காம்பியா நாட்டில் மலேரியாவைக் கண்டறிந்த நாய்!

 







நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.அதனுடன் மனிதர்களை ஒப்பிடக்கூட முடியாது. அந்தளவு தொலைவில் வாசனையைக் கண்டறியும் மோப்ப சக்தியின் இடைவெளி உள்ளது. இரட்டையர்களாக பிறந்தாலும் கூட ஒருவரின் உடல்மணம் வேறுபட்டிருக்கும். நாயால் அதை உடனடியாக கண்டறிய முடியும். ஒருவர் வீட்டுக்கு வரும் வழியில் குப்தா பவனில் சாப்பிட்ட குலோப்ஜாமூன், நண்பரின் செல்ல பூனையைத் தூக்கி கொஞ்சியது. யார்லி சென்ட் மணக்கும் காதலியை கட்டி அணைத்தது, பூங்கொத்துகளை பாராட்டாக நண்பரிடம் பெற்றது என மோப்பம் பிடித்தே நாயால் அனைத்தையும் அறிய முடியும். நான் லீனியராக இருந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியும்.

போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள், கொலை தடயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய அதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் உள்ள மனநிலையை, அவரது உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களை வாசனையை முகர்ந்தே நாயால் உணர முடியும்.

தற்போது, அறிவியலாளர்கள் நாயின் மோப்பம் பிடிக்கும் திறனை அடிப்படையாக கொண்டு வேபர் டிடெக்டர் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு அதன் செயல்திறன் நாயின் மோப்பத் திறனை விஞ்சும் அளவுக்கு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மேம்படுவதற்கு வாய்ப்புள்ளது. நாய் குறிப்பிட்ட பணியை செய்து முடித்தபிறகு அதற்கு பரிசாக உணவுப்பொருட்களை அளித்தே பயிற்சி அளிக்கிறார்கள்.

நாய் தனது மோப்பத் திறனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டறியும் அளவு முன்னேறியுள்ளது. இப்போது உலகில் ஆண்டுக்கு நான்கு லட்சம் பேரை தாக்கி கொல்லும் மலேரியா நோயை, நாயால் கண்டறிய முடிவதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியை லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் ஆய்வாளர்கள் செய்து முடிவை வெளியிட்டுள்ளனர்.

மலேரியா ஒட்டுண்ணியில் அல்டிஹைடு வேதிப்பொருள் உள்ளது. வீட்டில் இரவில் ராகம் பாடி மனிதர்களின் ரத்தம் உறிஞ்சும் கொசுக்களின் உடலில் இதே மூலக்கூறு உள்ளது. எனவே, நாய் இதை அடையாளம் காண்பது எளிதுதானே? மலேரியா நோய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆனால் வெளிப்படையான நோய் அறிகுறி இல்லாதவர்களைக் கூட நாய் அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறது.

 காம்பியா நாட்டில், மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத சிறுவர் சிறுமிகளை  ஆய்வாளர்கள் பட்டியலிட்டனர். பிறகு, அவர்கள் ஒருநாள் முழுக்க அணிந்த ஷூ சாக்ஸ்களை கழற்றி அதை நாய்க்கு முகர கொடுத்தனர். இந்த சோதனையில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எழுபது சதவீதம் கண்டறியப்பட்டனர். பாதிக்கப்படாதவர்களின் அளவு தொண்ணூறு சதவீதமாக இருந்தது.

நாயின் வாயின் மேற்புறமுள்ள பகுதிக்கு ‘ஜேக்கப் ஆர்கன்’ என்று பெயர். இதன் வழியாகவே காற்று உள்ளே சென்று பல்வேறு வகையான வாசனைகளை நாய் அடையாளம் காண்கிறது. மீதியுள்ள காற்று நுரையீரலுக்கு செல்கிறது.

 

image 

pinterest

கருத்துகள்