ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

 









டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு


டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா


ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்!

டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள்.

ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். 

ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசின் நகரங்களை கையகப்படுத்தி வந்தது. அதை அங்குள்ள மக்களும் ஏற்றனர் என்பதே பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அரசுக்கு எதிரான தனியார் படையை மக்கள் சிறிதும் எதிர்க்கவில்லை.

பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகளால் கூலிப்படையின் கையகப்படுத்தல் நடவடிக்கை தடுக்கப்பட்டது. கூலிப்படைத்தலைவர், ரஷ்ய அரசு என இரு சக்திகளுக்கு இடையிலுள்ள பிரச்னை அது. அதைப் பெரிதாக பேசுவதில் ஒன்றும் பயன் இல்லை.

புதின் அதிபராக உள்ள ரஷ்யாவில், எதிர்க்கட்சிகள், மாற்றுக்கருத்துகள் கொண்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜனநாயகம், உக்ரைன் போருக்கு எதிராக பேசும் அரசியல் கட்சி தலைவர்கள், சுதந்திரமான பேச்சு, உரிமை என்று முழங்குபவர்கள்  போலியான வழக்குகள் மூலம் எஃப்எஸ்பி என்ற உளவு அமைப்பு மூலம் வீடு புகுந்து கைது செய்யப்ப்பட்டு வருகிறார்கள். கேஜிபி என்ற உளவு அமைப்புக்கு பிறகு உருவான அமைப்புதான் எஃப்எஸ்பி.

நாட்டில் அரசுக்கு எதிராக இயங்கும், கூட்டங்களை நடத்தும் எதிர்க்கட்சி தலைவர்களை எப்படி அரசு அடையாளம் கண்டுபிடிக்கிறது? டெலிகிராம் ஆப்பை இயக்கினால் எளிதாக இடத்தை கண்டறிய முடிகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. சேனல், என்கிரிப்ஷன், பாதுகாப்பு, செய்திகளை அரசுக்கு தர மாட்டோம் என்பதெல்லாம் பொதுவாக ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வதற்கு கூறப்படும் பொய்கள் என்று ஆகிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், சீக்ரெட் சாட்டில் பேசும் செய்திகளை கூட ரஷ்ய\ புனலாய்வுத்துறை ஆராய்ந்து படித்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் மெட்டா தனது குழும நிறுவனங்களில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட பகிர்வு செய்திகளை கூட வெளிப்படையாக அரசுக்கு கொடுத்து வருவது தெரிந்த சங்கதிதான். எடு. எஸ்ஆர்கேவின் மகன் ஆர்யன் போதைமருந்து வழக்கு.

மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களின் ஆப்களை ரஷ்யா தடை செய்துள்ளதால், அதற்கு பதிலாக அங்கு டெலிகிராமை அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். டெலிகிராம் அங்கு ஃபேஸ்புக் போன்ற சாயலில் சமூக வலைத்தளம் ஒன்றை நடத்தி வருகிறது. அதிலும் மக்களின் பங்களிப்பு அதிகம்.

எனவே, ரஷ்ய அரசு மாறிவரும் காலத்திற்கேற்ப தனது டெக் துறையை நவீனப்படுத்தி மக்களைக் கண்காணித்து ஒடுக்கி வருகிறது. டெலிகிராம் ஆப், துபாயை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. இதற்கு 700 மில்லியன் பயனர்கள் உண்டு. 60 கோடி பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். குறிப்பாக ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிக ஆதரவு உண்டு. ஒப்பிட்டுப் பார்த்தால் மெட்டாவின் நிறுவனங்களை விட செல்வாக்கு அதிகம்.

வசதிகள், எளிமை என்று பார்த்தால் மெட்டாவின் வாட்ஸ் அப்பிற்கு ஈடு என்று சொல்லமுடியாது. ஆனால், கோப்புகளை பகிர்வது, நூல்களை வாசிப்பது என்று இயங்குபவருக்கு டெலிகிராம் சிறப்பானது. ஆனால், இதில் குரல் செய்திகளை அனுப்ப காசு கட்டவேண்டும். கோப்புகளை தரவிறக்காமல் கிளவுட் முறையில் வைத்துக்கொண்டு தேவையானபோது தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடிவது முக்கியமான சிறப்பம்சம்.

டெலிகிராமின் ஏபிஐ அமைப்பை ஒருவர் எளிதாக மாற்றியமைத்து அதில் இணைந்துள்ள ஒருவரின் பயனர் பெயரை வைத்து அவரின் செய்திகள், பரிமாறியுள்ள கோப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை எளிதாக பெறமுடியும். மேலும் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவலையும் கூட அறியலாம் என்பதே மிகவும் பீதிக்குள்ளாக்குகிற விஷயம். இதுபற்றிய தனியார் நிறுவனத்தின் சோதனையில் 2 மைல் தொலைவில் இருப்பவர்கள் டெலிகிராமை இயக்கியபோது அவர்களை அடையாளம் காண முடிந்தது.

அடப்பாவிகளா என புகார் எழுந்ததும், டெலிகிராம் நிறுவனம் அதன் கோடிங்கை மாற்றியது. அப்படியும் பெரிதாக பயன் ஏதுமில்லை. 600 யார்ட் என்ற அளவில் ஒருவரை அடையாளம் காணும்படி ஆப் மாறியுள்ளது. அவ்வளவுதான். அல்காரித ஓட்டை வழியாகத்தான் அரசியல் தலைவர்கள் எளிதாக சிறைபிடிக்கப்பட்டு அவர்களுக்கு லாடம் கட்டப்பட்டது.

டெலிகிராமின் ஏபிஐ அமைப்பு, அதன் வெளிப்படைத்தன்மையான செயல்பாட்டைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என நிறுவனர் த்ரோவ் கூறினார். ஆனால், இப்படி அமைந்ததால்  ரஷ்யாவின் புலனாய்வுத்துறையினர் எளிதாக அதை உடைத்து உள்ளே நுழைந்து தகவல்களை திருடவும் முடிந்திருக்கிறது. ஆனால் தகவல் திருட்டு என்பதை டெலிகிராம் நிறுவனம் மறுத்துள்ளது.

இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அரசியல் தலைவர்களை ஒட்டுக்கேட்க இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் எனும் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது என புகார் கிளம்பியதை அறிந்திருப்பீர்கள். இதுபோல மென்பொருட்களை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் ஆப்பை உடைத்து உள்ளே புகுந்து செய்திகளை திருடி வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். 

டெலிகிராம், தொடக்கத்தில் ரஷ்ய அரசுக்கு தலைவலி கொடுத்த டெக் நிறுவனம்தான். கண்காணிக்க கேட்ட சில பயனர்களின் தகவல்களை தர மறுத்தது. கிரெம்ளினிலுள்ள அரசுக்கு உடன்பாடான வகையில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே, அதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது டெலிகிராம் வருமானத்தை அதிகரிக்க முயன்று வந்தது. கிராம் என்ற பெயரில் கிரிப்டோகரன்சி ஒன்றை உருவாக்கியது. அதை அமெரிக்காவில் விற்க முயன்றது. ஆனால், அமெரிக்க அரசு அதை தடுத்து நிறுத்திவிட்டது. இதனால் டெலிகிராம் வருமானம் தடைபட்டு பெரும் சிக்கலுக்குள் மாட்டியது.

இந்த நேரத்தில் ரஷ்ய அரசுக்கும், டெலிகிராம் உரிமையாளரான த்ரோவுக்கும் இடையில் நல்லிணக்கம் உருவானது. அரசு, டெலிகிராம் மீதான தடையை விலக்கிக்கொண்டது. அரசு அலுவலர்கள், அதில் கணக்குகளை உருவாக்கிக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர். விடிபி என்ற அரசு வங்கி ஒன்று, டெலிகிராம் வழியாக பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியை உருவாக்கித்தர முன்வந்தது. மேலும் டெலிகிராம் நிறுவனத்திற்கான முதலீடுகளும் திடீரென உருவாகின.இந்த வகையில் ஒரு பில்லியன் டாலர்கள் முதலீடு கிடைத்தது. எப்படி இத்தனை வேகமான தற்செயல்கள் நடைபெறுகின்றன என யோசித்தால், எளிதாக உண்மையைக் கண்டுபிடித்துவிடலாம். சரமாரியான தற்செயல்கள் அல்லவா? ஆனால் லாஜிக் பார்த்தால் டெலிகிராம் நமக்கு கொடுக்கும் மேஜிக் மிஸ் ஆகிவிடும்.

 திடீரென அரசு இந்தளவு டெலிகிராமுக்கு சலுகை வழங்கியதுதான் மக்களுக்கும், எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கும், ஜனநாயகத்தை முன்வைத்து போராடிய போராளிகளுக்கும் சந்தேகம் அளித்தது. இதற்குப் பின்னர்தான் அரசை எதிர்த்த அல்லது சந்தேகப்பட்ட நபர்கள் அவர்கள் எங்கு இருந்தார்களோ அங்கேயே தடாலடியாக கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்டு போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டனர். நிறையப் பேரை விசாரித்து சிறையில் அடைத்தனர். ரஷ்யாவில் மீதமிருந்த குடியுரிமைகள், ஜனநாயகத்தை குழிதோண்டி மண்ணில் புதைத்தனர்.

இந்தியாவில் எப்படி ஊபா என்ற தேசியபாதுகாப்பு அடக்குமுறை  சட்டத்தின் மூலம் ஜனநாயக போராளிகள், மாணவர் சங்கத் தலைவர்கள், சிறுபான்மையினர் கைது செய்து சிறை வைக்கப்படுகிறார்களோ.. அதேபோலத்தான் ரஷ்யாவிலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுபவர்களை பிடித்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள். கொலை செய்கிறார்கள். அடித்த இடத்தையும், புதைத்த தடத்தையும் கூட மறைத்து வருகிறார்கள்.

கைது செய்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, புலனாய்வு அதிகாரிகள் அவர்கள் இறுதியாக அனுப்பிய டெலிகிராம் செய்திகளை படித்துக் காட்டினர். இதனால், நம்பிக்கையிழந்தவர்கள் பலரும் இந்த நாடு உருப்படாது என திட்டிக்கொண்டே சாமர்த்தியமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இதன் வழியாக தங்களது பெற்றோர், உறவினர்களைக் காப்பாற்ற முடியும் என நம்புகிறார்கள். டெலிகிராம் ஆப் மீது நம்பிக்கை இழந்தவர்கள் ட்விட்டர், சிக்னல் என்ற ஆப்களை பயன்படுத்துகின்றனர். சிக்னல் நிறுவனர், அமெரிக்காவில் டெலிகிராம் தொடங்கிய காலம் தொட்டே பயனர் பற்றிய விவரங்களை அரசுக்கு விற்று வருகிறது என குற்றம் சாட்டினார். டெலிகிராமின் தொழில்முறை போட்டியாளர் சிக்னல் என்பதை கருத்தில் கொண்டு அவர் பேச்சிலுள்ள கருத்தை உள்வாங்குவது முக்கியம்.

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளில் தன்னை நம்பியுள்ள மக்களை தூண்டில் புழுக்களாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதை டெலிகிராம் ஆப் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்சம் தொழில் நேர்மையுள்ள நிறுவனமாகவேனும் மதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

 

 

 

 

 வயர்ட் இதழ் கட்டுரையை தழுவியது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்