மனதிற்கு தேவையான விடுமுறை!

 








நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.

 சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.

 ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார்.

அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.  தொய்வடையாமல் பணிபுரிந்தார்கள். இப்போது அப்படியான மனநிலையைப் பற்றிய சில கருத்துகளைப் பார்ப்போம்.

வார விடுமுறைக்கான நேரம் ஒதுக்குதல்

வியாழக்கிழமை ஆனந்த விகடன் வெளியாகும் நாள். அந்த நாள் தொடங்கி விடுமுறைக்கான மனநிலையை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது ஒரே ஒரு நாள்தான் அதுவும் கறி எடுக்கும் ஞாயிறுதான் விடுமுறை என்றால் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும், வேலைகளை சற்று வேகமாக முடித்துவிட்டு விடுமுறை என நினைத்து செய்யும் செயல்களைச் செய்யலாம். உங்களுக்குப் பிடித்த உங்களை மேம்படுத்தும் அல்லது இலகுவாக்கும் செயல்கள்.

முன்னுரிமையான செயல்கள்

எப்போதும் உள்ளது போல வார விடுமுறையை செலவிடுவது சரியானதல்ல. எனவே, ஒருநாள் உள்ள விடுமுறையை, மனநலனை மேம்படுத்தும் விதமாக மனதில் நச்சுத்தன்மை இல்லாத நண்பர்களை சந்திப்பது, போனின் நோட்டிஃபி கேஷன்களை நிறுத்தி வைப்பது, இதுவரை சந்திக்காதவர்களை அறிமுகம் செய்துகொள்வது என செலவிடலாம். இதெல்லாமே மனதை சற்று புத்துணர்ச்சி கொண்டதாக மாற்றும்.

டூரிஸ்டாக மாறுங்கள்

இன்று டூரிஸ்ட் என்பதை விட ட்ராவலர் என்றால்தான் டிரெண்டிங்காக இருக்கிறது. எனவே, எப்போதும செய்துகொண்டிருக்கும வார இறுதி கடமைகளை செய்யாதீர்கள். வண்டியை எடுங்கள். அல்லது பஸ்சைப் பிடியுங்கள். இதுவரை செல்லாத நகரத்திற்கு செல்லுங்கள். பார்க்கும் நல்ல உணவுக்கடை ஒன்றில் உணவு வாங்கி உண்ணுங்கள். பைக்கில் நகரைச் சுற்றிப் பார்க்கலாம். அல்லது படகு எடுத்துக்கொண்டு கடலுக்குள் கூட சென்று வரலாம். செலவழிக்கும் நேரம் விடுமுறையாக உங்களுக்குத் தோன்றவேண்டும் என்பதுதான் கான்செப்ட்.

நேர்த்தி எனும் அழுத்தம்

அனைத்து விஷயங்களும் நேர்த்தியாக இருக்கவேண்டுமென தன்னைத்தானே வருத்திக்கொள்பவர்கள் உண்டு. இப்படி வருத்திக்கொள்பவர்களால் விடுமுறை என்ற கருத்தையே புரிந்துகொள்ள முடியாது. எனவே, ஏராளமான பெட்டி, படுக்கைகளை தூக்கிக்கொண்டு விடுமுறைக்கு செல்ல நினைக்காதீர்கள். குறைந்த சுமை இருந்தால்தான் அதிக தூரம் பயணிக்க முடியும். மாறாக ஏராளமான திட்டங்கள் போட்டு சுமைகளை தூக்கி சுமந்தால், விரைவிலேயே உங்களை ஆம்புலன்சில் வைத்து மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகிவிடும்.

ஏஞ்சலா ஹாப்ட்

டைம் வார இதழ்

படம் - பின்டிரெஸ்ட்  


கருத்துகள்