களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!
அமெரிக்காவில்
அரிசோனா தொடங்கி வியோமிங் வரையில ‘டையர் வோட்’ என்ற ஆக்கிரமிப்பு தாவரம் பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள்
நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால்
அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.
இதைக் கட்டுப்படுத்த
அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக
கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற
பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது.
ஏறத்தாழ
ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது.
மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத்
தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி
இன்றுவரை நடைபெற்று வருகிறது.
மனிதர்களால்
கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி
சாலையில் உள்ள நரிக்குட்டிகள், வெடிமருந்து,
பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களைத்தாவரங்கள் என கூறிக்கொண்டே செல்லலாம்.
வாசனைகளை
இனம்பிரித்து அறிவதில் சிறந்தவர் யார் என ஆய்வாளர்கள் சோதித்தனர். அதில், பதினைந்து
வகையான வாசனைகள் இரு தரப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாசனைகள் குறைந்த அளவு
கொண்டவை. மனிதர்கள் ஐந்து வாசனைகளை அடையாளம் கண்டனர். எனவே, நாய்களே இத்தேர்வில் வென்றன.
பார்வைத்திறன் குறைவாக இருந்தாலும் வாசனை, காது கேட்கும் திறன் ஆகியவற்றை வைத்து திறம்பட
பணியாற்றுவதில் நாய்கள் மனிதர்களை எளிதாக முந்துகின்றன. முன்னிலை பெறுகின்றன.
நாய்களை
எப்படி புரிந்துகொள்வது? மொழி தெரியாத தேசத்தில் நாம் சென்று இறங்கி அங்குள்ளவர்களிடம்
எப்படி வழி கேட்போம்? மொழி பயன்படாதபோது உடலை
மொழியாக பயன்படுத்த வேண்டியதுதான். அதே டெக்னிக்தான். நாய்களின் மனநிலையை அறிய கண்,
காது. வாய், வால், உடல் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். அப்படி அல்லாதபோது, நட்பாகிறேன்
என நாயைத் தழுவ நினைத்தால் கடிபட்டு மருத்துவமனையில் சேரும் நிலை உருவாகும்.
தரையில்
சமநிலையாக நின்று காதை கூர்மையாக வைத்துக்கொண்டு உடலை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ
தள்ளாமல் நிற்கும் நாய் மனதளவில் சற்று பதற்றமின்றி அமைதியாக உள்ளது என கூறலாம். தனது
உரிமையாளரின் கண்களை நேரடியாக சில நொடிகள் மட்டுமே பார்த்தாலும் உறுதியாக இருக்கும்.
குறிப்பிட்ட திசையில் பார்ப்பது என குறிப்பிடமுடியாது.
பயம்
உடல் சமதளத்திற்கு
நெருக்கமாக இருக்கும். நாய் முடிந்தளவு தனது உடலை சிறியதாக காட்ட முயலும். வால், கால்களுக்கு
நடுவில் இருக்கும். காதுகள் மடிந்திருக்கும். வாய் இறுக்கமாக மூடியிருக்கும். முகத்தில்
பயம் அப்பட்டமாக தெரியும். கண்களில் வெள்ளை நிறப்பகுதி வெளியே தெரியும். இதெல்லாம்
நாய் பயத்தில் இருக்கிறது என வெளிக்காட்டும் அறிகுறிகள்.
விளையாட்டு
வால் இருபுறமும்
ஆடும். முகம் அமைதியாக இருக்கும். முன் கால்களை கீழே தணித்து பிறகு நிற்கும் நிலைக்கும்
மாற்றும். இந்த வகையில பிற நாய்களோடு மனிதர்களோடு விளையாட தயாராகிறது. வாய் திறந்து
சிரிக்கும் நிலையில் இருக்கும். முன்கால்களை வணங்குவது போல தாழ்த்தி வேகமாக ஒடினால்
விளையாட ரெடி என்று அர்த்தம்.
கோபம்
கோபம் கொள்ளும்
நிலையில் கண்கள் நிலைமாறாமல் எதிரிலுள்ள காட்சியைப் பார்க்கும். காதும், வாலும் நிமிர்ந்து
நிற்கும். உடல் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டு நிற்கும். வாய் திறந்து கோரைப்பற்கள் வெளியே
தெரியும். குரைப்பொலியும் சற்று கடுமையானதாக இருக்கும். தாக்கும் நிலையில் முன் கால்களை
சற்று தாழ்த்தும்.
பதற்றம்
அறிமுகம்
இல்லாத நபர்களைக் கண்டால் நாய் முகத்தை சற்று
தாழ்த்தி சந்தேகமாக வாலை மெதுவாக ஆட்டும். இதை நட்பு என நினைத்து நாயை தடவிக்கொடுப்பது
ஆபத்தில் முடியலாம். ஜாக்கிரதை. நாய் நட்பான சைகை எதையும் உடல் வழியாக காட்டாதபோது
அதை நெருங்க கூடாது. பதற்றமான நிலையில் நாய் பிறரின் கண்களைப் பார்க்காது. பதற்றமான
சூழலில், நாய் தனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து உதவி கோருவது போல முன்பகுதி உடல்
சற்று தாழ்த்தும்.
பீதியான
நிலை
நாய் காப்பகங்களில்
உள்ள நாய்கள் இந்த நிலையில் இருக்கும். உணவு அருந்தாது. பிற நாய்களுடன் தொடர்புகொள்ளாது.
சுவரருகில் பாதி கண்கள் மூடிய நிலையில் படுத்து கிடக்கும். காது கீழே தொங்கும். வாய்
மூடியிருக்கும். சிலசமயங்களில், பயத்தில் சிறுநீர் கழிப்பதும் நடக்கிறது.
நம்பிக்கை
கண்கள்
ஒளிரும். காதுகள் நேராக நிற்கும். முன்னங்கால்களை தரையில் வைத்து கட்டளைக்கு காத்திருக்குமாறு
உட்கார்ந்திருக்கும். வாய் சற்று திறந்திருக்கும். கண்களில் அதன் தன்னம்பிக்கையைப்
பார்க்கலாம்.
மகிழ்ச்சி
தவளை போன்ற
நிலையில் உட்காரும். காதுகள் விரிந்திருக்கும். வாய் பற்கள் வெளியே தெரியுமளவு திறந்திருக்கும்.
வால் வட்ட வடிவில் சுற்றும்.
பாப்புலர் சயின்ஸ் இதழ்
படம்
பிக்சாபே
கருத்துகள்
கருத்துரையிடுக