விண்வெளியில் பேரரசைக் கட்டும் சீனா! - விண்வெளியில் சாதித்தது எப்படி?

 

 







இடதுபுறத்தில் விஞ்ஞானி ஸூசென்



 

விண்வெளியில் பேரரசு – சீனாவின் லட்சியத்திட்டம்

 

2019ஆம் ஆண்டு, சீனாவில் “வாண்டரிங் எர்த்” என்ற திரைப்படம் வெளியானது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், இணையத்தில் நெட்பிளிக்சிலும் கூட வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. படத்தின் கதை இதுதான். பூமியை சூரியக்குடும்பத்தில் இருந்து பிரித்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி கொண்டு சென்றால்தான், அழிந்த மக்கள் போக மீதியுள்ளவர்கள் உயிர்பிழைக்கமுடியும். இப்படி கொண்டு செல்ல பூமியை நகர்த்த வேண்டும். இதற்கென ஏராளமான எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதடையும் சூழலில், அதை சரிசெய்ய போராடும் அறிவியலாளர்களின் போராட்டத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி சீனப்படம் பேசுகிறது.

அடிப்படையில் விண்வெளி சார்ந்த படம் என்றாலும், இதிலுள்ள முக்கிய நோக்கம் சீன அரசின் லட்சியத்தை உலகிற்கு கடத்துவதுதான். எனவேதான், சீன அரசின் சீனா ஃபிலிம் குரூப் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. சீன கல்வித்துறை வாண்டரிங் எர்த் படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட்டுக் காட்டுவதற்கு உத்தரவிட்டது.

ஜின்பிங், சீன நாட்டை தொழில்நுட்பம் சார்ந்த தேசியவாத நாடாக மாற்ற முயல்கிறார். அதற்கான முயற்சியாகவே திரைப்படங்களையும் உருவாக்கி மேலை நாடுகளில் திரையிடுகிறார்கள். சீன அரசுக்கு நிலவில் ராணுவத்தளம் அமைத்து, வேற்று கிரகங்களை அகழாய்வு செய்து கனிமங்களை கண்டறிவதும், விண்வெளியில் பேரரசை அமைப்பதுமே நோக்கம். அதை நோக்கி தெளிவாக நகர்ந்து சென்று வருகிறது.

சீனாவின் விண்வெளி பேரரசிற்கான லட்சிய மூல விதையை அமெரிக்காதான் போட்டது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். நேரடியாக அமெரிக்கா அதை செய்யவில்லை. ஆனால், அதன் ஆக்ரோஷமான செயல்பாடு பின்னாளில் நினைத்துப் பார்க்க முடியாத எதிரியை உருவாக்க காரணமானது. சீனாவின் விண்வெளி திட்டஙகளை மக்கள் விடுதலை ராணுவமே மேற்பார்வை செய்து கையாள்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவை குறிவைத்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளை செய்தபோது சீனா, உள்நாட்டில் வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தது. 1950ஆம் ஆண்டு மாவோ அதிபராக இருந்தபோது, அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை தயாரிக்க முடிவானது. நாடு உணவுக்காக தடுமாறிய சூழலில், மாவோ எடுத்த முடிவு கூட சற்று அதீதமானதுதான். யாரும் அப்படி யோசிக்க துணியமாட்டார்கள். இப்போது சீனாவின் விண்வெளித்துறைக்கு அடித்தளமிட்ட விஞ்ஞானி பற்றி பார்ப்போம்.

 அமெரிக்காவுக்கு வெர்ன்ஹெர் வோன் பிராவுன், ரஷ்யாவுக்கு செர்ஜெய் கோரோலெவ் ஆகிய விஞ்ஞானிகள் கிடைத்தது போல சீனாவுக்கு கிடைத்தவர் குயான் ஸூசென்.

ஸூசென், ‘சீன ராக்கெட்டுகளின் தந்தை’ என புகழப்படுபவர். தொடக்கத்தில் அமெரிக்காவின் எம்ஐடி, கால்டெக் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். இங்கு வேலை செய்யும்போதே வளாகத்தில் ராக்கெட்டுகளை உருவாக்கி அதை ஏவும் முயற்சியில் ஈடுபட்ட ‘சூசைட் ஸ்குவாட்’ எனும் குழுவில் உறுப்பினராக இருந்தார். 

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவுக்காக வேலை செய்தார். ஜெர்மனியின் சக்திவாய்ந்த வி1, வி2 ஆகிய ராக்கெட்டுகளை எதிர்கொள்வதற்கான விஞ்ஞானிகளின் குழுவில் பங்காற்றினார். தனது திறமை காரணமாக ஜெட் எஞ்சின்களை  உருவாக்கி பொருத்துவதில் வல்லுநர் என பெயர் பெற்றார். கூடவே விஞ்ஞானி வோன் பிராவுனுடன் இணைந்து அணுகுண்டு கண்டறிவது வரையிலான பல்வேறு திட்டங்களில் வேலை செய்தார். அப்போதுதான் உலக அரசியலில் புதிய மாற்றம் உருவானது. 1949ஆம் ஆண்டு கம்யூனிச அரசு, சீனாவை முழுக்க தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆளத் தொடங்கியது. இதனால், முதலாளித்துவ நாடான அமெரிக்கா, தன் நாட்டிலுள்ள சீன பூர்விக மக்களையெல்லாம் சந்தேகப்படத் தொடங்கியது.

 அப்போதுதான் ஸூசென், கம்யூனிச கருத்துக்கு ஆதரவானவர். சீனாவைச் சேர்ந்தவர் என அமெரிக்க அரசின் நினைவுக்கு வந்தது. உடனே அவரை வீட்டுச்சிறையில் அடைத்து வைத்தது. அவர், 1955ஆம் ஆண்டு அமெரிக்காவை விட்டு வெளியேறியபோது ‘’இனி எப்போதும் அமெரிக்க மண்ணில் காலெடுத்து வைக்க மாட்டேன்’’ என்று கூறினார்.

 உண்மையில் அந்த வார்த்தையை அவர் மீறவே இல்லை. ஆனால், அமெரிக்கா தனக்காக உழைத்த அறிவியலாளரை கடைசிதருணத்தில் கைவிட்டு, அவமானப்படுத்தியதால் பெரும் தவறை இழைத்தது. அதற்கான பின்விளைவாக சீனா இன்று விண்வெளித்துறையில் பெறும், பெற்று வரும் வெற்றிகளைக் கூறலாம். அமெரிக்காவின் இழப்பை சீனா தனது லாபமாக மாற்றி எடுத்துக்கொண்டது.

அமெரிக்கா, ரஷ்யா என இரு நாடுகளும் விண்வெளியில் தங்களது திட்டங்களை நிறைவேற்றினால் , எதிர்காலத்தின் அது தனக்கு எதிராக மாறும் என்பதை சீனா சற்று தாமதமாகவே உணர்ந்தது. எனவே, விஞ்ஞானி ஸூசென், தலைமையில் டாங்ஃபெங் ஏவுகணைகளை வடிவமைத்ததோடு, அணுகுண்டை மேம்படுத்தவும் தொடங்கியது.  1956ஆம் ஆண்டு சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும்  அதிகாரப்பூர்வமாக உறவு உண்டானது. இதன்படி, ஸூசென் தலைமையிலான விஞ்ஞானிகளுக்கு, ஆர் 1  ராக்கெட்டுகளப் பற்றி சொல்லித் தந்தனர்.

புதிய தொழில்நுட்ங்களை ரஷ்யாவிடமிருந்து சீனா பெற முடியவில்லை. எனவே, சீன அரசு ரஷ்யாவின் ஆயுத, ராக்கெட் ஆராய்ச்சிகளை பயிற்சி மாணவர்கள் மூலம் ரகசியமாக திருடியது. அங்கு பணியாற்றிய மூத்த விஞ்ஞானிகளின் பேச்சுகளை ஒட்டுக்கேட்டது. இப்படி பெற்ற தகவல்களை வைத்து உள்நாட்டில் ராக்கெட்டுகளை உருவாக்கத் தொடங்கியது.

ரஷ்யாவுக்கு சீனாவின் நோக்கம் தெரிய வராமல் இருக்குமா என்ன? எனவே,  மிகச்சில ஆண்டுகளிலேயே சீனாவுக்கும், ரஷ்யாவுக்குமான அதிகாரப்பூர்வ உறவு கசக்கத் தொடங்கியது. சீனா, தனது  ராக்கெட்டுகளை ஏவுகணைகளை சோதிக்க கோபி பாலைவனத்தில் புதிய தளம் ஒன்றை அமைத்தது.

சூசென் தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி முதல் செயற்கைக்கோளை விரைவிலேயே உருவாக்கினார். சீனாவின் விண்வெளி திட்டங்களுக்கான அடித்தளம் இப்படித்தான் உருவானது. நிச்சயம் இதுபற்றி தெரிந்துகொண்டபோது அமெரிக்கா பெரிதும் வருத்தப்பட்டிருக்கும். 

1967ஆம் ஆண்டு மாவோவின் ஆட்சியில், கலாசார புரட்சியின் கோர விளைவுகள் காரணமாக விண்வெளி திட்டங்கள் முடங்கின. ஏராளமான விஞ்ஞானிகளை அரசு சிறையில் அடைத்தது. சிலர் கொல்லப்பட்டனர். சீனா செயற்கைக்கோள் திட்டத் தலைவர் ஸாவோ ஜியுஸாங், செம்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டார். பெய்ஜிங்கின் கிரேட பீஸ் என்ற  ஏரியில் இவரது உயிரற்ற உடல் பின்னாளில் கண்டெடுக்கப்பட்டது.ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் வெளியாயின.  

இப்படி விண்வெளி ஆய்வில் பின்னடைவுகள் இருந்தாலும் 1970ஆம் ஆண்டு ஏப்ரலில் சீனா ஐந்தாவது நாடாக தனது செயற்கைகோளை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 1980களின் மத்தியில் தொடங்கி ஏராளமான செயற்கைக்கோள்களை சீனா விண்வெளிக்கு  அனுப்பத் தொடங்கியது. 2003ஆம் ஆண்டு, சீனா, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைத்த மூன்றாவது நாடு என்ற சாதனையை செய்தது.

2007ஆம் ஆண்டு, சீனா ‘கைனடிக் கில் வெகிள்’ (கேகேவி) என்ற ஏவுகணையை உருவாக்கி, விண்வெளியில் சுற்றி வந்த தனது செயலிழந்த வானிலை செயற்கைக்கோள்களை அழித்தது. இதைப் பார்த்தது உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. இந்தளவு அறிவியல் வளர்ச்சி பெற்றால் எளிதாக பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை எளிதாக அழிக்கலாமே என  யோசித்தன.  மணிக்கு 29 ஆயிரம் கி.மீ வேகத்தில் சென்று செயற்கைக்கோள்களை தாக்கும் திறன் கொண்டது கேகேவி ஏவுகணை.

சீனாவின் தொடக்க விண்வெளித்திட்டங்களில் ராணுவம் சார்ந்த அக்கறை வெளிப்பட்டது. அடுத்து, தொழில்மயமானபோது, சாலைகளையும், இருப்புபாதைகளையும் அமைக்க மெனக்கெட்டனர். தற்போது சீனா செய்யும் ஆய்வுகள், செயல்பாடுகள் அனைத்துமே விண்வெளியில் தன்னை பலம் பொருந்திய நாடாக நிலைநிறுத்திக்கொள்வதை மையப்படுத்தியதுதான்.

‘’நமக்கு திறமை இருந்தும் விண்வெளிக்கு செல்லாமல் இருந்தால், பின்வரும் தலைமுறைகள் நம்மை தவறாகவே பேசுவார்கள். பிறர், விண்வெளிக்கு செல்கிறார்கள் என்றால், அங்கு சென்று விரைவில் தேவையானதை கையகப்படுத்திவிடுவார்கள்.  இதன் அர்த்தம், பின்னாளில் நீங்கள் அங்கு செல்ல நினைத்தாலும் கூட செல்ல முடியாது என்பதுதான்.’’ என 2019ஆம் ஆண்டு நிலவு பயணத்திற்கான தலைவர் யே பெய்ஜியான் கூறினார்.

சீனா, தனது செயல்பாடுகளை தொலைநோக்குடன், சாமர்த்திய திறனுடன் அமைத்து வருகிறது. அமெரிக்காவிற்கு எதிரான வலிமையான பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஏற்கெனவே பெற்றுவிட்டது.  அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்ட பல்வேறு நாடுகளை வளைத்து தனது கைப்பிடிக்குள்  கொண்டுவந்துவிட்டது. இப்போது அந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களை சீனா தனது விண்வெளி மையங்கள் மூலம் நிறைவேற்றிவருகிறது. 2016ஆம் ஆண்டு சீனா விண்வெளி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது.

இதில் பத்தொன்பது நாடுகள், நான்கு உலக அமைப்புகள் உள்ளன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து  ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்றுள்ளன. ஐரோப்பிய விண்வெளி முகமை, ஸ்வீடன், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் கூட்டுறவு செய்யப்பட்டுள்ளது.

 1984ஆம் ஆண்டு தொடங்கி சீனா, அமெரிக்காவுடன் விண்வெளி திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்ய முயன்று வருகிறது. ஆனால், நினைத்த மாற்றங்கள் ஏற்படவில்லை.

   2011ஆம் ஆண்டு, நாசா அமைப்பு சீனாவின் விண்வெளி முகமை, அதன நிறுவனங்களோடு செயல்படுவதை தடுக்கும் சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் இருநாடுகள் இணைந்து செய்யும் ஆராய்ச்சிகளில் நாசாவின் கணினிகளை சீனா பயன்படுத்துவது குறையும், முக்கியமான ஆராய்ச்சி தகவல்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கலாம் என அரசு நினைத்தது. இதேகாலத்தில் சீன ஹேக்கர்கள், அமெரிக்க அரசின் ராணுவம், கப்பல்ப்படை தளங்கள், வெள்ளை மாளிகை, பென்டகன், அணு ஆயுத ஆய்வகம் ஆகிய இடங்களில் ஊடுருவி தகவல்களை திருட முயன்றனர். எந்த வழியில் பெற்றாலும் வெற்றிதானே முக்கியம் என சீனா நினைக்கிறது. இப்போது சீனாவுக்கு உதவிய சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

2008ஆம் ஆண்டு ஷூ குவான் ஷெங் என்ற அமெரிக்க இயற்பியலாளர், அமெரிக்க ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தும் லிக்விட் ஹைட்ரஜன் பற்றிய முக்கியமான தகவல்களை சீன அரசுக்கு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டார். 2010ஆம் ஆண்டு போயிங் நிறுவன பொறியாளரான டாங்ஃபேன் அமெரிக்க விண்வெளி தளங்களைப் பற்றி 3 லட்சம் பக்க அளவிலான தகவல்களை சீனாவுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார். இதுபோன்ற விவகாரங்கள் வெளியாகும்போதெல்லாம் சீன அரசு அமைதியாக இருக்கும் வெளிப்படையாக எந்த தகவல்களையும் தெரிவிக்காது. ஆனால், அமெரிக்காவின் நாசா அமைப்பைப் போல, உள்நாட்டில் வலிமையான விண்வெளி முகமையை உருவாக்குவதே அதன் கொள்கையாக உள்ளது.

இனி சாதனைகள்…

2014ஆம் ஆண்டு, கடலில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் ஒன்றைக் கட்டியது. 2019ஆம் ஆண்டு சீனாவில் இருள் படிந்த மறைபகுதிக்கு சாங் 4 என்ற ராக்கெடை அனுப்பி வெற்றிகண்டது. 2020ஆம்ஆ ண்டு பெய்டு என்ற இருப்பிடம் அறியும் வழிகாட்டி செயற்கைக்கோளை உருவாக்கி அனுப்பியது. இது அமெரிக்காவின் ஜிபிஎஸ்க்கு போட்டியைத் தருவது ஆகும்.

செவ்வாய் கோளுக்கு தியான்வென் 1 எனும் ராக்கெட்டை அனுப்பி வைத்தனர். இதில் ஸூரோங் என்ற ரோவர் இருந்தது. இந்த ரோவர், அங்கு நில அமைப்பு, புவியியல், நீர் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்தது.

1934ஆம் ஆண்டில் மாவோவின் செம்படை, கம்யூனிசத்திற்கு எதிரான படைகளை சந்தித்து வீழ்த்தியது. 9 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதை நினைவுகொள்ள தம் ராக்கெட்டுகளுக்கு சாங்ஸெங் ( நீண்ட அணிவகுப்பு படை) என பெயர் வைத்தனர். வரலாற்றை திரும்ப நினைவுபடுத்திக்கொள்ளும் ஒரு அடையாளம்.  சீனா, இந்த வகையில் வரலாற்றை உலகிற்கு காட்டிக்கொள்கிறது.

கம்யூனிச நாடாக இருந்தாலும், உலகமே கவனிக்கும்போது தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்வது தவறில்லை என நினைக்கிறது சீனா, இதற்கு ஆதாராமாக ராக்கெட்டுகளுக்கு, விண்வெளித் திட்டங்களுக்கு வைக்கும் பெயர்களளைக் கூறலாம். அவை எல்லாமே சீன புராணங்களிலிருந்து பெறப்பட்டவையாக உள்ளன. ஆஸ்ட்ரோநெட் என கூறப்படுவதை சீனாவில் டைக்கோநட் என்கிறார்கள். இதற்கு விண்வெளி மாலுமி என்று பொருள்.

டிம் மார்ஷல் எழுதிய வயர்ட் இதழ் கட்டுரையைத் தழுவியது.

 

 

 

  








கருத்துகள்