பெருநிறுவனங்களின் அதீத வணிகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் உலக நாடுகள்!
பெருநிறுவனங்களின் வணிக வெறி |
பெரு நிறுவனங்களை உலக நாடுகள் எதிர்க்க
காரணம்!
குறிப்பிட்ட
நிலப்பரப்பில் உள்ள வணிக நிறுவனங்கள் காலப்போக்கில் வலிமை கொண்டதாக மாறுகின்றன. இதன்
விளைவாக, பல்வேறு சமூக, பொருளாதார கொள்கைகளை கூட இயற்றுவதற்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்
அளவுக்கு பிரமாண்டமாக வளர்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, இப்படி
வளரும் பெரு நிறுவனங்களால் வரி வருவாய் கிடைத்தாலும். அவை அதன் அதிகாரத்திற்கு அச்சறுத்தலாக
மாறுகின்றன.
குறிப்பாக,
எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலையை அரசு குறைக்க நினைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு,
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதால், அதை குறைக்கச் செய்யும் நடவடிக்கை என கொள்ளலாம்.
மேற்சொன்ன இரு பொருட்களையும் நாட்டின் சிக்கலான நிலையைக் கருதி, விலையை குறைத்துக்கொள்ள
வியாபாரிகள் தயாராக இருக்கலாம். ஆனால், பெருநிறுவனங்கள் அந்த நேரத்தில் கிடைக்கும்
அதிக லாபத்தை விட்டுவிட தயாராக இருப்பதில்லை.
இதனால, நாட்டில்
எண்ணெய், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டாலும் அரசு
அதை தடுக்க முடியாது. காரணம் பெருநிறுவனங்களின் பொருள் விநியோக கடைகள் அனைத்து நகரங்கள்,
இறு நகரங்களிலும் வியாபித்து உள்ளன. இவற்றைக் கடந்தது புதிய ஆட்கள் எவரும் வியாபாரம்
தொடங்க முடியாது. காய்கறிகளை விற்கும் வியாபாரிகளுக்கு மொத்தகொள்முதல் செய்யும் பேரங்காடிகள்தான்
ஒரே விற்பனை இடமாக உள்ளது.
அரசின் கொள்முதல்
விலை மிக குறைவு. அதை விற்கும் சந்தையும் கூட ஊழலால் நசிந்துவிட்டன. இருப்பது தனியார்
கொள்முதல் நிலையங்கள்தான். எனவே, பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதை கிடங்குகளில்
பாதுகாத்து அதிக விலைக்கு விற்கிறார்கள். இந்தியாவில், ஏகபோக சந்தையை கட்டுப்படுத்தும்
அரசு அமைப்புகள், காசு வாங்கிக்கொண்டு அமைதியாக உள்ளன.
அமெரிக்காவில்
கூட ஏகபோகமாக உள்ள நிறுவனங்களை கட்டுப்படுத்தி அபராதம் விதித்து சந்தையில் சீரான நிலையைக்
கொண்டுவரும் சூழ்நிலை இல்லை. அங்கும் பணம் பேசியிருக்கிறது. அதிகாரிகளுக்கு கண் தெரியவில்லை.
ஆனால் காது கேட்டிருக்கிறது.
ஐரோப்பிய
யூனியனின் போட்டி தடுப்பு மற்றும் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் இந்த வகையில் சிறப்பாக
செயல்படுகிறது. கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடுத்து வென்று அபராதம்
கட்ட வைத்திருக்கிறது.
அமெரிக்க
அதிபர் ஜோ பைடன் பெருநிறுவனங்களின் அதீத வணிகம் காரணமாக எரிபொருட்கள் விலை அதிகரிப்பு,
புதிய கண்டுபிடிப்புகள் உருவாகாத சூழல், விநியோகமும் சிறப்பான இல்லாத நிலை உருவாகியுள்ளது
என கண்டனம் தெரிவித்து பேசியிருக்கிறார். அதிபர் பேசியது மட்டுமல்ல, அவரது கருத்தை
ஒட்டியே அமெரிக்க வணிக கமிஷனும் செயல்படுகிறது. அண்மையில் மைக்ரோசாஃப்ட் 69 பில்லியன்
டாலர் செலவில் ஆக்டிவிஷன் பிளிஸார்ட் என்ற விளையாட்டு நிறுவனத்தை வாங்க முயன்றது. ஆனால்
அமெரிக்க அரசின் வணிக கமிஷன் இந்த வணிகப் பரிவர்த்தனையை தடுக்க முயன்றது. நீதிமன்றம்,
அரசின் வழக்கை தடுத்து நிராகரித்தாலும் அந்த அமைப்பின்ன் நோக்கம் மாறவில்லை. திரும்ப
மேல்முறையீடு செய்யவிருக்கிறது.
கடந்த ஆண்டு,
என்விடியா சிப் நிறுவனம் ஆஃப் ஆர்ம் என்ற சிப் டிசைன் நிறுவனத்தை 40 பில்லியன் டாலர்களுக்கு
வாங்கியது. ஆனால், இதை ஐரோப்பிய யூனியனின் சிஎம்ஏ அமைப்பு தடுக்க முயன்றது.
ஏன் இப்படியொரு
எதிர்ப்புணர்வு அதுவும் முதலாளித்துவ மண்ணில் எழுகிறது. அதற்கு சில காரணங்கள் உள்ளன.
சிறுநிறுவனங்களை அழித்து பெருநிறுவனங்கள் சந்தை பங்களிப்பை அதிகரிப்பது, ஏகபோகம் அதிகரிப்பது,
உள்ளூர் சந்தை முழுமையாக அழிவது ஆகியவற்றை காரணமாக சொல்லலாம்.
1997 தொடங்கி
2017 வரையில் அமெரிக்காவில் பெருநிறுவனங்களின் சந்தை பங்களிப்பு மூன்றில் இரண்டு பங்காக
கூடி 65 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ்,
இத்தாலி ஆகிய நாடுகளை பொருளாதார வல்லுநர்களான கபோர் கோல்டே, ஸாபோல்க்ஸ், தாமஸோ வாலெட்டி
ஆகியோர் ஆராய்ந்தனர். அதில், 1998-2019 ஆண்டு வரையில் பெருநிறுவனங்கள் 73 சதவீதம் வளர்ந்துள்ளதைக்
கண்டறிந்தனர்.
மேற்சொன்ன
காலகட்டத்தில் பிரிட்டனில் டாப் டென் நிறுவனங்களாக கூறப்பட்டவைகளில் ஐந்து நிறுவனங்கள்
மூன்றே ஆண்டுகளில் திவாலானது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. தற்போது, அவற்றில் எட்டு
நிறுவனங்கள்மூடப்படும் நிலையில் உள்ளன. இதேபோன்ற நிலைமை அமெரிக்காவிலும் உருவாகிவருகிறது.
2
அமெரிக்காவில் குறிப்பிட்ட நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் மருத்துவமனைகளில்
பத்துக்கு எட்டு மருத்துவமனைகள் லாபமற்ற தன்னார்வ அமைப்புகளாக இயங்கின. ஆனால், இப்போது
மருத்துவமனைகள் அத்தனையும் லாபநோக்குடன் இயங்குபவையாக மாறிவிட்டன. இருபதாண்டு காலத்தில்
இரண்டாயிரம் மருத்துவமனைகள் கையகப்படுத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம்
மக்களுக்கு தரமான சிகிச்சையெல்லாம் கிடைக்கவில்லை. சுமார் தரத்திலான சிகிச்சை அதிக
கட்டணத்திற்கு மாறியது அவ்வளவுதான்.
இப்படி லாபத்திற்காக
மக்களின் சிகிச்சை கட்டணம் உயர்த்தப்படுவதை அமெரிக்காவில் அரசு அமைப்புகள் பெரிதாக
கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஐரோப்பிய யூனியன் தீவிரமாக செயல்பட்டு வழக்குகளை பதியத் தொடங்கி
கேள்விகளைக் கேட்கத் தொடங்கியது.
இன்று இணையம்
வந்தது தொடங்கி, பொருட்களின் விலை ஏகத்துக்கும் குறைந்துவிட்டது. உள்ளூரில் உள்ள போட்டியாளர்களை
பெருநிறுவனங்கள் தங்களின் பணபலத்தை வைத்து ஊதித்தள்ளுகின்றன. தாங்களே கடைகளை தொடங்கி
உள்ளூர் வணிகர்களை விட விலை குறைவாக வைத்து நஷ்டத்திற்கு விற்றாலும் கூட சில ஆண்டுகளில்
அவர்களை அழித்து ஒழிக்கிறார்கள். அல்லாதபோது உள்ளூர் கடைகளை வாங்கிவிடுகிறார்கள். இதனால்
தினசரி குறைந்த விலை என வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் போல தனது பொருட்களை விற்க முடிகிறது.
லாஜிஸ்டிக் வணிகம் அதிகரித்துவிட்டதால், பொருட்களை எளிதாக நாட்டின் பலபுறங்களுக்கும்
அனுப்பி வைக்கிறார்கள். இவர்களோடு சிறு நிறுவனங்கள்
போட்டியிட்டு வெல்வது மிக கடினம்.
கடந்த ஆண்டு
அமெரிக்காவிலுள்ள மிகப்பெரும் ஐந்து நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கென செலவு செய்துள்ள தொகை
200 பில்லியன் டாலர்கள். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் ஆல்பபெட், மைக்ரோசாஃப்ட்
என இரண்டும் முன்னிலையில் உள்ளன.இந்தளவு செலவு செய்யும் நிறுவனங்களோடு ஸ்டார்அப்களோ,
வேறு நிறுவனங்களோ போட்டியிடுவது நிஜமாகவே கடினம்.
கொரோனா வருவதற்கு
முன்னர், நிறைய இடங்களை வாடகைக்கு பிடித்து நடத்திய தொழில் செய்த சிறு நிறுவனங்கள்
இப்போது வீட்டில் இருந்தபடியே இயங்கும் வகையில் மாறிவிட்டன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு
இட வாடகை மிச்சம். மேலும் தேவையான ஆட்களை உள்ளூரிலேயே தேடிப்பெறுகிறார்கள். இதனால்,
அதிக சம்பளம் கொடுக்கும் நிர்பந்தமும் சற்று குறைகிறது. இணைய வசதி நிறைய மாற்றங்களை
ஏற்படுத்தியிருக்கிறது.
பெருநிறுவனங்கள்,
சக அல்லது போட்டி நிறுவனங்களை வாங்கும் வணிக பரிவர்த்தனைகளை அமெரிக்க அரசு முடிந்தளவு
தடுக்கிறது. பெருநிறுவனங்கள் வெற்றிகரமான பரிவர்த்தனைகளை நடத்தி நிறுவனங்களை கையகப்படுத்தினால்,
பொருளாதார சீர்குலைவு ஏற்படுவது தடுக்க முடியாது என அரசு நினைக்கிறது. எனவே, 2010ஆம்
ஆண்டு கையகப்படுத்தல் அளவு 1 சதவீதமாக இருந்தது. தற்போது அந்தளவு 0.5 என சரிந்துவிட்டது.
அமெரிக்க வரலாற்றில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, வணிக நிறுவனங்களின் கையகப்படுத்தலை கட்டுப்படுத்தும்
சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 110 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கையகப்படுத்தல்
என்றால் அதை அரசுக்கு பெருநிறுவனங்கள் தெரிவிக்கவேண்டும். தெரிவித்தால் அந்த கையகப்படுத்தலை
அரசு விசாரித்து முடிந்தளவு தடுக்கும் என்பதே உண்மை.
தி எகனாமிஸ்ட்
ஜூலை 2023
கருத்துகள்
கருத்துரையிடுக