இருபது ஆண்டுகள் கிரையோஜெனிக் கேப்சூலில் வைக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்து வந்தால்... மெல்டிங் மீ சாஃப்ட்லி

 





31.5 டிகிரி தாண்டினால் ஆபத்து 


மெல்டிங் மீ சாஃப்ட்லி - கே டிராமா






மெல்டிங் மீ சாஃப்ட்லி

கொரிய டிராமா

பதினாறு எபிசோடுகள்

ராக்குட்டன் விக்கி ஆப்

 

டிபிஓ என்ற டிவி சேனலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிப் பிரிவில் மா டோங் சான் என்ற இளைஞர் வேலை செய்கிறார். புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். இவர் கிரையோஜெனிக் மூலம் தன்னை 24 மணிநேரம் உறைய வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார். அதை டிவியில் ஒளிபரப்புவதுதான் பிளான்.

 இவருடன் ஓ மிரான் என்ற இளம்பெண்ணும் காசு கிடைக்குமென பரிசோதனைக்கு சம்மதிக்கிறாரர். ஆனால், இந்த சோதனை துரதிர்ஷ்டவசமாக 20 ஆண்டுகள் வரை நீண்டுவிடுகிற்றது. 1999 தொடங்கி 2019இல் தான் இருவரும் கண் விழிக்கிறார்கள். டிவி தொடர் அவர்களது வாழ்க்கை, கொடுத்த வாக்குறுதி, குடும்பத்தினரின நிலை என பல்வேறு விஷயங்களை உணர்வுப்பூர்வமாக பேசுகிறது.

கிரையோஜெனிக் அறிவியல் சோதனை, அதை முடக்கும் சர்வதேச சதிகள் என கதை சென்று சற்று ஆவலை ஏற்படுத்துகிறது. ஆனால், கதை திடீரென யூ டர்ன் போட்டு திரும்பி காதல் என்ற பைபாஸ் சாலைக்கு மாறி தேங்கி விடுகிறது. அதிலும், எந்தளவு ஆழமாக இருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கிறது.

அறிவியலும் முழுமையாக இல்லை. காதலும் முழுமையாக இல்லை. ஒரு கட்டத்தில் விபத்துக்குள்ளாகி அம்னீசியா வந்து சடை போட்டுக்கொண்டு திரியும் பேராசிரியர் பாத்திரம் போலவே பார்வையாளர்கள் அனைவரும் மாறுகிறோம் என்பதுதான் பரிதாபமானது. அவர் கூடவே வரும் ஓமி ரானின் சகோதரர் நம் டே போலவே புரிந்தும் புரியாததுமாக காட்சிகள் நகர்கின்றன. உண்மையில் பார்வையாளர்களே நம் டே போலவேதான் இயக்குநர் அணுகியிருக்கிறார். தொடர் முழுக்க வேஸ்டா என மனம் தளர வேண்டாம். காதல் காட்சிகள் முதன்மை நடிகர்களால் சற்று நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. அதுதான் தொடரின் ஒரே ஆறுதல் அம்சம்.

மனிதர்களை உறைய வைத்து பிறகு பல்லாண்டுகள் கழித்து மீட்கும் சோதனை அதனளவில் சற்று தீவிரமானது. குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்து இல்லாத நிலையில், அவர்களை உறைய வைத்து தொழில்நுட்பம் முன்னேறியபிறகு உயிர்ப்பிப்பதுதான் கிரையோஜெனிக் கான்செஃப்ட். அதை தொடரின் இயக்குநர் அந்தளவு தீவிரமாக அணுகவில்லை. அதைப்பற்றி விளக்கவில்லை. முழுக்க வசனம் மூலமாகவே புரிய வைக்க முயல்கிறார். உண்மையில் அது போதுமானதாக இல்லை.

 மா டோங் சான், ஓ மி ரான் ஆகியோருக்கு இடையிலான காதல் காட்சிகளும் பெரிதாக அழுத்தமாக இல்லை. மா டோங் சான், ஓ மிரானுக்கு உதவுவதற்கு காரணம், பரிதாபம்தான். அதைத் தாண்டி அந்த உறவில் பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மா டோங் சானின் குடும்பம் வறுமையை சந்திக்கிறது. ஹோட்டல் நடத்தி பிழைக்கிறார்கள். இதேகாலத்தில், கிரையோஜெனிக் சோதனைக்கு கிடைத்த பணம் மூலம் வறுமையில் தடுமாறிய ஓ மிரான் குடும்பம் மேலே வந்துவிடுகிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மா டோங் சான், டிபி ஓவுக்கு வேலைக்கு செல்கிறார். குடும்பத்தின் மூத்த மகனாக அவர் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. இத்தனைக்கும் ஆடம்பரமான வீட்டில் வாழ்பவர்கள், மா டோங் சான் காணாமல் போனபிறகு வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த குடும்பத்தில் மூத்த மகனான மா டோங்தான் சற்று புத்திசாலி. மற்றவர்கள் அந்தளவு திறமையானவர்கள் அல்ல. குறிப்பாக, மா டோங்கின் தம்பி, தங்கை என இருவருமேதான.

மா டோங்கின் உதவி இயக்குநர் தனது சுயநலனுக்காக, தனது இயக்குநரைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதனால் மா டோங் காணாமல் போனது முழுக்க மறைக்கப்படுகிறது. இதைப்பற்றி பதற்றத்துடன் கேள்வி கேட்கும் மா டோங்கின் காதலிக்கு, நியூஸ் ரீடராக பணி கொடுத்து சமாதானப்படுத்துகிறார்கள். அவருக்கும் அது தேவைப்பட ஏற்றுக்கொள்கிறார், மா டோங்கின் நிச்சய மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு கல்யாணம் செய்துகொள்ளாமல் வேலை செய்கிறார். வாட் எ வுமன் என வியக்க வைக்கிறார் அல்லவா? கெட்டவர் போல காட்டி பிறகு அவரை நல்லவராக மாற்றுகிறார்கள்.

இப்படி தன்னைச் சுற்றி  நடக்கும் துரோகங்களை அடையாளம் கண்டு எப்படி மா டோங் சான், பரிசோதனை பற்றிய உண்மைகளை கண்டறிகிறார். அதிகரிக்கும் உடல் வெப்பத்தை எப்படி கட்டுப்படுத்தி தன்னை இயல்பான வெப்பநிலைக்கு மாற்றிக்கொள்கிறார் என்பதே கதையின் மையப்பொருள்.

கதையின் நாயகன், நாயகிக்காக பார்த்த கொரிய டிராமா என்று தான் சொல்லவேண்டும். இருவருமே தங்களது பாத்திரங்களை நன்றாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள்.

அடுத்து கவனிக்க வைக்கும் பாத்திரமாக ஓ மிரானின் முன்னாள் காதலரும், மா டோங் சானின் உதவி இயக்குநர் பாத்திரமுமான ஜியோன் ஜியும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நெகிழ்ச்சியான பாத்திரம் என்றால் அது செய்தி தலைவராக நடித்துள்ள முன்னாள் காதலி பாத்திரம்தான். இவர், இருபது ஆண்டுகளாக மா டோங் சானை நினைத்துக்கொண்டே இருக்கிறார். எனவே மணமே செய்துகொள்வதில்லை. இவரை சில்லறை காரணங்களுக்காக மா டோங் சான் நிராகரிக்கிறார். அது எதற்காக என்று தெரியவில்லை. அவருக்கு வயசாகிவிட்டது என்பதற்காகவா… தொடரில் ஒரு காட்சியில் குறைந்தபட்சம் இருபது ஆண்டு காத்திருப்பிற்கு மா டோங் சானுடன் உறவு கொண்டாலாவது நிம்மதி என நினைக்கிறார். ஆனால், இறுதியில் அதுவும் நிறைவேறாமல் போகிறது. துயரமான பாத்திரம்.

கிரையோஜெனிக் சோதனை பற்றிய செய்தியை நகைச்சுவையாக தொடர் அணுகியுள்ளது. உண்மையில் அது நகைச்சுவை போல தெரியவில்லை.

மா டோங் சான் தனது வேலையை ராஜினாமா செய்தவுடனே கதை முடிந்துவிடுகிறது. ஆனாலும் கதையை வெகுவாக நீட்டித்து சோர்வுறச்செய்து முடிக்கிறார்கள்.

நம்மையே கிரையோஜெனிக் கேப்சூலில் வைத்த பீதி ஏற்படுகிறது.

கோமாளிமேடை டீம்





Genres: Korean drama, Comedy, Romantic comedy, Fantasy


Number of episodes: 16
First episode date: 28 September 2019 (South Korea)
Created by: Studio Dragon
Directed by: Shin Woo-chul

கருத்துகள்