ் ஓ, டிடெக்டிவ் சூ, போலீஸ் சூப்பரிடெண்ட் சோய் .
மேலே சொன்ன
பாத்திரங்கள் அனைவருக்கும் இறந்த காலத்தில் செய்ய முடியாத சில செயல்கள் உள்ளன. வலி
இருக்கிறது. அதை தீர்த்துக்கொள்ளவே நிகழ்காலத்தைப் பயன்படுத்துகிறார்கள். கடந்த காலத்தில்
செய்த தவறுகளை நினைத்துப் பார்க்கிறார்கள். குற்ற உணர்ச்சியால் மருகுகிறார்கள். கடந்தகால
வலியை நினைத்துப் பார்த்து சில நிமிடங்கள் செயலற்றுப் போகிறார்கள். பெருகும் வலியில்
தானுள்ள சூழ்நிலையைக்கூட மறந்துபோகிறார்கள்.
சீரியல் கொலைகாரன்
கிம் யோ ஹான் சற்று வேறுபட்டவன். ஒருவரை பிடித்தால் உடனே கொல்வதில்லை. அவர்களை சித்திரவதை
செய்து அவர்களின் மனதில் உள்ள உறவுகள் மீதான நம்பிக்கையை உடைக்கிறான். அடுத்து, அவர்கள்
வாழ்க்கையில் உள்ள ஒரு நபரை கொல்லவேண்டும் என்றால் அந்த நபரின் பெயரைச் சொல்லக்கூறி
அடித்து உதைக்கிறான். இரும்புக் கம்பியால் கழுத்தை நெரிக்கிறான். அவர்களும், யார் மீது
பொறாமை கொண்டுள்ளார்களோ அவர்களின் பெயரைக் கூறுகிறார்கள். அதை பதிவு செய்து வைத்துக்கொள்பவன்,
அவர்கள் கூறிய பெயரிலுள்ள நபரைக் கொல்கிறான்.அப்போதைக்கு பிடித்து வைத்திருப்பவர்களை
உயிரோடு விட்டுவிடுகிறான்.
இது ஒரு சுவாரசியமான
விளையாட்டு போல. ஒருவர் தான் வாழ யாரையும் காவு கொடுப்பார். சாதாரணமாக ஒரு உயிரைக்
கொல்வது பாவம் என்று சொன்னாலும் நெருக்கடி அதிகமானால், எவரையும் பலி கொடுத்து தன்னைக்
காத்துக்கொள்வது மனிதர்களது சுபாவம் அல்லவா? அதை தொடரில் நன்றாக காட்டியிருக்கிறார்கள்.
டிடெக்டிவ் ஓ, கொலைகாரர்களோடு போடும் சண்டைக்காட்சிகள் நன்றாக
எடுக்கப்பட்டுள்ளன. டிவி தொடர் என்றாலும் அதில் வரும் சண்டைகளுக்காக மிகவும் மெனக்கெட்டு
உழைத்திருக்கிறார்கள். வில்லன் கிம் யோ ஹான் இறுதிவரை எளிதில் வீழ்த்த முடியாதவனாக
இருந்து இறுதியில் தான் உருவாக்கிய விளையாட்டில்
அவரே பலியாகிறார். கடந்த கால உண்மை தெரிந்தபிறகு டிடெக்டிவ் ஓ, க்வாங்கோடு தொடர்பு
கொள்வதில்லை. காவல்துறை ஆலோசகர் வேலையைக் கைவிட்டு காணாமல் போகிறார். அடுத்த சீசன்
தொடருக்கான லீடையும் கொடுத்திருக்கிறார்கள்.
திகட்ட திகட்ட
வன்முறை, திகில் நிறைந்த கொரியத் தொடரைப் பார்க்க நினைக்கிறீர்களா? டெல் மீ வாட் யூ
சீ உங்களுக்கானதுதான். வன்முறை, ரத்தம், சித்திரவதை, வலி, வேதனை என்பது காட்சி ரீதியாகவும்
அதிகம் என்பதால் மனதில் துணிவிருப்பவர்கள் மட்டுமே தொடரைப் பார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோமாளிமேடை
டீம்
Genres: Korean drama, Thriller
First episode date: 1 February 2020
Composer: Gaemi
Literal meaning: Say What You Saw
Original language: Korean
கருத்துகள்
கருத்துரையிடுக