என்னால் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்! - பெரிதாகவே சிந்தியுங்கள் - ரியோ ஒகாவா

 





ரியோ ஒகாவா, எழுத்தாளர்,ஆன்மிக தலைவர்







பெரிதாக சிந்தியுங்கள்

ரியோ ஒகாவா

ஜெய்ஹோ பதிப்பகம்

பக்கம் 135

 

ஹேப்பி சயின்ஸ் என்ற ஜப்பானின் மிகப்பெரும் ஆன்மிக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரியோ ஒகாவா எழுதியுள்ள நூல். இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது , அவர் கோஸ்ட் ரைட்டர்களை வைத்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்கொண்டிருப்பார். இந்த நூலிலேயே 1,600 நூல்கள் எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  அப்படியான நூல்களில் ஒன்றுதான் இது.

தமிழில் எஸ் ராமன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பில் குறை காண ஏதுமில்லை. நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டிருப்பது நல்ல ஐடியா. நூலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக்கொண்டால் நல்லது.

ரியோ ஒகாவா, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதை வாசகர்களுக்கு சொல்லும் அறிவுரையாக மாற்றிக்கொள்கிறார். குறிப்பாக, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்கள், வரையறைப்படுத்தல் என்பதை தனது சிறுவயது வாழ்க்கை, ஐக்யூ டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை வைத்து விளக்கியிருப்பது அருமை. பிறரது கருத்துகள், வரையறைகள், மதிப்பீடுகள் நமது உண்மையான திறமைகளை எப்படி குலைக்கின்றன என்பதை தன்னையும், தனது சகோதரர் வாழ்க்கையையும் நேர்கோட்டில் வைத்து விளக்கியிருப்பதற்கு உண்மையில் பெரும் துணிச்சல் தேவை.

கடினமாக உழைத்து தனக்குத்தானே விமர்சகராக இருப்பது பற்றி ரியோ எழுதியிருப்பது புதிதான ஒன்று. அதாவது நிதானமாக வேலை செய்துகொண்டு அதிகம் ஓய்வெடுப்பது. அவரது குண இயல்புக்கு அது பொருந்தாத ஒன்று என்றாலும் வேலையில் உள் அரசியல் பிரச்னைகள், பொறாமைகளை தவிர்க்க மேலதிகாரிகள் சொன்னதை பின்பற்றியிருக்கிறார். பின்னாளில் அப்படி தன்னால் இயங்கமுடியவில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். சுயமுன்னேற்ற நூலில் இப்படியொரு கருத்தை முன்வைத்து பேசுவது அரிதான  ஒன்று. இதுவரை சுயமுன்னேற நூலில் யாரும் சொல்லாத கருத்தை ரியோ கூறுகிறார்.

பணம் மூலம் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் பற்றிய தனது சொந்த அனுபவத்தை கூறி விளக்கியுள்ளது சிறப்பு. மலிவான போக்குவரத்தில் பயணித்தாலும் கூட அந்த நேரத்திலும் நூல்களை வாசித்துக்கொண்டே ரியோ சென்றிருக்கிறார். உண்மையிலேயே அந்த மனநிலைதான் முக்கியமானது. தன்னை மேம்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் உரையாற்ற உழைத்த அனுபவம் இதற்கு சாட்சி.

ஆன்மிக நிறுவனம், பதிப்பு நிறுவனம், அதன் விற்பனை, அரசியல் கட்சி என அனைத்துக்குமான சிறு விளம்பரங்கள் நூலில் உண்டு. வாசகர்கள் விரும்பினால் அதை பின்தொடரலாம். இல்லையெனில் கைவிட்டுவிடலாம்.  

கட்டுரையின் தொடக்கமாக என்னால் முடியும் என நம்பிக்கையுடன் போனில் பேசுவது உண்மையில் நெகிழ்ச்சியூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ நம்பிக்கையே எழ வாய்ப்பில்லாத இடத்தில் பெரும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெல்கிறார்.

1981ஆம் ஆண்டு விண்ணரசின் ஆன்மாக்கள் மூலம் ஞானம் பெற்றவர். 1986இல் ஹேப்பி சயின்ஸ் ஆன்மிக மத நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், பள்ளிகளையும் நடத்துகிறது. அனிமேஷன், வணிக திரைப்படங்களையும் தயாரிக்கிறது. பெரும்பாலும் ரியோ ஒகாவாவின் கருத்தியல்படிதான் அனிமேஷன், மற்ற திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவிலும் ஹேப்பி சயின்ஸ் அமைப்பிற்கு கிளைகள் உள்ளன.

கோமாளிமேடை டீம்

 

Happyscience.org

Okawabooks.com

படம்

ஜப்பான் டைம்ஸ், காமன்ஃபோக்ஸ்

கருத்துகள்