மேகன் ராபினோ - பெண்களுக்கான உரிமைப் போராளி
மேகன் ராபினோ - கால்பந்து உலகின் கலகத் தலைவி |
மேகன் ராபினோ |
மேகன் ராபினோ தனது இணையரான சூ பேர்டுடன்... |
மேகன் ராபினோ – கால்பந்து உலகின் உரிமைப்
போராளி
பெண்கள் கால்பந்துபோட்டிகளை
ஆக்ரோஷமானதாக மாற்றி அதை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும்படி செய்த அமெரிக்க விளையாட்டு
வீரர்களில் முக்கியமானவர் மேகன் ராபினோ.
இவரது தந்தை
கட்டடங்களை கட்டித்தரும் ஒப்பந்ததாரர். அம்மா, ஹோட்டல் ஒன்றில் பணியாளராக பணிபுரிந்து
வந்தார். ராபினோவுக்கு, அவருடன் பிறந்த இரட்டையரான சகோதரி ஒருவர் உண்டு. தற்போது
38 வயதாகும் மேகன் ராபினோ, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியான வீரர்.
ஐந்து அடி ஏழு அங்குலம் உள்ள இவர், பெண்களுக்கு சம ஊதியம், பால்புதுமையினருக்கு
விளையாட்டு அணியில் விளையாட உரிமை ஆகியவற்றை கேட்டு போராடி வருகிற போராளி. டச் மோர்
என்ற தயாரிப்பு நிறுவனத்தை சூ பேர்ட் என்ற தனது காதலருடன் இணைந்து தொடங்கி நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில்
ராபினோவுக்கு பெண்கள் மத்தியில் பெரும் மரியாதை உண்டு. அதை அவர் களத்திலும் களத்திற்கு
வெளியிலும் சம்பாதித்துக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.
2019ஆம் ஆண்டு அமெரிக்க பெண்கள் கால்பந்து அணி கோப்பை
வெல்வதற்கு பெரும் பங்களித்தவர் மேகன் ராபினோதான். அதேசமயம் அதோடு நிற்காமல் ஆண் வீரர்களுக்கு
நிகரான சம்பளத்தை கொடுக்கவேண்டும் என சொந்த கால்பந்து அமைப்பு மீதே நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். இதனால் நிறைய பின்னடைவுகளை தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்தார்.
போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். கவலையே
படாமல் தனது காதலரோடு உடற்பயிற்சி செய்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டார். அவரது பெற்றோருக்கும்
நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. இறுதிவரை சமூக நீதிக்கான தடத்தை அவர் மாற்றிக்கொள்ளவே
இல்லை.
2011ஆம் ஆண்டு
நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா, இறுதிப்போட்டியில் ஜப்பானை சந்தித்தது.
துரதிர்ஷ்டவாசமாக அந்த அணியிடம் தோற்றுப்போனது.
ஆனால், அமெரிக்க அணி காலிறுதியில் பிரேசிலுடன் வெற்றி பெற காரணம், ராபினோவின் தனித்துவமான
ஆட்டம்தான். அந்த ஆட்டம்தான் அமெரிக்காவிற்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது
என குறைந்தபட்ச தன்னம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்தது. 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற
ஒலிம்பிக்ஸ் போட்டியில் அமெரிக்க அணி, கனடா அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்தது.
இந்த போட்டியில் கார்னர் கிக் ஒன்றை ராபினோ அடித்தார். அதை ‘ஒலிம்பிகோ’ என கால்பந்து
வட்டாரத்தில் புகழ்கிறார்கள். இந்த வகை ஷாட்டை ஒலிம்பிக் போட்டியில் அடித்த பெண் வீரர்
மேகன் ராபினோ மட்டும்தான்.
இன்னொன்றை
சொல்ல மறந்துவிட்டேன். ராபினோ தன்னை ஓரினப்பால் புணர்ச்சியாளர் என வெளிப்படையாக அறிவித்தவர்.
அதோடு நிறவெறி கொண்ட ட்ரம்பை துணிச்சலாக விமர்சித்து பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டவர்.
2019ஆம்ஆண்டு
‘’அமெரிக்க அணி, உலக கோப்பை வென்றால் வெள்ளை மாளிகைக்கு செல்ல மாட்டேன்’’ என ஊடகங்களிடம்
சொன்னார். அதற்கு அதிபர் ட்ரம்ப், ‘’முதலில் அவரின் அணி வெல்லட்டும் பிறகு பேசலாம்’’
என ஏளனம் செய்தார். ஆனால், இறுதிப்போட்டியில் கோல் அடித்து அணி வென்று ராபினோ வெற்றிக்குறி
காட்டி போஸ் கொடுத்தபோது ட்ரம்ப் சற்று திகைத்துத்தான் போயிருப்பார். தன்னை விமர்சிப்பவர்களுக்கான
ராபினோவின் பதிலடி இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.
2015ஆம் ஆண்டு
அமெரிக்கா கால்பந்து அணி, 1999க்குப் பிறகு
உலக கோப்பையை வென்றது. அதில்தான் ராபினோ, அமெரிக்க தேசிய கீதம் இசைக்கும்போது
முழங்காலிட்டு கீழே அமர்ந்து இனவெறிக்கு எதிரான தனது ஆதரவைத் தெரிவித்தார். இது நாடு
முழுவதும் பெரும் சர்ச்சையானது. ஏனெனில் கறுப்பினவீரர் இப்படி ஆதரவு தெரிவிப்பது வேறு.
ஆனால் வெள்ளையராக இருக்கும் மேகன் ராபினோ, இனவெறிக்கு எதிரான ஆதரவைத் தெரிவித்தது வேறுவகையான
சங்கடம்.
இதனால் அவரை அணியில் வைத்திருந்தாலும் விளையாட விடவில்லை.
அணியில் தேர்ந்தெடுக்காமல் தட்டிக்கழித்தனர். இப்படி பாகுபாடுகளை எதிர்கொண்டாலும் தான்
கொண்ட கருத்தில் துளியும் ராபினோ மாறவில்லை.
2022ஆம் ஆண்டு
அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கத்தை பைடன் கையால் பெற்றவர், ராபினோ. அமெரிக்க குடிமகன்களுக்கான
உயர்ந்த விருதைப் பெறும் முதல் கால்பந்து வீரர் இவரே.
பெண்களுக்கான
சம்பள இடைவெளியைப் பற்றி பேசியது அமெரிக்காவில்
உள்ள பெண் வீர ர்களுக்கு மட்டுமல்ல. அவர் உருவாக்கிய எழுப்பிய குரல் உலக நாடுகளில்
எதிரொலித்து வருகிறது. இதனால் நார்வே, நியூசிலாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,
அயர்லாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பெண்கள் அணிக்கு சம ஊதிய
ஒப்பந்தம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இவரால் ஊக்கம்
பெற்ற பள்ளி மாணவிகளில் ஒருவர் லிடியா சீசர். இவர், ராபினோவின் அணி 2019ஆம் ஆண்டு உலக கோப்பை வென்றபோது பள்ளி மாணவியாக
இருந்தார். ராபினோ விளையாட்டு கடந்து சம ஊதியம் தொடர்பாக எழுப்பிய குரல் அவரை உலுக்கியது.
எனவே, லிடியா தனது விளையாட்டு தோழிகளுடன் கலந்து பேசினார்.
அவர்கள் பள்ளிகளுக்கு
இடையிலான விளையாட்டு போட்டியில் கோல் ஒன்றை அடித்துவிட்டு தங்கள் ஜெர்சியைக் கழற்றினார்.
நான்கு வீரர்களும் உள்ளே இருந்த ஆடையில் சம ஊதியம் என எழுதப்பட்டிருந்தது. நால்வருக்கும்,
மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டது. அதனால் எல்லாம் லிடியோவை தடுக்கமுடியவில்லை.
அவர், தங்களது ஜெர்சிகளை ஒரு லட்சம் டாலர்களுக்கு ஏலம்விட்டு அந்த தொகையை வறுமையான
பின்னணியில் இருந்து வரும் வீரர்களுக்கு செலவிட்டு வருகின்றனர். இப்போது லெஹை பல்கலைக்கழகத்தில்
படித்து வரும் லிடியாவுக்கு ராபினோ மறக்கமுடியாத முன்மாதிரியாக இருக்கிறார்.
தனது எ டச்
மோர் நிறுவனத்தின் மூலம் கலாசார ரீதியாக புரட்சிகர மாற்றங்களைச் செய்தவர்களை ஆவணப்படுத்துவதை
லட்சியமாக கூறியுள்ளார். நிச்சயம் அதையும் எதிர்காலத்தில் நிறைவேற்றுவார் என நம்பலாம்.
டைம் வார
இதழின் கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக