சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்
மவுஸ் - கே டிராமா |
மவுஸ்
கொரிய டிராமா
பதினாறு எபிசோடுகள்
ராகுட்டன்
விக்கி ஆப்
வன்மம் கொண்ட
ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு
படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள்.
அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது
ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்
துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக
மாற என்னவானது என்பதே கதை.
மேலே சொன்னது
கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை
– எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும்
அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று
சர்ச்சையானது.
இங்கிலாந்தில்
படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர்.
சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார்.
மூளை தொடர்பான ஆய்வுகளில் டேனியல் வல்லுநர். இவர் சைக்கோபாத் ஜீன்களை பெண்கள் கருவுற்றிருக்கும்போது
கண்டுபிடித்து அந்த குழந்தைகளை கொன்றுவிட்டால் சைக்கோபாத்கள் உலகில் பிறக்க மாட்டார்கள்.
உலகம் போர், வன்முறை இன்றி அமைதியாக இருக்கும் என நினைக்கிறார். ஆனால், இவரது கருத்தை
பொதுவாக அனைவரும ஏற்றாலும், சட்டமாக கொண்டு வந்து அரசு தானியக்கமாக அதை செய்வதை மனித
உரிமை பெயரால் தடுக்கிறார்கள்.
கொரியாவுக்கு
வந்து தனது ஆராய்ச்சி பற்றி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியோருக்கு தனது கொள்கை பற்றி
விளக்கி கூறுகிறார். ஆனால், அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரே அளவில் இருப்பதால் சைக்கோபாத்
ஜீன் ஆய்வுக்கொள்கை சட்டமாக ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால், இவரது ஆய்வுக்கொள்கை
ஆளுங்கட்சியில் உள்ள அதிபருக்கு நெருக்கமான செயலாளரால் கவனிக்கப்படுகிறது. அவர் இதை
ஏன் செய்யக்கூடாது? என நினைக்கிறார். இதற்காக ஓஇசட் எனும் ரகசிய அமைப்பைத் தோற்றுவித்து
சைக்கோபாத் பட்டியல்களில் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து
வரச் செய்கிறார்.
சைக்கோபாத்
கொலைகாரனை அவன் விருப்பப்படி உள்ளுணர்வுப்படி கொலைகளைச் செய்யவிடுவது. பிறகு அதை மக்களுக்கு
ஆதாரத்துடன் காட்டி,அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு சைக்கோபாத் ஜீன் பரிசோதனை சட்டத்தை
பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதுதான் பிளான்.
ஆபத்தான இந்த
திட்டத்தால் கொரியாவில் நடக்கும் கொலைகளும், வன்முறைகளும் அதிகரிக்கின்றன. முதலில்
திட்டத்தை ஏற்றாலும் பின்னாளில் வில்லங்கமாக போகிறதே என அறிந்து தப்பிக்க முயலும் டேனியலை சிறைபிடித்து
தனியாக அடைத்து வைக்கிறார்கள். சற்று முன் கதையைப் பார்ப்போம்.
மூளை அறுவை
சிகிச்சை வல்லுநரான ஹன் சியோ ஜன் என்பவர், வீட்டுக்கு டேனியல் வருகிறார். கொரிய அரசுக்கு
தனது ஆராய்ச்சி பற்றி விளக்குவதற்கான பயணம் அது. அப்போது, மருத்துவர் ஹன்னின் மனைவி
கருவுற்று குழந்தை பெற சில மாதங்களே பாக்கி என்ற சூழல். அப்போதுதான் அவர்களின் வீட்டுக்கு
அருகில் ஒரு குடும்பமே சைக்கோபாத் கொலைகாரனால்
கொல்லப்படுகிறது.
அந்த குடும்பத்தில்
மிஞ்சும்ம் ஒரு சிறுவன், கொலைகாரன் யாரென அடையாளம் காட்டுகிறான். அந்த கொலைகாரன் வேறு
யாருமல்ல, மருத்துவர் ஹன்தான். கொலைக்கான ஆயுதம் கிடைக்கிறது. போலீசாரின் குற்றச்சாட்டுக்கள்
சரியாக இருந்தாலும் லாஜிக் மிஸ் ஆனதால் நீதிமன்றம் மருத்துவர் சைக்கோபாத் கொலையாளி
அல்ல என்று கூறிவிடுகிறது. ஆனால், மருத்துவரின் மனைவிக்கு கணவர் மீது சந்தேகமாக உள்ளது.
எனவே,, அவர் சில விஷயங்களை சோதித்துப் பார்த்து காவல்துறை, ஊடகங்கள் முன்னால் தனது
கணவர்தான் குற்றவாளி என சாட்சி சொல்கிறார். நீதிமன்றமும் அதை ஏற்கவே ஹன்னுக்கு மரண
தண்டனை விதிக்கப்படுகிறது.
மருத்துவர்
ஹன், மருத்துவர் டேனியனிலின் தங்கையைக் காதலித்து கொலை செய்தவர் என பிறகுதான் தெரிய
வருகிறது. மருத்துவர் டேனியல், சைக்கோபாத் கொலைகாரனான ஹன்னின் மனைவியிடம் ‘’குழந்தைக்கு
சைக்கோபாத் ஜீன் இருக்கலாம். இந்த குழந்தை ஆபத்தானது. வேண்டாம்’’ என்கிறார். ஆனால்,
மருத்துவர் ஹானின் மனைவியோ தாய்மை பாசத்தில் அதை மறுக்கிறார்.
அவருக்கு
மருத்துவ சிகிச்சை செய்யும் நர்ஸ்,’’ குழந்தையை கொல்லவேண்டாம். தான் வளர்க்கிறேன்’’
என்கிறார். இதனால் மருத்துவர் ஹன்னின் மனைவி, நர்சிற்கு பிறக்கும் சைக்கோபாத் ஜீன்
கொண்ட குழந்தையைப் பெற்று வளர்க்கிறார். அந்த நர்ஸ், ஹன்னின் மனைவி கொடுக்கும் குழந்தையைப்
பெற்று வளர்க்கிறார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு நர்சின் குடும்பம் படுகொலை
செய்யப்படுகிறது. ஹன்னின் தானம் கொடுக்கப்பட்ட ஆண் பிள்ளை மட்டுமே பிழைக்கிறது. ஆனால்,
அவனது சமூக எண் கூட அரசு பதிவேடுகளில் இல்லை. இதனால் அவனது உயிரியல் ரீதியான அம்மா,
அவன் இறந்துவிட்டான் அல்லது எங்கேயோ போய்விட்டான் என நினைத்துக்கொள்கிறாள். அவள் நர்சின்
குழந்தையை வளர்த்து படிக்க வைத்து மருத்துவராக மாற்றுகிறாள்.
அவன்தான்,
சிறையில் இருக்கும் மருத்துவர் ஹன்னின் போலியான அதிகாரப்பூர்வ மகன் சியோ ஹன். உண்மையில்
சியோவை ஒருமுறை பார்க்கும் மருத்துவர் ஹன், அவன் கண்களை வைத்தே அவன் தன்னைப் போல இல்லையே
என சந்தேகப்படுகிறார்.
அவர் சிறையில் இருந்து வெளியே செல்ல நினைக்கிறார். அந்த
நேரத்தில்தான், அங்கு போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டு குற்றுயிராக கிடக்கிறார். அவரை
ஜூங் பாரம் என்ற போலீஸ்காரர் காப்பாற்றுகிறார். மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுயிருமாக
சிறைக்காவலர் சுயநினைவிழந்து கிடக்கிறார். அவரைத் தாக்கியது ஹன் சியோ ஜன் என காவல்துறை
அதிகாரி கோ மூச்சி நினைக்கிறார்.
கோ மூச்சி
என்ற அதிகாரி, சைக்கோபாத் கொலைகாரனை தேட வெறியுடன் அலைந்துகொண்டிருக்கிறார். இவர் வேறு
யாருமல்ல. மருத்துவர் ஹன்னால் பெற்றோரை இழந்தவர். ஆம், ஹன்னை போலீசில் மாட்டிக்கொடுத்த
சிறுவன்தான். இவரைக் கொலைகாரனிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் அண்ணன் ஊனமாகிறார்.
அவர் தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கிறார். தம்பி
கோ மூச்சிக்கு அண்ணன் செய்த தவறால் அவர் ஊனமானதோடு, பெற்றோரும் இறந்துவிட்டார்கள் என்ற
கோபம் இருக்கிறது. எனவே, அண்ணனைப்பார்த்தாலும் வெறுப்போடு பேசுகிறார். அவர் தரும் உணவைக்
கூட சாப்பிட மறுக்கிறார்.
மருத்துவன்
ஹன் சிறையில் இருக்கிறார். ஆனால் சைக்கோபாத் கொலைகாரனால் கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
அதை செய்வது யார் என கோமூச்சி தேடும்போது, ஹன்னின் மகன் சியோ ஹன் நினைவுக்கு வருகிறார்.
சியோ ஹன்னைப் பற்றிய விவரங்களை அறியும்போது அவர் கொலைகளைச் செய்வதற்கான அத்தனை அம்சங்களும்
பொருந்தி வருகின்றன. ஏனெனில் கொலைகாரன் மனித உடலை துல்லியமாக அறிந்தவன். மிகச்சரியாக
எங்கு கத்தியால் குத்தினால், எந்த பாகத்தை சிதைத்தால் உயிர் மெதுவாக அல்லது வேகமாக
போகும் என்பதை அறிந்தவன். நிதானமாக கொலையை ரசனையாக செய்பவன். கோ மூச்சி சியோ ஹன்னைத் துரத்த
தொடங்குகிறார்.
கோ மூச்சிக்கு
உதவியாக ஓபிஎன் டிவி சேனலின் பிடி சோய் என்ற பெண்மணி உதவிக்கு வருகிறார். கூடுதலாக,
சைக்கோபாத் கொலைகாரன் ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி பிழைத்த சிறுமி ஓ போங்
யி என்பவரும் சில துப்புகளை கொடுக்கிறார். இந்த நேரத்தில்தான் பறவைகளைக் கூட காப்பாற்ற
நினைக்கும் இரக்க நெஞ்சுள்ளவனாக ஜூங் பாரம் அறிமுகமாகிறார்.
இவர் ஒரு
சாதாரண காவலர். தனது வீடு இருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்யும்
நல்ல மனசுக்காரர். ஓ போங் யியின் பாட்டிக்கு அவனை தனது பேத்திக்கு கல்யாணம் செய்துகொடுக்க
ஆசை. அவளது வீட்டுக்கு அருகில்தான் ஜூங் வாழ்கிறார். ஜூங் ஒரு அப்பாவி. அடிதடியில்
இறங்க அஞ்சும் ஆள். பள்ளிச்சிறுமியான ஓ போங் யியுக்கும் கூட அவன் மேல் காதல் ஆசை இருக்கிறது.
ஆனால் ஓ போங்
யியுக்கு கூட பாட்டி இருக்கிறாள். ஆனால் ஜூங்கிற்கு பெற்றோர் இல்லை. அவனுக்கு அத்தை,
மாமா மட்டுமே இருக்கிறார்கள். அவனைச் சுற்றி இருக்கும் உலகம் உண்மையா, பொய்யா என்பதை
தலையில் அடிபட்டு மூளை மாற்று அறுவை சிகிச்சை நடக்கும் வரை அறிவதில்லை. பிறகுதான் கதையில்
ஏராளமான திருப்பங்கள் நடைபெறுகின்றன.
டிவி தொடர்தான்.
ஆனால், நன்றாக செலவு செய்து திரைப்படம் போல எடுத்திருக்கிறார்கள். மூளை மாற்று அறுவை
சிகிச்சை, சைக்கோபாத் ஜீன் ஆய்வு, சைக்கோபாத் ஜீன் உள்ளவர்களை எலி போல கண்காணித்து
சோதனை செய்யும் அரசு, இவர்களைக் கண்காணித்து குற்றங்களை மறைக்கும் ரகசிய அமைப்பு என
தொடர் முழுக்கவே சுவாரசியங்கள் ஏராளம் உள்ளன.
ஜூங் பாரம்
பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மூளை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறரைக்
கொல்லும் வெறியும், கொல்லக்கூடாது என பரிவும் ஒர நேரத்தில் தோன்ற தடுமாறும் இடத்தில்
நன்றாக நடித்திருக்கிறார். கோ மூச்சி மதுபோதையில் தடுமாற அவரை கீழே தள்ளி கொல்வதற்காக
கல்லை எடுத்து, கொலை செய்யும் வெறியைத் தணிக்க முடியாமல் இடது கையை தானே சிதைத்துக்கொள்ளும்
காட்சி… பீதியூட்டும் நல்ல காட்சி. அடுத்து,
ஓ போங் யி எனும் பெயர் வைத்த குருவியை நசுக்கி கொன்றுபோட்டுவிட்டு ஏதும் தெரியாதது
போல இருப்பது, இரைச்சல் என சொல்லி வீட்டிலுள்ள குட்டி போட்ட பூனையைக் கொல்வது என ஜூங்
பாரம் பாத்திரம் நல்லது, அல்லது என இரண்டையும் செய்கிறது.
சியோ ஹன்
பாத்திரத்தை முதலில் கெட்டவர் போல காட்டுகிறார்கள். பின்னர்தான் அந்த பாத்திரம் யார்
என கூறுகிறார்கள். உண்மையில் அதுவரை பார்வையாளர்கள் நினைத்த யோசித்த எதுவுமே நிஜம்
அல்ல என உணரும் இடம் அட்டகாசம்.
ஜூங் பாரம்,
சைக்கோபாத் ஜீன் கொண்டவர். அதேசமயம் அவர் சில வெளிப்புற சக்திகளால் ட்ரிக்கர் செய்யப்பட்டு
கொலைகளைச் செய்கிறார். ஆனால், சியோ ஹன் கூட இதே போல ஜீன்கள் இருந்தாலும் அவர் சுயகட்டுப்பாடோடு
இருக்கிறார். பிறரைக் கொல்வதில்லை. சியோ ஹன் பற்றி, அவரின் மரபணு பற்றி இன்னும் கொஞ்சம்
பேசியிருக்கலாம். என்ன காரணத்தால அவரின் மரபணு அவரை குற்றத்தில் ஈடுபடுத்துவதில்லை
என்ற பகுதி சுவாரசியமாக இருந்திருக்கும்.
இவர்களுக்கு
அடுத்து, நாயகனுக்கு இணையான காட்சிகள் போலீஸ் அதிகாரி கோ மூச்சிக்கு உண்டு. தனது குடும்பத்தை
நாசம் செய்த சைக்கோபாத் கொலைகாரனை சிறையில் அடைத்தாலும் அதுபோல யாரும் வந்துவிடக்கூடாது
என உக்கிரமாக வேலை பார்க்கிறார்.
விடுதலையான்ன
முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். பிறரின் நலனுக்காக கவலைப்படுபவர்,
இரவில் குடும்பத்தை பற்றி கவலைப்பட்டு மதுபோதையில் மூழ்கி கிடக்கிறார். சற்று வன்முறை
அதிகம் கொண்ட டிவி தொடர் என்றாலும், கோ மூச்சியின்
கோக்கு மாக்கு செயல்களை வைத்து சில இடங்களில் நகைச்சுவைக்கு முயன்றிருக்கிறார்கள்.
பிடி சோய்க்கு தனது ஜெர்க்கினை போட்டுவிட முயலும்போது அதை அவர் தவிர்த்துவிட்டு சொல்லும்
காரணம். கழிவுநீர் டேங்கில் இறங்கி ஆதாரங்களை தேடிவிட்டு அப்படியே தனது அலுவலகத்திற்கு
வருவது. தனது சகோதரனை கொன்ற கொலைகாரனை தண்டித்துவிட்டு பிழைப்பிற்கு முட்டை விற்கும்
வேலையை செய்வது என இவர் தொடரில் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன.
தான் வெளியில்
வெறுத்தாலும் அவருக்கென இருக்கும் ஒரே ரத்த சம்பந்தமான அண்ணன் சைக்கோபாத் கொலைகாரனின்
கையில் சிக்கி இறக்கும்போது டிவி நிலையத்தில் அண்ணனிடம் கோபப்படு என கெஞ்சிக்கொண்டு
முழந்தாள் பணிந்து மன்றாடுவது… இந்த காட்சி பார்வையாளர்களை அப்படியே உடைத்து நொறுக்கிவிடுகிறது.
இவருக்கு
அடுத்து, பிடி சோய். இவர் டிவியில் புலனாய்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மருத்துவர்
சியோ ஹனின் காதலி. ஆனால், அவர் சைக்கோபாத் குற்றவாளியாக கருதப்பட்டு கோ மூச்சியால்
சுட்டுக்கொல்லப்படுகிறார். இதன் விளைவாக பிடி சோய், அவரது குழந்தை என இருவருமே சமூகத்தில்
கடுமையாக வெறுக்க கூடியவர்களாக மாறுகிறார்கள். இதை அவர் எதிர்கொள்வதை நன்றாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.
இவரின் நிலையை ஏற்கெனவே சியோ ஹனின் அம்மா எதிர்கொண்டிருப்பார்.
எனவே, அவரே தனது அடையாளத்தை மறைத்து தனது பேரனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக்கொள்வார்.
இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் பிரதிபலிப்பது
போல இருப்பார்கள். அளவற்ற வன்மத்தை, எதிர்ப்பை, வெறுப்பை எதிர்கொண்டு வாழ்வார்கள்.
சியோ ஹனின் அம்மா, இறுதியாக கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வார்.
கொலை, அந்த
சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மீண்டவருக்கு எப்படி நினைவுகள் வழியாக வாழ்க்கை நரகமாக
மாறுகிறது என்பதை ஓ போங் யி, கோ மூச்சி மூலம் சிறப்பாக இயக்குநர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
குற்றவாளிகளை நேர்மையாக தண்டிப்பதில் கூட அரசியல் உள்ளே நுழைந்து எத்தனை மனிதர்களின்
வாழ்க்கையை குலைத்து போடுகிறது என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார்கள்.
கதை, காட்சிபடுத்தல்,
திரைக்கதை, இசை என அனைத்து விஷயங்களிலும் மவுஸ் டிவி தொடர் சிறப்பாக உள்ளது. குறிப்பாக
தொடரில் வரும் தேவாலய மணியோசை கொண்ட பிஜிஎம், மனதில் பீதியை ஊட்டும் ஒன்று.
மூளை மாற்று
அறுவை சிகிச்சை, சைக்கோபாத் ஜீன்கள் என அறிவியல் முறையில் கதையின் அடிப்படையை உருவாக்கிய
கதை ஆசிரியர், இயக்குநர் இறுதியாக இறைவனை தஞ்சமடைந்தது ஏன் என்று தெரியவில்லை. உண்மையில்
அப்படி ஜூங் பாரம் தன்னுடைய பாரம் மன்னிக்கப்படும் என்று கூறப்படுவதற்கு கூட சியோ ஹனின்
மூளை அவனுக்குள் இருப்பது முக்கியமான காரணம்தானே?
இன்னொரு வாய்ப்பை
பார்ப்போம்.
ஜூங் பாரத்தின்
பெற்றோர் ரகசிய அமைப்பைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுகிறார்கள்.
ஜூங் அவரது
சகோதரனை கொல்ல முயன்றதால், அவனது வளர்ப்பு அம்மா வருத்தத்தில் இருக்கிறாள். உறங்குபவரை
அம்மா, தலையணையால் நசுக்கி கொல்ல முயல்கிறாள். அப்போது, மர்ம மனிதர் ஜூங்கைக் காப்பாற்றிவிடுகிறார்.
ஆனால், இந்த முயற்சியில் அவரது அம்மாவைக் கொல்கிறார். கூடவே, அவரது அப்பாவும் துரதிர்ஷ்டவசமாக
சண்டையில் இறந்துபோகிறார். இதை மனதில் வைத்துக்கொள்ளும் ஜூங், வளர்ந்தபிறகு தனது குடும்பத்தைக்
கொன்ற மனிதரை சித்திரவதை செய்து கொல்கிறார். இப்போது ஜூங் என்பவர், சைக்கோபாத் ஜீன்
இல்லாதவனாக இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். அவன் தனது குடும்பத்தைக் கொன்றவரை பழிவாங்குவது
சரியா? அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இத்தனைக்கும்
ஜூங் குடும்பத்தை கொலை செய்யாதபோதும் அவன் மீதுதான் கொலைப்பழி விழுகிறது. ஊடகங்களை
அதை பிரபலப்படுத்துகின்றன. ஊர் மக்களும் அதை பேசி அவனை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.
அவனுக்கு அந்த நேரத்தில் அத்தை ஒருத்தி வந்து உதவுகிறாள்.
தொடர் கொலைகாரர்கள்
பற்றிய சுவாரசியமான டிவி தொடரைப் பார்க்க வேண்டுமா?
மவுஸ் தொடரை
பார்க்கலாம். ஏமாற்றத்தை சந்திக்க மாட்டீர்கள்.
கோமாளிமேடை
டீம்
First episode date: 3 March 2021 (South Korea)
Genres: Thriller, Science fiction, Suspense, Mystery
Composer: Park Se-joon
Directed by: Choi Joon-bae; Kang Cheol-woo
Hangul: 마우스
கருத்துகள்
கருத்துரையிடுக