தொழிற்சாலை வேலை என்பது மத்தியதர வர்க்க மக்களைக் காப்பாற்றாது!

 






தொழிற்சாலை வேலை எனும் மாயத்திரை


தொழிற்சாலையில் வேலை எனும் மூடநம்பிக்கை

தொழிற்சாலையில் வேலை என்பது உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படுகிறது. உண்மையில் இன்று தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்ற குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். பேசுவதுதான் முக்கியம். பேசுவதை செயல்படுத்தினால்தானே பிரச்னை என அரசியல் தலைவர்கள் நினைக்கலாம். அப்படித்தான உலகம் முழுக்க நடப்பு இருக்கிறது.

‘’தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்போது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அடிமை முறை ஆகிய சமூக தீமைகள் ஒழியும்’’ என ஃபெர்னான்டோ கலியானி என்ற சிந்தனையாளர் கூறினார். அவர் இந்தக் கருத்தைக் கூறி 250 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் இதே கருத்தில் கடந்த காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். சிந்தனையாளர் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. ஆனால், அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது.

காலநிலை மாற்றம், மத்தியவர்க்கத்தின் வேலை, பொருளாதார வளர்ச்சி சுணக்கம், புவியியல் ரீதியாக அரசியல் நெருக்கடி என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதை அரசியல் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். அமெரிக்க அதிபரான ஜோ பைடன், ‘’திரும்ப நாம் உற்பத்தித் துறையில் முதன்மை நாடாக  வரமுடியாது என எழுதி வைத்திருக்கிறதா?’’ என்று பேசினார். அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமான 1 டிரில்லியன் டாலர்களை உற்பத்தி துறையில் முதலீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா இப்படி தொழிற்சாலை முதலீடுகளுக்கு முன்வருவதற்கு ஆசியநாடுகளின் அழுத்தம் முக்கியமான காரணம். மேக் இன் இந்தியா, மேட் இன் சீனா என இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உற்பத்தி திட்டங்களை அறிவித்துவிட்டு இயங்கிவருகின்றன. இதில், சீனா தனது லட்சியத்தில் சிறப்பாக இயங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் தனது பொருளாதாரத்தை 25 சதவீதம் உயர்த்திவிட இந்தியா நினைக்கிறது. இந்த நாடுகளைப் பின்பற்றி இந்தோனேசியா, ஜிம்பாவே ஆகிய நாடுகளும் இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டு வணிக நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகின்றன.

மேற்குலகில் பொருளாதார வளர்ச்சி என்பது 1997இல் 19 சதவீதமாக இருந்து நடப்பு ஆண்டில் 16 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தொழிற்சாலை உற்பத்தி என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் பிடிக்க உதவியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த பங்களிப்பு குறைந்து வருகிறது.

தொழிற்சாலைகளை மேற்கு நாடுகளின் தலைவர்கள் உயர்த்திப் பிடிக்க என்ன காரணம்?  மத்தியதர வர்க்கத்திற்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதார வளர்ச்சி, உள்ளூர் ரீதியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லி தேர்தலில் வெற்றி பெற கிடைக்கும் வாய்ப்பு, உலக நாடுகளுக்கு இடையில் வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் பொருட்களை உள்நாட்டில் தயாரிப்பது சிறந்தது. குறிப்பாக அமெரிக்காவிற்கு, சீனாவுடன் பொருளாதார போர் நடந்து வருவதால் உள்நாட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்கி நடத்துவது அதை வலிமைப்படுத்தும்.

உறுதியான நிச்சய வேலைவாய்ப்பு என்பது தொழிற்சாலையில் கிடைக்கும் என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உண்மையாக இருந்த கூற்று. ஆனால் இன்று பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறாத ஒருவர் கூட படித்தவரை விட நல்ல சம்பளத்தைப் பெற முடிகிறது. தொழிற்சாலை பணியாளரை விட நன்றாக வாழ முடிகிறது.

சேவைத்துறையில் கிடைக்கும் வேலைகள், வேலைநேரம், அதில் கிடைக்கும் சலுகைகள் தொழிற்சாலைகளில் கிடைக்கும் வேலைகளை விட சிறப்பானவையாக உள்ளன. அல்காரிதம் எழுதுபவர்கள், காபி கடை நடத்துபவர்கள் இன்று தொழிற்சாலை பணியாளர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். செழிப்பாக வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் தொழிற்சாலை பணி என்பது ஊழியர்களுக்கு நிறைய பயன்களை வழங்கியது உண்மைதான். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

அரசு இனி வரும் காலங்களில் தொழிற்சாலைகளுக்கு எந்தளவு மானியம் அளித்து உதவினாலும் கூட அதன் மூலம் கிடைக்கும் பணிவாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கும். ஏனெனில் ஒரு தொழிற்சாலையை பணியாளரே இல்லாமல் ரிமோட் முறையில் தானியங்கு முறையில் நடத்த முடியும் சூழல் உருவாகிவிட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா முழுக்கவே தொழிற்சாலைகளில் தானியங்கு எந்திரங்கள் வந்துவிட்டன. ஜெர்மனி நாட்டின் கோலோக்னே பகுதியில்  ஃபோர்ட் கார் நிறுவனத்தின் மின்கார் தொழிற்சாலை  இயங்கி வருகிறது. இங்கு கார்களின் பகுதிகளுக்கு வண்ணப்பூச்சு தானியங்கு முறையில் கணினி கண்காணிப்புடன் நடைபெறுகிறது. இங்கு பணியாளர்களின் அவசியமே இல்லை. உற்பத்தித்துறை, சேவைத்துறை என இரண்டையும் இணைக்கும் பல்வேறு எந்திரங்களை கண்காணிக்கும் பணியை போஸ்ச் என்ற நிறுவனத்தின் கருவிகள் செய்கின்றன.  எனவே, எதிர்காலத்திலும் பெரிய வேலைவாய்ப்புகள் இதில் உருவாகாது.

சீனா, கடந்த ஜூலை 3 அன்று காலியம், ஜெர்மானியம் என்ற செமிகண்டக்டர் தயாரிப்புக்கு உதவும் இரண்டு கனிமங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துவிட்டது. எனவே, மேற்கு நாடுகள் இதை வேறு நாடுகளிடம் அல்லது தானாக உற்பத்தி செய்துகொள்ளவேண்டியதுதான். இந்த கனிமங்கள் இல்லையென்றால்  கார்களின் உற்பத்தி தடுமாறத் தொடங்கிவிடும்.

2010ஆம் ஆண்டு, இதே நிலை ஜப்பானுக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த நாடு இதை கடந்துவந்துவிட்டது. உள்நாட்டில் தயாரித்து அதை கனிமங்களை வெளிநாடுகளுக்கு விற்காமல் இருப்பது என்பது நீண்டகால நோக்கில் நல்ல விளைவை ஏற்படுத்தாது. உலகம் முழுக்கவே இன்று ஒரே சந்தையாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் உள்நாட்டு வணிகம் என சுருங்குவது ஒரு நாட்டிற்கு நல்லது அல்ல.

தி எகனாமிஸ்ட் ஜூலை 2023

படம் - பிக்சாபே

கருத்துகள்