ஊழல் அதிகாரிகளைக் கொல்லும் ரகசிய அமைப்பை களையெடுக்கும் போலீஸ் அதிகாரி! வாட்சர்
வாட்சர் - கே டிராமா |
வாட்சர்
கே டிராமா
பதினாறு எபிசோடுகள்
ராகுட்டன்
விக்கி ஆப்
உள்துறை விவகாரங்கள்
துறையின் தலைவரான சீ டு க்வாங், வழக்குரைஞர் ஹன், இளம் போலீஸ் அதிகாரி யங் கூன். இவர்களது
மூன்றுபேரின் வாழ்க்கையிலும் நடைபெறும் குற்றச்சம்பவம், அவர்களை நொறுக்கிப் போடுகிறது.
அந்த கடந்த கால சம்பவத்தில் உள்ள மர்மங்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே தொடரின்
மையக்கதை.
உள்துறை விவகாரங்கள்
துறையில் வேலை செய்யும் சீ டு க்வாங், ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரிகளை பிடிப்பதே
கடமை என இருக்கிறார். மனைவி, பிள்ளைகள் என இவருக்கு யாருமில்லை. உற்ற நண்பன் கிம் முயூங்கைக்
கூட மனைவியைக் கொன்றதாக குற்றம்சாட்டி பதினைந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கும் அளவு
நேர்மையானவர். இவருக்கு ஜோ சூன் என்ற பெண்ணை உதவியாளராக கமிஷனர் நியமிக்கிறார். ஜோ
முன்னர் தடய அறிவியலில் பணியாற்றியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து குற்றத்தடுப்பு பிரிவு
ஜாங் ரியோங் தேடிக்கொண்டிருக்கும் ஆள் ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சை அளிக்கிறார்கள்.
சீ டு க்வாங்கிற்கு
தான் காப்பாற்றிய ஆள் , குழந்தைகளை கடத்துபவன் என்று கூட தெரிவதில்லை. ஆனால், குற்றப்பிரிவு
தலைவர் ஜாங் ரியோங் ஒருவனை தேடுகிறார் என்றால் அவனை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்.
உண்மையில் சீ டு க்வாங், ஜாங் ரியோங்கை ஊழல் அதிகாரியாகவே பார்க்கிறார். எனவே இருவருக்கும்
எப்போதும் ஆவதில்லை. முட்டலும் உரசலுமாக திரிகிறார்கள். க்வாங், குழந்தை கடத்தல் கொலையாளியைக்
காப்பாற்றும் போது, ஆவேசமும், கோபமும் கொண்ட போக்குவரத்து அதிகாரி யங் கூனை சந்திக்கிறார்.
இந்த இளைஞர் வேறு யாருமில்லை. மனைவியைக் கொன்றதாக சீ டு க்வாங் உள்ளே தள்ளிய அவருடைய
நண்பரான கிம்முயூங்கின் ஒரே மகன்.
யங் கூன்
உள்துறை விவகாரங்கள் துறைக்கு பணிக்கு வருகிறார். உள்துறை விவகாரங்கள் துறை , துணைத்தலைவர்
பார்க் வழிகாட்டலில் இயங்குகிறது. வழக்குரைஞர் ஹான், குற்ற வழக்குகளை எடுத்து நடத்தும்
நபர். அவருக்கு கிம் முயூங்கின் வழக்கு தொடர்பான விசாரணையில், அவரது கட்டை விரலை கொலைக்குற்றவாளி
வெட்டி விடுகிறான். அவன் பெயர் டர்டில்.
கூடவே, அவரின்
கணவர் யூனின் விரலும் சேர்த்து வெட்டுப்படுகிறது. தனக்கு இந்த அநீதியை செய்தவன் யார்
என ஹான் கண்டுபிடிக்க நினைக்கிறார். அப்போது அரசு வழக்குரைஞராக இருப்பவர், பிறகு அந்த
பதவியை விட்டு விலகி காசு கொடுத்தால் குற்றவாளிகளுக்கு கூட ஆதரவாக நிற்கும் கமர்ஷியல்
நிலைப்பாட்டை எடுக்கிறார். பாதுகாப்பிற்கென முன்னாள் கடன் வசூலிக்கும் ஆள் ஒருவரை பாடிகார்ட்டை
நியமித்துக்கொள்கிறார்.
சீ டு க்வாங்கின்
துறை ஊழல் தடுப்பு துறையாக மாற்றம் பெறுகிறது. ஊழல் அதிகாரிகளை விசாரிக்க வழக்குரைஞர்
ஹான், யங் கூன், ஜோ ஆகிய நால்வரும் ஒன்றாக இணைகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு
நோக்கம் இருக்கிறது.
யங் கூனுக்கு
அப்பா அம்மாவை கொலை செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் கோர்ட்டில் அவர்தான் செய்தார்
என சாட்சி சொல்கிறார். இதனால் கிம் முயூங் சிறையில் பதினைந்து ஆண்டுகள் அடைக்கப்படுகிறார்.
இந்த வழக்கை விசாரித்து ஆதாரங்களை பதிவு செய்தவர் சீ டு க்வாங். வாதாடிய அரசு வழக்குரைஞர்
ஹான்.
உண்மையில்
வழக்குரைஞர் ஹான் மட்டுமல்ல. இன்னும் ஏராளமானவர்களுக்கு கையில் கட்டைவிரல் வெட்டப்படுகிறது.
குற்றவாளி என்றால் கொல்லப்படுகின்றனர். அதிகாரி என்றால் கட்டைவிரல் வெட்டு மட்டுமே.
எதற்காக இப்படி கை கட்டைவிரல் வெட்டி எடுக்கப்ட்டு கொல்லப்படுகின்றனர், எதற்கு இந்த
சிக்னேச்சர் கொலைகள் என சீ டு க்வாங் குழுவினர் ஆராய்கின்றனர்.
வாட்சர் டிவி
தொடர் மெதுவாகத்தான் நகர்கிறது. சீ டு க்வாங்காக நடித்துள்ள ஹன் சுக் கியூ என்ற நடிகர்தான்
நாயகன். இவர்தான் தொடரை தூக்கி நிறுத்துகிறார். என்ன யோசிக்கிறார், அடுத்து என்ன செய்யப்போகிறார்
என எதையும் வெளிக்காட்டாத முகம். ஆனால் அனைத்தையும் திட்டமிட்டு செய்கிறார். அவரது
குழுவில் உள்ள ஒருவரே சீ டு க்வாங்கை கண்காணித்தாலும் கூட நிறைய விஷயங்களைக் கணிக்க
முடிவதில்லை. ஊழல் துறையில் வேலை செய்வதால், அவரை பாதுகாக்கும் துணைத்தலைவர் பார்க்கை
கூட முழுமையாக அவர் நம்புவதில்லை.
‘’ஊழல் தொடர்பான
விசாரணை என்பது சுரங்கம் தோண்டுவது மாதிரி. நம்மோட டிரஸ், நமக்கே தெரியாம அழுக்காயிடும்.
கவனமா இருக்கணும்.’’
‘’முன்முடிவோட ஒரு விசாரணையை செஞ்சா குற்றவாளியைப் பிடிக்க முடியாது.
கிடைச்ச தகவல்களை சேர்த்து வரிசைப்படுத்தி அப்புறமாக முடிவெடுக்கணும்’’
‘’எனக்கு
சரின்னு தோணுச்சுன்னா அதை செய்ய நரகத்துக்கே கூட போவேன். சட்டத்தைப் பற்றி எனக்கு கவலையில்ல’’
‘’சின்ன தியாகங்களை
செஞ்சா பெரிய குற்றங்களை தடுக்கலாம்னு சொன்னீங்க. இப்போ தியாகம் பண்ணப்போறது நீங்கதான்.’’
‘’இங்க யாரும்
நல்லவங்க கிடையாது. எல்லோருமே பேராசை பிடிச்சவங்கதான்’’
சீ டு க்வாங்
பாத்திரம் பேசும் வசனங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. அவர் எந்த இடத்திலும் சமநிலை
குலைந்து போவதில்லை. அமைதியாக தன்னுடைய செயல்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஜென்ம
எதிரியான ஜாங் ரியோங்குடன் கைகோர்த்து செயல்படக்கூட தயங்குவதில்லை. அவரையும் தனது வழக்கில்
பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால் அவரை எப்போதும் நம்புவதில்லை. அவருடன் வேலைக்கென சில
ஒப்பந்தங்களைச் செய்துகொள்கிறார்.
பொதுவாக குற்றவாளிகளை
காவல்துறை அதிகாரிகள் உயிரை பணயம் வைத்து பிடிக்கிறார்கள். ஆனால், ஆதாரங்கள் சமர்ப்பிக்கும்போது
ஏற்படும் குளறுபடியால் நீதிமன்றத்தில் தண்டணை குறைவாக கிடைக்கிறது. இதனால் விரக்திக்குள்ளாகும்
காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகளைக் கொல்வதற்கென தனி ரகசிய அமைப்பு ஒன்றைத் தொடங்குகின்றனர்.
ஒருகட்டத்தில் இந்த அமைப்பினர் செய்யும் தொடர் கொலைகள் தடுக்கமுடியாத அளவுக்கு செல்கிறது.
இந்த அமைப்பை ஊழல் தடுப்பு பிரிவு தடுத்து நிறுத்துகிறது. இதை எப்படி செய்கிறது என்பதே
கிளைக்கதை.
ஒருவர் கறைபடிந்தவர்
என தெரிந்தால் அவரை ஊழல் பட்டியலில் சேர்த்து குற்றங்களை வரிசைப்படுத்துகின்றனர். பிறகு
அந்த ரகசிய அமைப்பு தண்டனை தரத் தொடங்குகிறது. பெரும்பாலும் ஊழல் செய்தவரை அடித்து
உதைத்து கை கட்டைவிரலை வெட்டி எடுத்துக்கொண்டு கொன்று போடுகிறது. இதன்மூலம் குற்றம்
குறையும். தவறுகள் களையப்படும் என்பது அந்த அமைப்பின் சித்தாந்தம். காலப்போக்கில் இந்த
அமைப்பு தவறான காரியங்களில் ஈடுபடத்தொடங்குகிறது. அதாவது கட்டற்ற கொலைகள். இதனால் சிலருக்கு
அதிகாரங்கள் கொண்ட பதவி கிடைத்தாலும், பலருடைய குடும்பத்தினருக்கு பாதிப்பு நேருகிறது.
சிலர் சிறை செல்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளே ரகசிய அமைப்பில் இணைந்திருப்பதால்
குற்றவாளிகளை வெளியே சென்று தேடிப்பிடிப்பது கடினமாகிறது.
சீ டு க்வாங்காக
நடித்துள்ள ஹன் சுக் கியூவின் நடிப்பு அபாரமாக உள்ளது. நண்பனை தவறாக புரிந்துகொண்டு
சிறையில் அடைத்து விட்டோமே என குற்றவுணர்ச்சி கொள்வது, நண்பனின் மகனை என்னைப் போல இல்லாமல்
நேர்மையான போலீஸ்காரனாக இருக்கவேண்டுமென கூறுவது,
கொலைகாரனாக தன்னை சந்தேகப்படும் யங் கூனை எச்சரிப்பது, எந்த முடிவையும் வெளிப்படையாக
கூறாமல் மனதிற்குள்ளாக வைத்து காய்களை நகர்த்துவது, சமரசமே செய்துகொள்ளாமல் குற்றவாளிகளைக்
கையாள்வது, தனது துறைத்தலைவருக்கு போலி மாத்திரைகளை கொடுத்துவிட்டு வலியில் துடிக்கும்போது
கேள்வி கேட்பது என நடிப்பில் வெகுவாக வேறுபாடுகளைக் காட்டுகிறார். நல்லவனுக்கு நல்லவன்,
கெட்டவனுக்கு கெட்டவன் என்ற அடிப்படைதான்.
வழக்குரைஞர் ஹான், யங் கூனின் அப்பா கிம் முயூங்கின்
வழக்கை முதல் வழக்காக கையில் எடுத்து நீதிமன்றத்தில் வாதாடுகிறார். ஆனால் ரகசிய அமைப்பின்
ஆட்கள் அவரை வீடு புகுந்து தாக்கி கை கட்டைவிரலை வெட்டிவிடுகின்றனர். கூடுதலாக, அவரது
கணவரின் கட்டைவிரலையும் கண்முன்னே வெட்டுகின்றனர். இதனால் கடுமையான உளவியல் பாதிப்புக்கு
உள்ளாகிறார் ஹான். வெட்டுபட்ட விரலை மறைக்க
மோதிரத்தை பயன்படுத்துகிறார். கணவரை விவாகரத்து செய்வதோடு அரசு வழக்குரைஞர்
பதவியையும் விட்டு விலகி, குற்ற வழக்குகளுக்கான வழக்குரைஞராக மாறுகிறார். கட்டைவிரலை
வெட்டியவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் வெறி ஹானின் மனதில் குறையாமல் இருக்கிறது.
ஆனால், அதற்கான அமைப்பு பலம் இல்லை. எனவே, அவர் காவல்துறையில் ஊழல் ஒழிப்பு பிரிவில்
அவராக இணைந்து சீ டு க்வாங்கின் உதவியைப் பெறுகிறார்.
யங் கூன்,
அவரது தாயை சிறுவனாக இருக்கும்போது இழக்கிறார். கொலை செய்தது அவரது அப்பா என முழு உலகமும்
சொல்கிறது. ஆனால், அவர் அதை நம்பவில்லை. போக்குவரத்து அதிகாரியாக இருப்பவரை விதி ஊழல்
தடுப்பு பிரிவுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலிருந்துதான், அப்பாவின் வழக்கு
பற்றிய உண்மைகளைத் தேடத் தொடங்குகிறார். யங் கூன் இயல்பிலேயே கோபமும் ஆவேசமும் கொண்டவர்.
இதனால், எப்போதும் ஏதாவது ஒரு அடிதடியில் வம்பில் சிக்கி முகம், உடல் என காயங்களோடு
திரிகிறார்.
இவரை ஜாங்
ரியோங் தன்னுடைய குற்றப்பிரிவில் சேர்த்துக்கொள்ள நினைக்கிறார்.ஆனால் யங் கூன் அதை
மறுத்துவிடுகிறார். சீ டு க்வாங்கின் குழுவில் சேர்ந்து வேலை செய்கிறார். யங் கூனுக்கு
தனது அப்பா நேர்மையானவர் என்ற எண்ணம் உண்டு. எனவே, அவரை சிறையில் தள்ளிய சீ டு க்வாங்கை
குற்றவாளி என்ற கோணத்தில் பார்க்கிறார். வழக்குரைஞர் ஹானும் ஒருகட்டத்தில் அதேபோல யோசிக்கத்
தொடங்குகிறார். உண்மையில் யார் குற்றவாளி என அறிய வரும்போது பெரிய ஆச்சரியமெல்லாம்
இல்லை. அப்படியா என்றுதான் தோன்றுகிறது. கதையின் வேகமே அப்படி நிதானமாக உள்ளது. பெரிதாக
உற்சாகம் பெற ஏதுமில்லை. உளவியல் ரீதியாக குற்றத்தை
எப்படி பார்ப்பது. எந்த கோணத்தில் பார்த்தால் உண்மை கிடைக்கும் என ஆய்வு செய்வது ஆகிய
தன்மைகளில் வாட்ச்சர் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
தொடரின் இசை பற்றி கூறவேண்டும். இதில் பின்னணியில் கிடாரின் இசை ஒலிக்கிறது. அந்த இசைக்கோவை உற்சாகம் தரும் விதமாக பல்வேறு டெம்போக்களில் வருகிறது. கேட்டு ரசியுங்கள்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக