விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

 





தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்





விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு


சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம்.

கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள்.

சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.

 ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது சீன அரசு.

உள்ளூர் அதிகாரிகள் நிங்போவை விண்வெளி நகரம் என்றுதான் அழைக்கிறார்கள். இதற்கு சில கி.மீ தொலைவில்தான் பெருமளவிலான வணிக தொழில்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு , ஜீலி என்ற நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், 2022ஆம் ஆண்டு ஷிசாங் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, தனது  9 ராக்கெட்டுகளை ஏவியது. தானியங்கி வாகனங்களுக்கான வழிகாட்டுதலை வழங்குவதற்கான செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக புவியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

சீனா, மெல்ல விண்வெளித்துறையில் வளர்ந்துவருகிறது என கூறலாம். அதேசமயம், அமெரிக்காவைப் போல தனியார் நிறுவனங்களை சீனா விண்வெளித்துறையில் அனுமதித்துவிடவில்லை. பெரும்பாலும் இங்கு உள்ள நிறுவனங்கள் பலவும் அரசின் துணை நிறுவனங்கள்தான். இதனால் துறைக்கு அதிகளவு தனியார் நிறுவனங்களின் நிதி கிடைப்பதில்லை.சீனாவில், விண்வெளி துறை சார்ந்து இயங்கும் நூறு தனியார் நிறுவனங்கள் உள்ளன.

‘சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்’ என்ற அரசு நிறுவனம் விண்வெளி துறையில் பெரிய நிறுவனமாக உள்ளது. இதன் கீழ்தான் அதன் உதவி பெறும் பல்வேறு சகோதர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெளிப்பார்வைக்கு தனியார் நிறுவனங்கள் போல இருந்தாலும் அரசுடன் நெருக்கமாக உள்ளன.

சீனாவில் உள்ள ஐ ஸ்பேஸ் என்ற நிறுவனம் 2019ஆம் ஆண்டு ஹைப்பர் போலா 1 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது.இது மிகவும் விதிவிலக்கான செய்தி. ஏனெனில் ஐ ஸ்பேஸ் போல நிறைய நிறுவனங்கள் வெற்றி பெற முடியவில்லை. சீன அரசு தனியார்  விண்வெளி நிறுவனங்களுக்கு தனது தொழில்நுட்பத்தை முழுமையாக பகிர்ந்து கொடுக்கவில்லை. எனவே, அங்கு தனியார் துறையின் வளர்ச்சி என்பது பின்தங்கியதாகவே உள்ளது.

அதேசமயம் சீனாவில் பல்கலைக்கழகங்கள், அரசு அமைப்புகள் ஆகியவை புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் இயல்பு, அமெரிக்காவை விட அதிகமாக உள்ளது. அரசு தனது புதிய தொழில்நுட்பங்களை தனியார் அமைப்புகளுடன் பகிர்ந்துகொண்டு விண்வெளி தொடர்பான திட்டங்களை செய்தால் கிடைக்கும் மாற்றம் கூடுதலாக இருக்கும்.

‘பெய்ஜிங் ஏரோநாட்டிகல் இன்ஸ்டிடியூட்’டில் கல்வி கற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை  23 ஆயிரமாக உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்போது சீனாவில் அதிகளவு பொறியாளர்கள்,அ றிவியலாளர்கள் இருப்பார்கள். ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் பொறியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சீன அரசு, தனது பெய்டு ஜிபிஎஸ் செயற்கைக்கோளை மேம்படுத்தும்போது உள்நாட்டு விவசாயிகள், நிதி பரிமாற்ற நிறுவனங்கள் ஆகியவை அதிக பயன்களைப் பெறும். கடலில் சரக்குகளை கையாளும் நிறுவனங்களுக்கும் எளிதாக வழிகளை அறிந்து பயணிக்க ஏதுவாகும். ராணுவ அடிப்படையில் மக்கள் ராணுவப்படையின் நிலைகளை அறியலாம். கூடுதலாக பிற நாட்டு ராணுவ நிலைகளை அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம்.

 அடுத்த பத்தாண்டுகளில் சீன அரசு ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் கூட்டணியில் உள்ள நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவ முடியும். கூட்டணி நாடுகளில் பலவும் சொந்தமாக ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை தயாரித்து ஏவ முடியாத சூழலில் உள்ளன. இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவை விலக்கி சீனா எளிதாக பிறநாடுகளுடன் வணிக உறவை, நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

தனது எக்ஸ்ரே மாடுலேஷன் தொலைநோக்கி , எக்ஸ்ரே அஸ்ட்ரானமி செயற்கைக்கோள்  மூலம் விண்வெளியில் உள்ள கருந்துளைகளை ஆராய்ந்து காந்தப்புலத்தை அடையாளம் காண, சீன அறிவியலாளர்கள் முயன்று வருகிறார்கள்.  விண்வெளியில் உள்ள கோள்களை அகழாய்வு செய்து கனிமங்களைப் பெற்று பூமியில் எதிர்காலத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இயங்கி வரும் ஒரிஜின் ஸ்பேஸ் என்ற நிறுவனம், விண்வெளியில் உள்ள செயல்படாத செயற்கைக்கோள் குப்பைகளை அழிக்கும் ரோபோட்டின் மாதிரியை தயாரித்துள்ளது. இதன் முக்கியமான நோக்கம், கோள்களை அகழாய்வு செய்து கனிமங்களை தோண்டியெடுப்பதுதான். எதிர்காலத்தில் சீன அரசு, வியாழன், சனி ஆகிய கோள்களுக்கும் விண்கலன்களை அனுப்ப திட்டமிட்டுவருகிறது.

2021ஆம் ஆண்டு சீனாவும், ரஷ்யாவும் நிலவில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தன. உலக லூனார் ஆராய்ச்சி நிலையம் என்று பெயரிடப்பட்ட இந்த நிலையம், 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டம், விண்வெளி வீரர்கள் மூன்று முறை நிலவுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது. சீன அரசு, ஏற்கெனவே தனது ஆராய்ச்சி மூலம் தெற்குபுலத்தில் பனிக்கட்டிகள் இருப்பதை வைத்து நீராதாரத்தை கண்டுபிடித்துள்ளது.

2019ஆம் ஆண்டு சீனா, நிலவுக்குச் சென்று தனது கொடியை அங்கு பதித்துவிட்டு வந்தது. இப்போது அங்கு தனது ராணுவத்தளத்தை அமைப்பதற்கான செயல்பாட்டைத் தொடங்கிவிட்டது. 2028ஆம் ஆண்டுக்குள் அங்கு தனது நிரந்தர தளம் ஒன்றை அமைத்துவிட முயன்று வருகிறது. ரஷ்யாவும் சீனாவும் அமைக்கும் ஆராய்ச்சி நிலையம் 2035இல் செயல்படத் தொடங்கும் என கருதப்படுகிறது.

நிலவில் அமெரிக்காவும் தனது கொடியை 1969 ஆம் ஆண்டு ஊன்றியது. ஒருவகையில் இப்படி செய்வது நாட்டின் வலிமையை பிறருக்கு கூறும் அடையாளமாக உள்ளது. சீனா, நிலவில் தனது தளத்தை உருவாக்கினால், கனிமங்களை எளிதாக அகழ்ந்து எடுக்க முடியும். தனக்கு தேவையான நிலப்பரப்புகளை முன்னதாகவே அடையாளம் கண்டு கையகப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ராணுவ ரீதியாகவும் தொழில்துறை ரீதியாகவும் நிலவை தளமாக பயன்படுத்துவதில் நிறைய லாபங்கள் உள்ளன. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்னும் வகையில் சீனா அனைத்து விண்வெளி திட்டங்களிலும் முன்னே சென்றுகொண்டு இருக்கிறது.

பலரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், சீனா தனக்கென தனியாக தியான்காங் 3 என்ற ஆய்வு நிலையத்தைக் கொண்டுள்ளது பற்றி பலரும் பேசுவதில்லை. ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் கூட்டுறவாக செயல்பட்டு உருவாக்கியதுதான் சர்வதேச விண்வெளி நிலையம். இவர்களைக் கடந்து சீனா , தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கியது புதுமைதானே?

சீனா உருவாக்கிய தியான்காங் 3 ஆய்வு நிலையம், 2037ஆம் ஆண்டு வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல், இரண்டாம் நிலைகள் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. முதல் இரண்டு நிலைகள் மூன்றாவது நிலைக்கான சோதனை மாதிரிகள்தான். மூன்றாவது நிலை மாதிரி சற்று கூடுதலான எடையும், அளவில் பெரியதாக உருவானது. சீனாவோடு ஒப்பிடும்போது, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பதினாறு நிலை மாதிரிகளை  உருவாக்கி இயங்கி வருகிறது.

சீன விண்வெளி வீரர்கள் மருந்துகள், உயிரியல் தொழில்நுட்பம், குறைந்த புவியீர்ப்பு விசை, நீர்ம இயற்பியல், 3டி பிரின்டிங், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். எதிர்காலத்தில் தியான்காங் ஆராய்ச்சி நிலையத்தை பிற நாடுகள் பயன்படுத்தும் சூழல் வரலாம். சீனாவும், அமெரிக்காவும் தற்போதைய நிலையில் அறிவியல் மற்றும பொறியியல் துறையில் தனியாக செயல்பட்டு வருகிறார்கள். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பனிப்போருக்கு பிறகு, விண்வெளித்துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்பட்டனர். இந்த வகையில் மீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்கள் செல்வது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவை வளர்க்கும் வாய்ப்பாகவும் அமையலாம். இதெல்லாம், பூமியில் இரு நாடுகளுக்குஇடையிலான உறவு எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்துத்தான் அமையும்.

 

 

 டிம் மார்ஷல்

வயர்ட் இதழ்

ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.


கருத்துகள்