ஒரு காபியை ஆர்டர் செய்தால் சட்ட ஆலோசனை கிடைக்கும்! லா கஃபே - கொரிய டிராமா
லா கஃபே - கே டிராமா |
லா கஃபே
கொரிய டிராமா
பதினாறு எபிசோடுகள்
ராக்குட்டன்
விக்கி ஆப்
பொதுமக்களின்
பிரச்னைகளுக்காக போராட நினைக்கும் வழக்குரைஞர் கிம் யூ ரி, அதற்காக காபி விற்கும் கடை
ஒன்றைத் திறக்கிறார். உங்களுக்கு சட்ட ஆலோசனை வேண்டுமென்றால், ஒரு காபியை ஆர்டர் செய்து
வாங்கினால் போதும்.
டிவி தொடரில்
நாயகனுக்கு இணையான முக்கியமான பாத்திரமே, கிம் யூரிதான். அவள் ஏன் வழக்குரைஞரானாள்,
அதன் பின்னணி என்ன என்பதை தொடர் பார்க்கும்போது பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ளலாம்.
கண்ணீர் விட்டு நெகிழலாம்.
கிம் யூரி
தனது லா கஃபேயை, கிம் ஜியோங் ஜோ என்பவரது கட்டிடத்தில் தொடங்குகிறாள். அவர் வேறுயாருமல்ல.
பள்ளி, கல்லூரியில் நெருக்கமான தோழனாக, காதலராக இருந்தவர்தான். அவருக்கோ கிம் யூரியைப்
பார்த்தாலே எரிச்சலாகிறது. இவளுக்கு நான் இடத்தை வாடகைக்கு விடமாட்டேன் என அடம்பிடிக்கிறார்.
உண்மையில் கிம் யூரியை அவர் காதலித்தது, கல்யாணம் செய்து ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்ய
நினைத்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அவர் கிம்யூரியை பிரேக் அப் செய்துவிட்டு, அரசு
வழக்குரைஞர் வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு வேலை இல்லாமல் அவ்வப்போது நாவல் எழுதிக்கொண்டு
சுற்றுகிறார். கூடவே கட்டிடத்தை சொந்தமாக வைத்திருப்பதால், அதில் கிடைக்கும் வாடகையே
அவருக்கு போதுமானதாக இருக்கிறது.
கிம் யூரி,
க்வாங் அண்ட கோ என்ற நிறுவனத்தில் பொது நல வழக்குகளை எடுத்து நடத்துகிறாள். ஆனால்,
அவள் பெரிய நிறுவனங்களோடு மோதுவதால், அவர்கள் க்வாங் அண்ட் கோ சட்ட நிறுவனத்தை விட்டு
வெளியேறுகிறார்கள். இதனால் அந்த கம்பெனியே வலுக்கட்டாயமாக அவளுக்கு பிரிவு உபசார விழாவைக்
கொண்டாடி வெளியேற்றுகிறார்கள். கிம் யூரிக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை. பள்ளிக்கூடம்
படிக்கும்போதிலிருந்து இருக்கும் கனவே, கஃபே ஒன்றைத் திறந்து நடத்துவதுதான்.
காபியும்
விற்கவேண்டும். அதேசமயம் சட்ட உதவி என வருபவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்.
இதற்கு அவள் பெறும் பணமும் ஒப்பீட்டளவில் குறைவுதான்.
கிம்யூரிக்கு,
தனது முன்னாள் காதலனது இடத்தில் கஃபே இருப்பது சந்தோஷம் என்றாலும் அவன் ஏராளமான நிபந்தனைகளை
விதிப்பது கஷ்டமாக இருக்கிறது. அவன் ஏன் தன்னை விட்டு விலகினான் என்பதும் அவளுக்கு
புரிவதில்லை. கிம் யூரி மனதளவில் பிறருக்கு நல்லது செய்யவேண்டுமென நினைப்பவள். எதையும்
ஒளிவு மறைவில்லாமல் பேசுபவள். அறிமுகமில்லாதவர் பிரியத்தோடு கோக் கொடுத்தால் கூட பெரிய
மனசு சார் உங்களுக்கு என வாங்கிக் குடிக்கும் அப்பாவி. அதேசமயம் அநீதி என்றால் அங்கேயே
தனது கோபத்தை தேவ்****லே என கெட்டவார்த்தை பேசி வெளிப்படுத்துபவள்.
கிம் ஜியாங்
ஹோவைப் பொறுத்தவரை அவனுக்கும் கிம் யூரிக்கும் கடந்த காலத்தில் அவளது அப்பா இறந்தது
தொடர்பான விவகாரத்தில் பிரச்னை உள்ளது. அதாவது அந்த விஷயத்தில் அவனது அப்பா சம்பந்தப்பட்டிருக்கிறார்.
கிம் யூரியின் அப்பா, பெரு நிறுவனத்தில் நடைபெற்ற விபத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறார்.
ஆனால், அவர் குற்றவாளி அல்ல. அதை அன்றைய அரசு வழக்குரைஞராக இருந்த கிம் ஜியாங் ஹோவின்
அப்பா சரியானபடி நிரூபிக்கத் தவறிவிடுகிறார். உண்மையில் அந்த விவகாரத்தில் நடந்தது
என்ன என்று துப்புதுலக்கி கதை நகர்கிறது. கூடவே, கிம் யூரி சட்ட உதவிகள் வழங்கும் பல்வேறு
வழக்குகள் பற்றியும் நாம் பார்க்கிறோம்.
ஏழை பள்ளிச்சிறுவனை
பணக்கார சிறுவர்கள் கொடுமைப்படுத்துவது, நாடாளுமன்ற உறுப்பினர் தனது பெண் உதவியாளருக்கு
கொடுக்கும் பாலியல் சிக்கல்கள், கிராம பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விளைவிப்பது, குழந்தையை அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் அம்மா, தங்கைக்கு
முறையாக சொத்தை பிரித்துக்கொடுக்காத சகோதரர்கள்
என நிறைய பிரச்னைகள் வருகின்றன. இதில் எல்லாவற்றிலும் முன்னாள் காதலி கிம் யூரிக்க்காக
கிம் ஜியோங் ஹோ களமிறங்கி உதவுகிறார். இதனால் இருவருக்குள்ளும் பிரிந்த காதல் மனம்
மெல்ல ஃபெவிகால் போட்டது போல ஒட்டுகிறது.
பதினாறு எபிசோடுகளிலும்
சிறப்பாக இருக்கிற அம்சம் என்று சொல்வது, நகைச்சுவையைத்தான். தொடர் தொடங்கியது முதற்கொண்டு
நகைச்சுவை முக்கியமாக அங்கமாக தொடர்கிறது. நேரடியாக கதை சொல்லாமல், தொடரின் பாத்திரங்கள் சில நிமிடங்கள் கேமராவைப்
பார்த்து தங்கள் மனதிலுள்ள கருத்தை சொல்கிறார்கள். அதாவது, கிம் யூரி தனது கல்லூரி
சீனியரைப் பார்க்கிறாள் என்றால் அவனைப் பற்றி அவளே மனதிற்குள் பேசிக்கொள்வது போல சொல்கிறாள்.
இவன் ரீசைக்கிள் பண்ண முடியாத குப்பை. இதுபோலவே
தொடரில் வரும் முக்கியமான பாத்திரங்கள் பிறரைப் பற்றி, அந்த நேரத்தில் மனதில்
தோன்றும் விஷயங்களைப் பேசுகிறார்கள்.
தொடரில் ஈர்க்கும்
பாத்திரம் என டோகன் நிறுவனத்தின் இயக்குநர்
லீ யைக் கூறலாம். சற்று மறை கழன்ற ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கிற ஆள். உண்மையில்,
இவர் தொடரில் மெனக்கெட்டு தனது பாத்திரத்தை வேறுபடுத்தி நடித்திருக்கிறார். காலையில்
எழுந்ததும் தூக்க கலக்கம் கலைய தனது பாடிகார்டை விட்டு முகத்தில் அறையச் சொல்வது, வீட்டின்
ஹாலில் த்ரீசம் முயற்சிப்பது, கிம் யூரியை
பயப்படுத்த கஃபேவை உடைத்து அதில் நாயைக் கொன்று வீசுவது, தனது அம்மாவைப் பற்றி பேச
முயற்சிப்பது, மீட்டிங்கில் செருப்பைக் கழற்றி ஊழியர்கள் மத்தியில் வீசுவது என வரும்
காட்சிகளில் வேறு யாரையும் பார்க்க விடாமல் நடித்திருக்கிறார். பிரமாதம்.
அநீதியை தட்டிக்கேட்க
நினைத்து ஆனால் அதற்கு உதவிகளை கிடைக்காமல் போகும் மக்களுக்காகவே லா கஃபே தொடங்கப்படுகிறது.
அதை தொடங்கும் கிம் யூரியும் கூட அப்படி பாதிக்கப்பட்டு நிராதரவாக நின்ற ஒருத்திதான்.
குறிப்பிட்ட
அரசு அமைப்பு அல்லது பெருநிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்ட சட்ட அமைப்புகளில் நீதி
கிடைக்காது. தனியாக நீதி சார்ந்த உணர்வுகளை தீவிரமாக கொண்டவர்கள் முயன்றால்தான் ஏழை மக்களுக்கான நீதி சாத்தியமாகும்
என்பதை இயக்குநர் நம்புகிறார். அதைத்தான் தொடரில் கூறியிருக்கிறார்.
நகைச்சுவைக்காகவும்,குறும்பான
காதலுக்காகவும் தொடரைப் பார்க்கலாம்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக