இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள ஜனநாயகம்!

 



பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்ப்பு




நமது மரபணுக்களில் ஜனநாயகம் உள்ளதா?

இந்திய பிரதமர், அண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அங்கு சென்று உரையாற்றியதில் அவர் ஒரு விஷயத்தை மட்டும் தவறவிட்டுவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மனித உரிமைகள் இந்தியாவில் எப்படி நசுக்கப்பட்டன என்பதைக் கூறவில்லை.

அமெரிக்க அதிபர்  மனித உரிமை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம். வெள்ளை மாளிகையில் மோடியின் வருகையொட்டி பூக்களின் அலங்காரம் செய்யப்ப்பட்டிருந்தது. மேசையில் சைவ உணவு பரிமாறப்பட்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் ஊடக சந்திப்பில் அமெரிக்க நிருபர் மனித உரிமைகள் பற்றி கேள்வியைக் கேட்டார். உடனே  மோடி மறைமுகமாக ‘’ஜனநாயகம் எங்கள் மரபணுக்களில் உள்ளது. அதுதான் எங்கள் ஆன்மா. எங்கள் ரத்த நாளங்களில்  ஓடுகிறது’’ என்று உரையாற்றினார்.

பிரதமர் கூறியதில் சற்றும் உண்மை இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுக்களை வளர்க்கும் முஸ்லீம்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கண்காணிக்கப்பட்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டனர். அல்லது திட்டமிட்டு மதவாத கும்பல்களால் கொல்லப்பட்டனர். பிரதமர் மோடி இதைப்பற்றி எந்த கண்டனமும் தெரிவித்தது கிடையாது. இப்படி தாக்குதல்கள் தினசரி நடந்து வரத் தொடங்கியதால் அவை ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்படுவது நின்றுவிட்டது.

அடுத்து முக்கியமாக பாஜக முதலமைச்சர்கள் ‘லவ் ஜிகாத்’ என்பதைக் கையில் எடுத்தனர். எங்கு வன்முறை, கலவரம், உரிமைக்கான போராட்டம் நேருகிறதோ அங்கு சென்று அதில் பங்கேற்ற முஸ்லீம்களின் வீடுகளை, தொழிற்சாலைகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளத் தொடங்கினர்.

ஜனநாயகம் மரபணுக்களில் இருந்தாலும் கூட முஸ்லீம்களின் சொத்துகளை புல்டோசர்கள் குறிவைத்து தாக்கி அழிப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. புல்டோசர் மூலம் நீதி வழங்கும்  அதிகாரிகள், சட்டத்தின் பெயராலே அநீதியை செய்கிறார்கள்.

இந்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாலையும், மரியாதையும் இந்தியர்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். சாமானிய மக்களுக்கு மோடி தான் செய்த செயல்களுக்காக, அந்நிய நாட்டில் கூட வரவேற்பை பெருகிறார் என நினைத்திருப்பார்கள். அதில் நமக்கு எந்த கேள்வியும் இல்லை.  பிரதமர் மோடி, இந்த அமெரிக்க பயணத்திலாவது உண்மையான ஜனநாயகம் என்னவென்பதைப் புரிந்துகொள்வார் என நம்பலாம். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் சட்டமே சுதந்திரமான பேச்சுரிமைதான். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்தியாவில் அதை கட்டுப்படுத்துவது பற்றிய சட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், நமது பாரத மாதாவுக்கு சுதந்திரமான பேச்சுரிமையும் செயல்பாடும் மறுக்கப்பட்டது போல வரலாற்றில் எப்போதும் நடந்தது இல்லை. குடிமக்கள், போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள், பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். அது, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என இந்திய அரசு காரணம் கூறியது. இதுதான் இப்போதைய சுதந்திரமற்ற ஜனநாயகமாக இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

அமெரிக்காவுடன் நட்புறவு காட்டும் மோடி உண்மையில் தனது ஜனநாயகத்தை நசுக்கும் செயல்பாட்டிற்கு அவமானப்பட்டு கூனிக்குறுக வேண்டும். ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு நேரடியாக அந்நாட்டினை கண்டனம் தெரிவித்து பேசாதவர் மோடி.

இவருக்கு முந்தைய பிரதமர்கள் ரஷ்யாவை நட்பு நாடு என்பதோடு பார்க்காமல் அதை இந்திய நாட்டிற்கான ரோல் மாடலாகவே பார்த்து வந்தனர். ஆனால், பிரதமர் மோடி அமெரிக்காவை  இந்தியாவுக்கு நெருங்கிய நண்பனாக நினைக்கிறார்

 ரஷ்யாவை விட ஆழமாக இந்த உறவு உருவாகியுள்ளது.  இத்தனைக்கும் அமெரிக்கா, மோடிக்கு குஜராத் கலவரம் காரணமாக பத்தாண்டுகள் விசா தராமல் நிறுத்தி வைத்திருந்தது. இதுபோல ஒரு அவலம் பிரதமராக இருந்த ராஜீவ்காந்திக்கோ, அவசரநிலையை அமல்படுத்திய இந்திராகாந்திக்கோ கூட நேரவில்லை.

 மோடியின் அமெரிக்க பயணம் சற்றேனும் முக்கியத்துவம் கொண்டதாக மாற வேண்டுமெனில் அவர், வெறும் பேச்சாக பேச்சுரிமை பற்றி கூறாமல் செயல்பாட்டில் அதைக் காட்ட வேண்டும். உண்மையில் பேச்சுரிமை பற்றிய பயம் கொண்ட அதைக் கட்டுப்படுத்த நினைப்பவருக்கு அதிக ஒப்புதல், அங்கீகாரம் மக்களிடையே உள்ளது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்றாகவே உள்ளது..

அமெரிக்காவுக்கு மோடி சென்றதை இந்திய ஊடகங்கள் சியர்லீடர்ஸ் போல கொண்டாடி மகிழ்ந்து அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடின. பிரபலமான செய்தி தொகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் துதிபாடிகளாக மாறியிருந்தனர். இதைப் பார்க்கும்போது அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் டிவி சேனல்கள் நினைவுக்கு வருகிறது. எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அதற்கேற்ப துதி பாடும் நிகழ்ச்சிகள் அரசு டிவி சேனலில் ஒளிபரப்பாவதே வழக்கம். ஏனெனில் அந்த டிவி சேனல்களை அப்படித்தான் செயல்பட அனுமதித்தனர். ஆனால், அப்படி செயல்படுவது உண்மையான இதழியல் அறம் அல்ல. அரசுக்கு எதிராக செயல்பட்டு உண்மையைப் பேசியவர்கள் அதற்கேற்ப மோசமான பின்விளைவுகளை சந்தித்தனர்.

பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை குற்றங்களாக பார்க்கும் நாடாக இந்தியா மாறிவிட்டது. சிறுபான்மையினர் தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டு தாக்கி கொல்லப்படுகின்றனர். எதிர்க்கட்சியினர் தலையெடுக்கக முடியாதபடி நசுக்கப்படுகின்றனர். இதற்கு அரசதிகாரம் உதவுகிறது. உண்மையில் இந்த செயல்பாடுகளை யாரும் ஜனநாயகம் என்று கூறமாட்டார்கள். உண்மையில் அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் சுற்றுப்பயணம் சென்று வந்து அதன் விளைவாக ஜனநாயகம் பற்றிய அறிவைப் பெற்றால் அவரை விட அவரது நாட்டு மக்களான நமக்கே அதிக பயன் கிடைக்கும்.

 

 

தவ்லீன் சிங்

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்

https://in.pinterest.com/pin/1900024836596407/

கருத்துகள்