26 ஆண்டுகால மர்மம் - சிறுமி ஜோன்பென்னட்டை கொன்றது யார்?

 





ஜோன்பென்னட் கல்லறை

ஜோன் பென்னட்டின் குடும்பம்



குற்றவாளியைக் கண்டறிய முடியாத ஆறுவயது சிறுமியின் கொலை வழக்கு!


1996ஆம் ஆண்டு. அமெரிக்காவின் பௌல்டர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி. மொத்த நாடுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தது. கொலராடோ பௌல்டர் காவல்நிலைய அதிகாரிகள் என அனைவருமே விழா கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி அலைகழிக்கப்படும் என அவர்கள் அறியவில்லை.

அடுத்தநாள் காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. ஆறு வயது சிறுமி, அவளது வீட்டின் கீழ்தளத்தில் இறந்து கிடக்கிறாள் என்று. அதிகாரிகள் உடனே ரோந்து வண்டியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போனபோது இறந்துபோன சிறுமியின் பெயர் ஜோன்பெனட் ராம்ஸே என தெரிய வந்தது. அப்பாவித்தனமும், மலர்ந்த புன்னகையுமாக பேரழகியாக வளர்ந்து வரும் சாத்தியங்கள் கொண்டவள். அவள் வீட்டிலேயே அடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு கிடந்தாள்.  

சிறுமியின் அம்மா, பாட்ஸி, அழகுப்போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். இவரது கணவர் ஜான் ராம்ஸே கணினி பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜானுக்கு, பாட்ஸி இரண்டாவது மனைவி. இறந்த ஜோனுக்கு பர்க் என்ற ஒன்பது வயது அண்ணன் உண்டு.

ஜோன்பெனட் ராம்ஸே வழக்கில் இன்று வரை அதாவது 26 ஆண்டுகளாக குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. இன்றுவரை குற்றவாளியை பௌல்டர் காவல்துறையினர் தேடிக்கொண்டே இருக்கின்றனர். குற்றவாளி கிடைத்த பாடில்லை.

2016ஆம் ஆண்டு வரையில், மொத்தம் 140 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். இதில் கொலையான சிறுமி ஜோன்பெனட்டின் பெற்றோரும் கூட உள்ளடக்கம். கொலை வழக்கில் 1,400 ஆதாரங்கள் கிடைத்தன. 50 ஆயிரம் பக்கத்திற்கு விசாரணை ஆவணங்கள் நீண்டன. 21 ஆயிரம் பேர் கொடுத்த துப்புகளை வைத்தது பதினெட்டு மாகாணங்களில் ஆயிரம் பேர்களை காவல்துறை விசாரித்து தளர்ந்து போனது.

உண்மையில் ஆறு வயதுக்கான அப்பாவித்தனத்தோடு புகைப்படத்தில் இருக்கும் ஜோன் பெனட் எப்படி இறந்திருப்பாள்? அவள் நம்புகிற யாரோ ஒருவர் அவளைக் கொல்லும்போது அவளின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? குடும்பத்தில் உள்ளவர், நண்பர், அறிமுகமற்ற வழிப்போக்கர்  என யார் இந்த அநீதியை அவளுக்கு நிகழ்த்தியிருப்பார்கள்?

1996ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் தேதி, காலை 5.52 மணிக்கு 911க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பாட்சி ராம்ஸே, பதற்றத்துடன் பேசினார். ‘’ என்னோட குழந்தையை கடத்திட்டாங்க. கடத்தலுக்கான குறிப்பு இருக்கு. அவளுக்கு ஆறு வயது. தங்க நிறத்தில முடி’’ என கூறி முடித்து மூன்று நிமிடத்தில் பௌல்டர் காவல்நிலைய அதிகாரிகள் யுனிவர்சிட்டி ஹில்லிலுள்ள ஜான் ராம்ஸேயின் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

மொத்த வீட்டின் பரப்பு 6,800 சதுர அடி. வீட்டிலுள்ள பல்வேறு அறைகளைத் தேடினர். அம்மா பாட்ஸி ராம்ஸே கூறியபடி, படுக்கை அறையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டிருபாள் என்றால் அதன் சாத்தியத்தை யோசித்துக் கொண்டிருந்தார்கள். அனைத்து இடங்களும் தேடப்பட்டு விட்டன. ஒரே ஒரு இடம்தான் பாக்கி. அதுதான் வீட்டின் கீழ்தளம். அங்கு கிறிஸ்துமஸிற்கு வந்த பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதிகாரி லிண்டா ஆர்ன்டிட், கீழ்தளத்தை சோதித்து பார்த்துவிடலாம் என்று சொன்னார். அவர் அங்கு சென்று சோதித்தபோது ஜோன் பென்னட் கழுத்தில் நைலான் கயிறு இறுக்கி கொல்லப்பட்டு கிடந்தாள். பிறகு மருத்துவ சோதனையில் மண்டையோடு விரிசல் விட்டு கிடந்தது தெரிய வந்தது. கனமான ஆயுதத்தால் அடித்து பிறகு கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் சிறுமி என காவல்துறை முடிவுக்கு வந்தது.

ஜான் ராம்ஸேவின் குடும்பம்தான் சந்தேகப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் வீட்டின் கீழ்தளத்தில்தான் ஜோன் பென்னட் கொல்லப்பட்டு கிடந்தார். குடும்ப உறுப்பினர்கள் அல்லது வெளியாட்கள் யாரோதான் குற்றத்தை செய்திருக்கவேண்டும். குற்றத்தை செய்தவர், ஜானை நெருக்கமாக அறிந்தவராக இருக்க வாய்ப்பு அதிகம்.

பாட்ஸி ராம்ஸே, வெஸ்ட் வர்ஜூனியாவின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2006ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் இறந்துபோனார். இவரை காவல்துறை தனது மகள் ஜோன்பெனட்டை கொன்றிருக்க வாய்ப்பு அதிகம் என சந்தேகப்பட்டது. ஆனால் பாட்ஸி தனது இறுதிகாலம் வரை காவல்துறையின் குற்றச்சாட்டை மறுத்தே வந்தார்.

பிறரோடு இணக்கமாக பழகுவது, வீட்டில் பெரிய மது விருந்துகளை நடத்துவது பாட்ஸிக்கு பிடித்தமானது. இவரது கணவர் ஜான் ராம்ஸே, எதையும் நேர்த்தியாக இருக்கவேண்டும் என நினைக்கக் கூடிய ஆள். இவர்களுக்கு பிறந்த பெண் பிள்ளையான ஜோன்பென்னட், அந்தளவு நேர்த்தியாக இல்லை. படுக்கையில் பயத்தில் சிறுநீர் கழித்து வந்தாள். அது பாட்ஸியை எரிச்சல் படுத்தியது. இதனால் அவர் கோபத்தின் உச்சத்தில் மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கடத்தல் நாடகம் ஆடுவதாக காவல்துறை சில லாஜிக் அம்சங்களை தினத்தந்தி போல எழுதி வைத்துக்கொண்டு சந்தேகப்பட்டது. 

பாத்ரூமில் வைத்து பாட்ஸி, ஜோனை கொன்றிருக்கலாம். அங்குதான் சிறுமிக்கு தலையில் அடிபட்டிருக்கும். பிறகு அவளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கீழ்தளத்தில் உடலை கொண்டு வந்து போட்டுவிட்டு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். எளிதாக இதை யாருமே கண்டுபிடிக்க முடியாது. என காவல்துறை அதிகாரி ஸ்டீவ் தாமஸ் கூறினார்.

 இதை அவர் ஊடகத்திலேயே பேட்டியாக அளித்தார். மகள் இறந்த சில வாரங்களுக்கு மன அழுத்தம், பதற்றம் தணிக்கும் மாத்திரைகளை பாட்ஸி சாப்பிட்டு வந்ததை  காவல்துறையினர் கண்டறிந்தனர். மனநிலை சீராக இல்லாத அம்மா, மகளை ஏன் கட்டற்ற கோபத்தில் கொன்றிருக்க கூடாது என காவல்துறையினர் யோசித்தனர்.

அவர் யோசித்ததற்கும் நிறைய ஆதாரங்கள் இருந்தன. ஜோன் கழுத்தை நெரித்து கொல்லப்பட பயன்படுத்த நைலான் கயிறு, பாட்ஸியின் ஓவிய பிரஷ்சில் சுற்றப்பட்டு  இருந்தது. கடத்தல் செய்ததாக கூறி பணம் கேட்ட வாசகங்கள் அப்படியே ‘ரான்சம்’, ‘ஸ்பீட்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து நகல் செய்யப்பட்டவை.

கடத்தல் குறிப்பை வெளியில் இருந்த வந்த கொலையாளி எழுதியிருக்க முடியாது . குறிப்பு எப்போது எழுதப்பட்டது என தெரியாதது பலவீனம். அதேசமயம் ‘’ஜானிடம் 1,18,000 டாலர்களை துல்லியமாக எப்படி கேட்டனர். அவரிடம் அந்த தொகை இருக்கிறது என தெரிந்து கேட்டது போலவே இருந்தது.’’ என தடயவியல் வல்லுநர் மருத்துவர் மைக்கேல் பேடன் உறுதிபட கூறினார்.

தற்போது மிச்சிகன் மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ள ஜான் ராம்ஸே, மூன்றாவது திருமணத்தை செய்துகொண்டுவிட்டார். மனைவி பெயர் ஜேன் ரோசக்ஸ். பழைய தொழிலை விட்டுவிட்டு மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரையும் காவல்துறை கொலை செய்துவிட்டு ஏதும் தெரியாதது போல நாடகமாட வாய்ப்புள்ளது என  கருதியது. பொதுவாக கொலை அல்லது விபத்து நடந்தால் அந்த இடத்தை கலைக்காமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், ஜான், தனது இறந்துபோன பெண்ணை கையால் தூக்கி, வாயில் ஒட்டியிருந்த டேப்பை எடுத்தார். இந்த வகையில் சில அடையாளங்களை அவர் அழித்துவிட்டார் என காவல்துறை நினைத்தது.

ஜோனின் அண்ணன் புர்க், ஊடகங்களில் பெரிதாக பேசவில்லை. இதற்கு காரணம், பெற்றோர் அவரை தடுத்து அவர்களே பேசி வந்தனர். 2016ஆம் ஆண்டுதான் பர்க், தானே ஊடகங்களில் தனது சகோதரியின் வழக்கு பற்றி பேசினார்.

சிபிஎஸ் டிவியில் ‘தி கேஸ் ஆஃப் ஜோன்பென்னட்  ராம்ஸே’ என்ற ஆவணப்படம் வெளியானது. அதில், பர்க் தனக்கு அம்மா கொடுத்த அன்னாசி பழத் துண்டுகளை தங்கை எடுத்த தற்காக அவரது தலையில் டார்ச் லைட்டால் அடிக்கிறார். இதனால் பாதிக்கப்பட்டு தங்கை இறந்துபோகிறாள். அதை மறைக்க பெற்றோர் கடத்தல் நாடகம் ஆடினர் என ஒரு கதையை சொல்லி நிகழ்ச்சியாக ஒளிபரப்பினர். இதனால் எரிச்சலான பர்க், வழக்குரைஞர் மூலமாக மானநஷ்ட வழக்கு போட்டு அதன் வழியாக 750 மில்லியன் டாலர்களை இழப்பீடாக கேட்டார் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் வழக்கை  நீதிமன்றத்திற்கு வெளியே காசு கொடுத்து தீர்த்துக்கொண்டது.

2008ஆம் ஆண்டு ஜோன்பென்னட் வழக்கில், குடும்ப உறுப்பினர்கள் மீதான சந்தேகம், குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. பௌல்டர் மாவட்ட வழக்குரைஞர் மேரி லேஸி, சிறுமி கொலையானதில் குடும்ப உறுப்பினர்களை குற்றம்சாட்ட போதிய ஆதாரமில்லை என்பதை ஏற்றார். ஆதாரம் இல்லை என்றாலும் கூட அரசு வழக்குரைஞரின் கருத்தை காவல்துறை அதிகாரிகளே மனப்பூர்வமாக ஏற்கவில்லை.

ஏனெனில் பெற்றோர் இருவருமே கூட சிறுமி ஜோனை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறாள் என்பதற்காக துன்புறுத்தி கொன்றிருக்கலாம். அதை திட்டமிட்டு கடத்தல் போல மாற்றி அமைத்திருக்கலாம் என நினைத்தனர். 2013இல் இதற்கான ஆதாரங்கள் கிடைத்தாலும் அவை போதுமானதாக இருக்குமா காவல்துறையினருக்கே சந்தேகம் இருந்தது.

குடும்பத்தை தாண்டி வெளிவட்டாரத்தில் இருந்த சந்தேக ஆட்கள் பட்டியலைப் பார்ப்போம். இதில் முதல் ஆளாக கண்ணில் படுபவர், மெக் ரினால்ட்ஸ். இவர், சாண்டாகிளாஸ் வேஷம் போட்டு உள்ளூர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நபர். 1974ஆம் ஆண்டு இவரின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இவர், ராம்ஸேவின் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றவர்களில் ஒருவர்.

விழாவில், சிறுமி ஜோனுக்கு தங்க நகை ஒன்றை பரிசாக கொடுத்தார். இந்த நகையை அவர் பல்லாண்டுகளாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார் என கூறப்படுகிறது. இதற்குப்பிறகு, மெக் ரினால்ட்ஸின் மனைவி, நாடகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தனது வீட்டின் கீழ்தளத்தில் குழந்தை ஒன்றை வல்லுறவு செய்து கொல்வது பற்றிய மையப்பொருளைக் கொண்டது.  இதெல்லாமே அவர் மீது சந்தேகம் வர காரணமாக அமைந்தது. மெக்ரினால்ட்ஸ் பற்றிய மரபணு சோதனை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டு நடத்தப்பட்டது.

அடுத்து,  சிறுமி கொலையான இடத்தில் கிடைத்த ஷூ தடம் அங்கு வேலை செய்த தொழிலாளி மைக்கேல் ஹெல்கோத்தோடு பொருத்தமாக இருந்தது. இவர் 1997ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அடுத்து, குழந்தைகளை வல்லுறவு செய்து கொல்லும் குற்றவாளி கேரி ஒலிவா. இவர் ஜோன் இறந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறுமியை தான் கொன்றதாக நண்பரிடம் பெருமை அடித்துக்கொண்டிருக்கிறார். மேற்சொன்ன இருவரும் காவல்துறையால் விசாரித்து விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். 2006ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க பள்ளி ஆசிரியர் ஜான் மார்க் கார், சிறுமி ஜோன் இறந்தபோது தான்அருகில் இருந்ததாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார். ஆனால் டிஎன்ஏ சோதனையில் இவரும் விடுதலையானார்.

மேற்சொன்ன அனைத்து விஷயங்களையும் கடந்து ஜோபென்னட்டின் வழக்கில் சில வாதங்களை முன்வைத்த அதிகாரி ஒருவர் உண்டு. அவர் பெயர். லூ ஸ்மித். கொலராடோ காவல்துறையில் டிடெக்டிவாக இருந்து ஓய்வு பெற்றவர். கொலை வழக்குகளை கண்டுபிடித்து துப்பு துலக்குவதில் அர்ப்பணிப்பானவர். இவர், சிறுமி ஜோனின் வழக்கில் கொலையாளி வீட்டுக்குள் நுழைந்த அந்நியன்தான். குடும்பத்தினர் அல்ல என்று கூறி அதற்கான ஆதாரங்களாக உடைந்த ஜன்னல், சிறுமியின் உடையில் இருந்த டிஎன்ஏ, காலணியின் தடம், சிறுமியின் நகம் ஆகியவற்றைக் கூறினார். ஆனால் அதை தடய அறிவியல் துறையினர் முறையான ஆதாரங்கள் கிடையாது என மறுத்துவிட்டனர்.

லூ ஸ்மித் தனது பர்சில் இறந்துபோன ஜோபென்னட்டின் புகைப்படத்தை கடைசி நாள் வரை வைத்திருந்தார். இவர், 2010ஆம் ஆண்டு காலமானார். குற்றவாளியைக் கண்டறிய முடியாத வழக்கு என அவர் நினைத்திரருக்கலாம்.

 2021ஆம் ஆண்டு ‘ஜோபென்னட் ராம்ஸே வாட் ரியலி ஹேப்பன்ட்?’ என்ற ஆவணப்படம் டிஸ்கவரி டாகுமெண்டரியாக வெளியானது. இதில், காவல்துறை ராம்ஸேவின் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டியதால் உண்மையான குற்றவாளியை பிடிக்கமுடியவில்லை என்று வெளிப்படையாக புகார் கூறப்படுகிறது. பௌல்டர் காவல்துறை, இப்போதும் கூட சிறுமி கொலை வழக்கு பற்றி துப்புதுலக்கி வருகிறது.

பீப்பிள் இதழ்

ரிச்சர்ட் ஜெரோம்

 

 


கருத்துகள்