புற்றுநோயால் அவதிப்படும் ஹோட்டல் அதிபரின் பேரனாக நடிக்கும் நாடக நடிகர்! - கர்டைன் கால்

 





கர்டைன் கால் - கே டிராமா






 

கர்டைன் கால்

கே டிராமா

பதினாறு எபிசோடுகள்

ராக்குட்டன் விக்கி ஆப்

 

நாக்வோன் ஹோட்டல் தலைவரான ஜேயும் என்ற பெண்மணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாத கெடு விதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவர் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு வந்து ஹோட்டல் வைத்து வெற்றிபெற்று பணக்காரர் ஆனவர். வடகொரியாவில் அவருக்கு கணவரும், யுன் ஜூன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. அவர்களை தென்கொரியாவுக்கு கூட்டி வர நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமாகவில்லை.

பேரன் முன் சாங்கையேனும் கூட்டி வந்து நல்ல முறையில் வாழவைக்க நினைக்கிறார். இதற்காக அவரது மேனேஜர் முன் சாங்கை தேடுகிறார். முன் ஜாங் கிடைக்கிறார். ஆனால்,  அவர் வன்முறையான பணத்திற்கு எதையும் செய்யும் அடியாளாக இருக்கிறார்.  இதனால் மிரண்ட மேனேஜர் நாடக நடிகர் ஜேனை காசு கொடுத்து பேரனாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவரும் காசுக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார். அவரது நாடகஅரங்கு தோழியான யுன் ஹூய்யும் சேர்ந்து கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். இவர்கள் போலியானவர்கள் என ஹோட்டல் தலைவர் பெண்மணி, அவரது பேரன், பேத்திகள் கண்டுபிடித்தார்களா என்பதே கதை. கதை நெகிழ்ச்சியான பின்னணியைக் கொண்டது.

வடகொரியா, தென்கொரியா போரை பின்னணியாக கொண்ட டிவி தொடர். தொடக்க காட்சியிலே மக்கள் , கிளம்ப தயாராக உள்ள கப்பலில் தப்பித்து செல்ல வருகிறார்கள். ஆனால், ஜேயுமின் கணவன் மனைவியையும், இன்னொருவரின் ஒரு குழந்தையையும் கப்பலில் ஏற்றிவிட்டு தான் ஏற முடியாமல் கயிறு அறுந்துபோக வடகொரியாவில் தங்கிவிடுகிறான்.

ஜேயும் வேறு வழியில்லாமல் கப்பல் மூலம் தென்கொரியா வருகிறார். அங்கு அரிசி சூப் செய்துகொடுக்கும் கடை வைத்து பிழைக்கிறார். அப்போது அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரை மணந்துகொள்கிறார். மெல்ல அரிசி சூப் கடையை பெரிதாக்கி நாக்வோன் எனும் ஹோட்டலை உருவாக்குகிறார்.

சியோலில்  கடற்கரை அருகே உள்ள நாக்வோன் ஹோட்டல், கலங்கரை விளக்கம் போல உள்ளது. ஏறத்தாழ கடலில் வடகொரியாவில் இருந்து வருபவர்களுக்கு உதவுவது போன்ற இயல்பில் உருவான ஹோட்டல் அது. என்றாவது ஒருநாள் தனது பேரன் முன் சாங், கப்பலில் கடலில் பயணித்து தன்னை வந்து சேர்வான் என நினைக்கிறார் ஜேயும். ஆனால் புற்றுநோய் மெல்ல பரவி வளர்ந்துகொண்டிருக்கிறது.

அவரை சற்றேனும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மேனேஜர் நினைக்கிறார். எனவே, போலியாக நாடக நடிகர் ஜேனைப் பிடித்து  நடிக்க வைக்கிறார். அவர் எதேச்சையாக கொரிய போரை அடிப்படையாக கொண்ட நாடகத்தைப்பார்க்க நேருகிறது. அதில் வடகொரிய அதிகாரியாக நடித்த ஜேனின் நடிப்பு பிடித்துப்போகிறது. அதற்கு முக்கியமான காரணம், அவர் பேசும் வடகொரிய  உச்சரிப்பு.

போலியாக ஜேனை பேரனாக உருவாக்கி, உண்மையான முன் சாங்கைப் பற்றிய தகவல்களை படிக்க கொடுத்து குடும்ப உறுப்பினர்களை எப்படி அணுகுவது என பாடம் கற்றுக்கொடுக்கிறார். இதன்படியே அவர்கள் தம்பதிகளாக வந்து நடிக்கிறார்கள்.

நாடக நடிகராக மூன்று மாதங்கள் நடிக்க, பெரும்தொகையைப் பெற்றுக்கொண்டு ஜேன் நடிக்கிறார்.  இந்த வகையில், அவர் நடிக்கும் நாடக அரங்கு என்பது எல்லைகளே இல்லாதது. இதில் அவர் நடிகர் என்பது மேனேஜருக்கு மட்டுமே தெரியும். இது நடிகரான ஜேனுக்கு பெரும் சவாலாக மாறுகிறது.

குடும்பத்தில் என்ன பிரச்னை இருக்கிறது? சே யுன், சே க்யூ, சே இயோன் என மூன்று பிள்ளைகள். சே யுன்னுக்கு தனது பாட்டி வடகொரியாவில் உள்ள குடும்பம் மீதுதான் பாசம் காட்டுகிறார். எனவே, அதன் அடையாளமாக உள்ள நக்வோன் ஹோட்டலை விற்கவேண்டுமென நினைக்கிறார். ஹோட்டலுக்கான பணியில், விமான விபத்தில் அவரது பெற்றோர் இறந்துபோனதும் கோபத்திற்கான முக்கியமான காரணம்.

சே இயோன், பாட்டியின் மீது பேரன்பு கொண்ட பேத்தி. அப்படியே பாட்டியின் இளமைக்கால தோற்றத்தில் உள்ளவர். அவருக்கு நக்வோன் ஹோட்டலை விற்காமல் காப்பாற்றி நடத்தவேண்டும் என்பதே ஆசை. அதற்காக தனது ஹோட்டல் பங்குகளை வைத்துள்ள பள்ளிகால தோழரை மணம் செய்துகொள்ளக் கூட துணிகிறார்.

சே க்யூ என்ற சே இயோனின் இரண்டாவது அண்ணன். பார் , கிளப், பார்ட்டி என காஸனோவாவாக  திரிகிறார். பாட்டி மீது அன்பு கொண்டாலும் கூட அண்ணன், தங்கை என யாருடைய பக்கமும் போகாமல் அவர் பாட்டிற்கு அவர் வழியே செல்கிறார். தொடர் முழுக்க விளையாட்டுத்தனம் கொண்டவராக காட்டப்படுகிறார். ஆனால் இருப்பதிலேயே முதிர்ச்சியான ஆள் அவர்தான் என சிற்சில கணங்களில் அவரது பாத்திரத்தை இயக்குநர் வெளிப்படுத்துகிறார்.

ஜேயும் என்ற பாட்டி பாத்திரத்தில் நடித்துள்ளவர் அற்புதமாக நடித்துள்ளார். மனதில் நிறையும் குற்றவுணர்ச்சியை போக்கும் வழி தெரியாமல் அல்லாடுகிறார். அதேசமயம், தான் கனவு கண்டு உருவாக்கிய ஹோட்டலை பேரன் விற்க முனைவது கண்டு நொந்துபோய் பேசுவது, தனது பேத்தி சீ இயோனுடன் கடந்தகாலத்தை மகிழ்ச்சியாக பேசுவது, காணாமல் போன பேரன் வந்ததும் அவனுக்கு தன்  கையால் அரிசி சூப் தயாரித்து பரிமாறுவது என அற்புதமாக நடித்திருக்கிறார். இவரது பேரனாக பின்பகுதியில் இறுக்கமாக வந்து பிறகு நெகிழ்ந்து போனவராக மாறுகிறார் அசல் முன் சாங்.

தொடர் முழுக்க பாட்டி, பேரனுக்கான நெகிழ்ச்சியான உறவு குறித்து பேசுகிறது. எனவே, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்தால் போதும். இரண்டு முக்கியமான கதைகள் உள்ளன. போலியான பேரன் பற்றிய உண்மைகள் வெளிப்படுமா, நக்வோன் ஹோட்டல் பாட்டி வாழும்போதே விற்கப்பட்டுவிடுமா என்பதுதான் அவை. இரண்டிலும் பேரன் பற்றிய கதைதான் நன்றாக இருக்கிறது. ஏனெனில் அதில்தான் உயிரோட்டம் இருக்கிறது.

மூன்றுமாதத்தில் பாட்டி இறக்கப்போகிறார். அதற்குள் அவர் தனது மனதில் குற்ற உணர்ச்சி இல்லாமல் பேரனுடன் நேரம் செலவழித்துவிட்டு இறந்துபோகவேண்டும். அதற்கேற்ப கனிவான, இரக்கம் கொண்ட வெகுளியான தோற்றம் கொண்ட ஜேனை முன் சாங்காக உருவாக்குகிறார்கள். நாடக நடிகரும் குடும்ப உறுப்பினர்கள் மறுக்க மறக்கவே முடியாத நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்.

நடிப்பில் ஆழமாக இணைந்துகொள்ள அவருக்கு கடந்தகாலம் உதவியாக இருக்கிறது. ஜேனை பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு அழைத்துச் சென்று ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்துவிட்டு அவரது அம்மா அவரை கைவிட்டு செல்கிறார். ஆதரவற்றவராக வளர்ந்து பெரிய புகழ் இல்லாத நாடக நடிகனாக இருக்கிறார். அவரை  கூட நடிக்கும் யுன் ஹூய் காதலிக்கிறார். தனது காதலை அவர் ஜேனுக்கு கடைசி வரையில் கூறுவதில்லை.

‘’ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட பொய் சொல்லி அதை அவர் கண்டுபிடிக்கமுடியலீன்னாலும் அது பொய்தான்.’’

‘’ஒருத்தர் சொல்ற பொய்யை இன்னொருத்தர் பொய்னு தெரிஞ்சாலும் அதை வெளியே காட்டிக்காம அதை நம்பறார்னா அது பொய்யில்லை’’

‘’எல்லாம் இருந்தும் நாம முன் சாங்குக்கு கொடுக்க மாட்டேங்குறோம். ஆனா, அவன்கிட்ட எதுவுமே இல்ல. ஆனா, தன்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் மத்தவங்களுக்கு கொடுக்குறான். அவனால எப்படி முடியுது? ’’’

 இப்படி நெகிழ்ச்சியான வசனங்கள் தொடரில் உண்டு.

சீக்ரெட் கார்டன் டிவி தொடரில் ஹாஜி வோனின் நடிப்பு பிரமாதாக இருந்த து. அதற்குப்பிறகு அவரை இந்த தொடரில் பார்க்கிறேன். பாட்டியின் இளமைக்கால தோற்றம், பேத்தி என இரண்டு வேறுபட்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இரண்டையும் பிரமாதமாக வேறுபடுத்தி நடித்திருக்கிறார். மனம் நிறைந்து சிரிக்கும்போது, புன்னகைக்கும்போது, பார்க்கும் நமது இதயம் துடிப்பதை நாமே மறந்துபோகிறோம். முகமும், உணர்வை வெளிப்படுத்தும் தீட்சண்யமான கண்களும் அவ்வளவு அழகு.

முன் சாங்கின் (ஜேன்) மீது  மெல்ல ஈர்ப்பு ஏற்பட்டு காதலாவது, அவர் யாரென உண்மை தெரிந்து கோபப்படுவது, பிறகு இருவரும் மெல்ல ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, இறுதியாக ஜேனுடன் சேர்ந்து சிறிய உணவகத்தில் மகிழ்ச்சியாக சாப்பிட்டு புதிய உறவைத் தொடங்குவது என நன்றாக நடித்திருக்கிறார்.

முக்கியமான பாத்திரமாக மேனேஜரைக் கூறவேண்டும். அவர்தான் தொடரின் ஆதாரமான விஷயங்களை செய்கிறார். நாடகத்தை நடத்துபவரே அவர்தான். தனது கடந்த கால ஆபத்தான வாழ்க்கையில் இருந்து நேர்வழிக்கு கொண்டு வந்த முதலாளி அம்மாவுக்கு கடைசி ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வது, அதனால் துரோகி என குடும்பம் தூற்றினாலும் கூட கவலைப்படாமல் நான் குற்றவுணர்ச்சி கொள்ளமாட்டேன் என்று கூறுவது என அட்டகாச அசகாய நடிப்பு.  இறுதியாக அவர் முதலாளியம்மா, மரணப்படுக்கையில் இருக்கும்போது சொத்துக்காக பேரப்பிள்ளைகள் அடித்துக்கொள்ளும்போது ‘அன்கிரேட்புல் பாஸ்டர்ட்ஸ்’ என திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறுவது என அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

வரலாற்றுப் பின்னணியில் நெகிழ்ச்சியான கதையைப் பார்க்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு, கர்டைன் கால் நல்ல தேர்வு.

கோமாளிமேடை டீம்









First episode date: 31 October 2022 (South Korea)
Final episode date: 27 December 2022
Directed by: Yoon Sang-ho
Executive producers: Kwon Gye-hong (KBS); Ahn Su-jin (CP); Chu Jae-soon (CP)
Genre: Melodrama
Hangul: 커튼콜

https://asianwiki.com/Curtain_Call_(Korean_Drama)

கருத்துகள்