மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி! கோக்கோ காஃப்

 



 

 

கோக்கோ காஃப்

கோகோ காஃப், அமெரிக்க டென்னிஸ் வீரர்





மக்களுக்கு நேரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது அநீதி!

இப்படி சொன்னது யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்? மதவாத கும்பலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மனித உரிமை போராளி என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இந்த கட்டுரையில் வாய்ப்பில்லை. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வாழும் வளரும் டென்னிஸ் நட்சத்திர வீரரான கோகோ காஃப்தான், மேலே தலைப்பில் உள்ளதை சொன்னவர்.

கோகோவுக்கு வயது பத்தொன்பதுதான். இப்போதே அவர் கறுப்பின மக்களுக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடுகளுக்கு எதிரான செயல்பாடு என்ன குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். டென்னிஸ் வீரர், தனது விளையாட்டை ஒழுங்காக  அமைதியாக விளையாடினால் போதும் என்று சிலர் கூறியதற்கு , அதை அநீதி என்று கூறும் துணிச்சலும் மனதிடமும் கோகோவுக்கு உண்டு.

அவரது பாட்டி, 1961ஆம் ஆண்டு பள்ளியில் படித்தபோது பேஸ்கட்பால் வீரராக இருந்தார். ஆனால் பள்ளியில் படித்த ஒரே கறுப்பின பெண் அவர்தான் என்பதால், விதிகள் கேள்விகள் அதிகம் இருந்தன. இனவெறியின் உச்சமாக அவர் கழிவறையைப் பயன்படுத்துவதை கூட தடுத்தனர். ஆனால், இன்று நிலைமை நிறைய மாறிவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தால் இனவெறி இன்றுள்ள அளவுக்கு இருக்காது. அப்படி நம்பவும் இடமிருக்கிறது. கோகோ, தனது பாட்டியின் கதையில் இருந்து ஊக்கம் பெற்றார். அதனால் அவர் செய்யும் செயல்கள் பற்றிய பிறரின் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை.

பத்தொன்பது வயதாகும் கோகோ, வீனஸ், செரினா ஆகியோரை விம்பிள்டன் போட்டியில் தோற்கடித்துள்ளார். தொடக்க காலத்தில் குத்துச்சண்டை வீரராக  மாற முயன்றிருக்கிறார். ஆனால், கையிலுள்ள விரல் நகங்கள் போட்டியாளரை குத்தும்போது உடைந்தது. மேலும் முகத்தில் குத்துகளை வாங்கி காயம்பட அவர் விரும்பவில்லை. எனவே, இப்படி எந்த பிரச்னையும் இல்லாத ஆனால் கடும் உழைப்பைக் கோரும் டென்னிசுக்கு வந்தார்.

 2019ஆம் ஆண்டு விம்பிள்டனில் மிக குறைந்த வயதில் பங்கு பெற்ற டென்னிஸ் வீரர் என்ற புகழைப் பெற்றார். அமெரிக்க டென்னிஸ் வீரர்களில் கவனிக்கப்படும் வீரராக  உருவாகி வந்துகொண்டிருக்கிறார். இரட்டையர் போட்டிகளில் ஜெசிகா பெகுலாவோடு இணைந்து ஆடுகிறார். இவர், கோகோவை விட பத்து வயது மூத்தவர்.

கிராண்ட்ஸ்லாம் பெறுவதற்கான கடைசிகட்ட முயற்சியில் ஐகா ஸ்வியாடெக் என்ற வீரரிடம் தோற்றுப்போனார். அதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்து நடந்த போட்டியில் நான்காவது சுற்றில் ஐகாவைத் தோற்கடித்தார்.

கோகோ காஃபுக்கு ரோல்மாடல் என்றால் அது வீனஸ் மற்றும் செரினா ஆகியோர்தான். அவர்கள் கூறிய ஆட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆடிவருகிறார். கைகளை பின்னிழுத்து ஷாட் ஆடுவதில் கோகோ திறமையானவர். உண்மையில் டென்னிஸ் போட்டி முன்னைப்போல எளிதாக இருப்பது இல்லை. குறிப்பாக பெண் வீரர்களுக்கு , கடுமையான மன அழுத்தம் தருவதாக உள்ளது.

பிரபலமான டென்னிஸ் வீரர்களான ஆஸ்லெய் பார்டி, நவோமி ஒசாகா ஆகியோர் மனநலன் பிரச்னைகளால் போட்டியிலிருந்து விலகியது விளையாட்டு ஆர்வலர்களை கவலைப்பட வைத்தது. கோக்கோவைப பொறுத்தவரை விளையாட்டுப் போட்டிகளுக்குத் துணையாக அவரது பெற்றோர் வந்துவிடுகிறார்கள். தனது பெரிய ஆதரவும் ஆறுதலுமாக குடும்பமே உள்ளது என்கிறவர், கறுப்பின பெண்கள் பலரும் டென்னிஸ் விளையாட வருவதற்கு ரோல்மாடலாக இருக்கிறார்.

கோகோவின் அப்பாதான். அவரின் பயிற்சியாளராக இருக்கிறார். மருத்துவத்துறையில் வேலை பார்த்துவந்தவர், தனது வேலையை கைவிட்டு மகளுக்கு உதவினார். அவரது அம்மா கேண்டி, ஆசிரியராக பணியாற்றி வந்தார். தனது வேலையை கைவிட்டு மகளுக்கு வீட்டில் பாடங்களை சொல்லிக் கொடுத்து வருகிறார். கோகோவிற்கு பெரும்பாலான நேரங்கள் பயிற்சியில் செல்கிறது. மீதியுள்ள நேரத்தில் டிக்டொக் வீடியோக்களை பதிவிடுகிறார். இப்படி வீடியோக்களை பதிவிடுவதன் வழியாக சமூகம் சார்ந்த இணைப்பு அறுபடாமல் இருக்கிறது.

அப்சர்வர் மேகசின்


கருத்துகள்