நாயின் குண இயல்புகள்!

 







ஒரு விலங்கு இருக்கிறது என்றால் அதன் அடிப்படையான பண்பை மாற்ற முடியாது எலி வளை தோண்டுவதையோ, பாம்பு எலியை பிடித்து உண்ண வேட்டைக்கு செல்வதையோ, தவளை, நிலம் நீர் என இடம் மாறி செல்வதையோ தடுக்க முடியாது. இதைப்போலவே நாய் வாசனைகளை முகர்ந்து பார்ப்பது, புதிய இடங்களை அடையாளம் அறிவதில் ஆர்வம் காட்டுவது  ஆகியவற்றை எப்போதும் செய்துகொண்டே இருக்கும்.

ஆனால், இன்று தனது நாய் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டுமென நாயை கட்டுப்படுத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துவிட்டனர். இதனால், நாய் தனது சுதந்திரமும் இயல்பும் பறிபோனதால் சாப்பிடாமல் மனச்சோர்வுக்கு உள்ளாகும். மெல்ல உரிமையாளரின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும். அதன் அடிப்படை குண இயல்புகளே மாறும்.  

எனவே, நாயை அதன் இயல்புக்கு மோப்பம் பிடிக்கவோ தரையை பிறாண்டவோ அனுமதிக்கலாம். குழி தோண்டுவதை வீட்டில் தோட்டம் இருந்தால் செய்யவிடலாம். பிறரின் இடத்தில் செய்தால் நிலைமை களேபரமாகும். பொது பூங்காக்களில் நாயை சற்று சுதந்திரமாக இருக்குமாறு விடலாம். கழுத்தில் காலர் மாட்டில் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை. பிறரை கடிக்கும் குணம் கொண்ட நாய்கள் என்றால் அதை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வது சங்கடமான சூழலை ஏற்படுத்தும். தனியாக நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லலாம்.

நாய்க்கு வெள்ளித்தட்டில் பால் சோறை பிசைந்து வைத்தாலும், மனிதர்கள் தின்ற மிச்ச உணவுகளை அதுவே தேடித் தின்ன விரும்பினால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் விருப்பத்திற்கே விட்டுவிடவேண்டியதுதான். ஆனால், இந்த உணவுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நாயுடன் உரிமையாளர் நேரத்தை செலவிட வேண்டும்.சரியான நேரத்திற்கு வீட்டில் உணவு உண்ணும்படி பழக்கலாம்.  உணவு சார்ந்த அக்கறையை செயல்பாட்டில் கொண்டு வர உணவு புதிர் விளையாட்டை விளையாடலாம்.

நாய் இனங்களைப் பொறுத்து விளையாடும் விளையாட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ஒரேவிதமாக விளையாடும் விளையாட்டு அனைத்து நாய்களுக்கும் பொருந்தாது. சில நாய்களுக்கு அதிகளவு உடல் உழைப்பு கொண்ட விளையாட்டுகள் தேவை.

நாயின் உடல்மொழி தகவல்தொடர்புக்கு ஒரு கருவி. அதேசமயம். அவசர உதவிக்கு அதன் குரலே முக்கியமானது. கண்ணால் பார்க்காமலேயே அதன் குரலைக் கேட்டு அதன் மனநிலையை அறிய முடியும். ஆய்வாளர்கள் சற்று  விரிவாக யோசிப்பார்கள். நாயை வளர்ப்பவருக்கு அதன் குரல் மாறுபாடு, என்ன பிரச்னை என புரிந்துகொள்ள உதவுகிறது.

தனிமை

நாயை தனியாக சங்கிலியில் கட்டிப்போட்டு, ஜீ திரையில் கொரிய டிராமாக்களை பார்க்கும் சமூகம் உருவாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நாயின் குரல் உச்சபட்ச ஒலி அளவை எட்டும். என்னை தனியாக விட்டுவிட்டாயே என குழந்தை அழுவது போல நாய் எழுப்பும் ஓலம் இருக்கும். பெரும்பாலும் நாயின் ஓலம் நிற்க உரிமையாளர் அதன் கண்ணில் படவேண்டும் அல்லது அதனை கட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும். பொதுவாக நாயை அடைத்து அல்லது கட்டி வைப்பது அதன் குணத்தை ஆக்ரோஷமாக்கும். நாட்டு நாய்கள் சங்கிலியில் கட்டுவதை கடுமையாக ஒலமிட்டு எதிர்க்கின்றன. மனிதர்களின் அண்மை நேரம் குறைந்தால் நாய், பதற்றம் கொள்ளும்.

நன்றி 

பாப்புலர் சயின்ஸ் இதழ் 

படம் - பின்டிரெஸ்ட்

வாரம்தோறும் வியாழனில் நாயின் உளவியல் பற்றிய கட்டுரையை வாசிக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரியை கிளிக் செய்யுங்கள். 

anbarasushanmugam.substack.com



கருத்துகள்