வணிக வளாக விபத்தால் உருக்குலைந்து போகும் மனிதர்களின் வாழ்க்கை - ஜஸ்ட் பெட்வீன் லவ்வர்ஸ்

 















ஜஸ்ட் பெட்வீன் லவ்வர்ஸ்

கொரிய டிவி தொடர்

பதினாறு எபிசோடுகள்

ராக்குட்டன் விக்கி

 

ஹன் மூன் சூ, தனது குழந்தை நட்சத்திர தங்கையை எஸ் மால் என்ற இடத்திற்கு படப்பிடிப்பு ஒன்றுக்கு கூட்டிப்போகிறாள். அவளது அம்மா அழகுக்கலை செய்யும் பார்லர் வைத்திருக்கிறார். அப்பா, சரக்கு வண்டி ஓட்டுபவர். தனது சிறிய மகள் டிவி, சினிமா என நடித்தால் குடும்பத்தை சிரமம் இல்லாமல் நடத்தலாம் என ஹன் சூகியின் அம்மா நினைக்கிறார்.

ஹன் மூன் சூ தங்கையை எஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு கூட்டிப்போகிறாள். அங்கு, தங்கையை கீழ்தளத்தில் விட்டுவிட்டு தனது பள்ளியில் படிக்கும் காதலனைப் பார்க்கப் போகிறாள் ஹன் சூகி. அவனை எஸ் மாலுக்கு வரும்படி அவள்தான் அழைத்திருக்கிறாள். அப்படி போகும் நேரத்தில் அந்த மால் கட்டிடம் எதிர்பாராதவிதமாக உடைந்து நொறுங்கி வீழ்கிறது. விபத்தில் ஹன் சூகியின் தங்கை உள்பட 48 பேர் இறந்துபோகிறார்கள். விபத்து காரணமாக தலையில் அடிபடும் ஹன் சூகிக்கு பழைய நினைவுகள் அழிந்துபோகின்றன.

இந்த நிலையில் விபத்து நடந்து பத்தாண்டுகளுக்கு மேலான நிலையில், எஸ் மால் இடித்து தள்ளப்பட்டு அங்கு இறந்த மக்களுக்கான நினைவிடம் அமைக்கப்பட திட்டமிடுகின்றனர். இந்த வேலைக்கு ஹன் சூகி தற்செயலாக தேர்வாகிறாள். விபத்து நடந்தபிறகு அவளது சரக்கு வாகனம் ஓட்டும் தந்தை வீட்டுக்கு வருவதை நிறுத்திவிடுகிறார். அம்மா குடிக்கு அடிமையாகிறாள். குடும்பத்தை நடத்த பெண்களுக்கான குளியலறை ஒன்றை நடத்துகிறார்கள். அதையும் ஹன் சூகியும் அவளது உறவினரான அத்தை ஒருவரும் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஹன் மூன் சூ வடிவமைப்பு படிப்பை படித்து கட்டுமான மாதிரிகளை உருவாக்குபவளாக இருக்கிறாள். தங்கை எஸ் மால் விபத்தில் இறந்துபோன காரணத்தால், தான் உருவாக்கும் கட்டுமானங்கள் பாதுகாப்பானவையாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இவளது உறுதியான தன்னம்பிக்கை நேர்மையால் கட்டுமான வடிவமைப்பாளர் சியோ வோன என்பவர் கவரப்பட்டு தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார்.

இவர் யாரென்றால் எஸ்மாலை வடிவமைத்த பொறியாளரின் மகன். சியோ வோனின் அப்பா, விபத்தில் இறந்தவரால் சட்டையைப் பிடித்து அடித்து அவமானப்படுத்தப்பட அன்றைய இரவே தற்கொலை செய்துகொள்கிறார். அப்படி அவரை அவமானப்படுத்துபவர் வேறு யாருமில்லை ஹன் சூகியின் சரக்கு வாகனம் ஓட்டும் தந்தைதான்.

அடுத்து, லீ காங் டுவைப் பார்ப்போம். இவன் வேலை கொடுக்கும் இடத்தில் செய்யும் தகராறு காரணமாக ஒப்பந்த ஆளால் அடிபட்டு ஓரிடத்தில் கிடக்கும்போது அவனுக்கு ஹன் சூகி காயத்திற்கு முதலுதவி செய்து உதவுகிறாள். இவனும் எஸ் மால் விபத்தில் காயம்பட்டு கால் ஊனமான ஆள்தான். காலில் முறுக்கு கம்பிகள் குத்தியதால் நரம்புகள் சேதமாகி எப்போதும் வலி நிவாரணி சாப்பிட்டால் மட்டுமே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் நிலை. இதற்கான பக்க விளைவாக கல்லீரல் சிதைந்து வருகிறது. ஏறத்தாழ அவன் உடல், மனம் என இரண்டுமே பாதிக்கபட்டு நடைபிணம் போல வாழ்கிறான்.

அவனுக்கு குடும்பம் என இருப்பது ஒரே ஒரு தங்கை. அவள் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக வேலை செய்கிறாள். அவள் படிப்பிற்கென வாங்கிய கடனை அடைக்க லீ காங் டு கூலி வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறான். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவனை, எஸ் மால் விபத்து முழுமையாக முடக்கிப்போடுகிறது.

வெல்டிங் வேலை செய்யும் அப்பா அந்த விபத்தில் இறந்துவிட, அம்மாவும் மெல்ல வருத்தத்தில் மனமுடைந்து இறக்க தங்கை மட்டுமே மிஞ்சுகிறாள். லீ காங் டு தங்கையைப் பார்க்க ஆண்டுக்கு இருமுறை மருத்துவமனை செல்கிறான். மற்றபடி மோட்டல் ஒன்றில் தங்கியபடி வேலை செய்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறான். காலில் கம்பி குத்திய காரணத்தால் அவனால் கார் கூட ஒட்டமுடியாத சூழல். அவனுக்கு உதவி செய்ய வட்டிக்கடையும்,  கிளினிக்கும் ஒன்றாக நடத்தும் பாட்டி ஒருத்தி இருக்கிறாள். அவளுடைய மகள் பணக்காரர்களுக்கான கிளப் ஒன்றை நடத்துகிறாள். அவள்தான் லீக்கு ரத்த சொந்தமில்லாத அக்கா.

லீ கட்ட வேண்டிய வட்டிப்பணத்தை சரியாக கட்டி வருகிறான். அவனுக்கு வேண்டியது கூலி வேலை. விபத்து காரணமாக குடும்பம் நிலைகுலைந்து போன சூழ்நிலையில் பள்ளி போக முடிவதில்லை. தங்கையை வேறு காப்பாற்ற வேண்டும். எனவே, தனது ஆசைகளை தியாகம் செய்துவிடுகிறான். உடல் உழைப்பு வேலைகளுக்குப் போய்விடுகிறான்.  

லீயை சுற்றியுள்ள அவனது வட்டிக்கடை பாட்டி, பாட்டியின் மகளான அக்கா, மோட்டல் நடத்தும் பெண்மணி, அவளின் ஒரே மகனான அறிவு வளர்ச்சி குறைந்த சாங்மன் என அனைவருமே அவன்மீது அபரிமிதமான பாசத்தை கொட்டுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதை வெவ்வேறு ஆட்களிடம் வெளிக்காட்டுகிறார்கள்.

வட்டிக்கடை பாட்டியின் பாத்திரம் சிறப்பாக உள்ளது. அவள் பேச்சு கடுமையாக இருந்தாலும், மனதளவில் தன்னுடைய பேரனைப் போலவே லீயை நடத்துகிறாள். அவன் மீது அக்கறை காட்டுகிறாள். லீயின் காலில் தீராத வலி இருக்கிறது. மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. கல்லீரல் சிதைந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவன் தங்கைக்காக வேலை செய்வதை நிறுத்துவதேயில்லை.  இதெல்லாம் தாண்டி விபத்து காரணமாக ஏற்படும் மனச்சோர்வு அவனைத் துரத்துகிறது. அதில் கால் இழந்த ஒருவரின் குரல் , அவனுக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அவன் எஸ் மால் இடத்தில் கட்டும் கட்டிடவேலைக்காகவே வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகிறது. அங்கு செக்யூரிட்டியாக வேலைக்குசேருகிறான். அவன் வேலை பார்க்கும் இடத்தை ஆய்வு செய்ய டிசைன் நிறுவனம் சார்பில் வருகிறாள் ஹன் சூகி. அங்கு நேரும் விபத்தில் மாட்டுபவளை லீ காங் டு காப்பாற்றுகிறான். அவன் மீது அவளுக்கு மெல்ல ஈர்ப்பு உருவாகிறது.

அதேநேரத்தில் டிசைன் கம்பெனி உரிமையாளரான சியோ வானுக்கு, ஹன் சூகி மீது காதல் அரும்புகிறது. எந்த உயிரும் இழக்கப்படக்கூடாது என வடிவமைப்பில் ஏராளமான திருத்தங்களை அவள் கூறுகிறாள். அது அவனது மனதிற்கு பிடித்துப்போகிறது. லீ, சியோ வோன் என இரண்டு பேருமே ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள் என்றால் முக்கோண காதல் கதை என நினைக்கவேண்டாம். இது சற்று வேறுமாதிரியான கதை.

லீ காங் டு, ஹன் மூன் சூ, சியோ வோன் என மூவருக்குமே மனதில் அறவுணர்ச்சி தீவிரமாக உண்டு. பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து எஸ் மால் இடிந்த இடத்தில் நேர்த்தியான முறையில் நினைவிடம் ஒன்றைக் கட்டவேண்டும் என முயல்கிறார்கள். இந்த செயல்பாட்டின்போது கடந்த காலத்தில் ஏற்பட்ட தழும்புகள் நினைவுக்கு வருகின்றன. சில தழும்புகள் மீண்டும் கீறப்பட்டு புதிய காயமாக மாறுகின்றன. இதைப்பற்றியெல்லாம் டிவி தொடர் நிதானமாக பேசுகிறது.

‘’எதிரியா இருந்தாலும் ஆபத்தில் சிக்கியிருக்கும்போது, அவனை மனித நேயத்தோடு காப்பாத்தலாம் தப்பில்லை. ‘’

‘’உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரை கையைப் பிடிச்சு பேசக்கூடாது’’

‘’உங்களை அவர் காதலிக்கலீங்கறது, வெளியில இருந்து பாக்குற எனக்கே தெரியுது. ஆனா உங்களுக்குத் தெரியல’’

‘’அவனப் பார்க்கும்போது எனக்கே பிடிச்சிருக்கு. உனக்கு பிடிக்காதா என்ன? இனிமே அவனப் பார்க்காத’’

‘’ என்னை ஒரே முறை கட்டிப்பிடிச்சுக்கிறியா ப்ளீஸ்?’’

‘’நான் உங்கூடவே முன்னாலே  இருக்கும்போது மனசுல இன்னொருத்தர நினைச்சுக்கிட்டிருக்க. அது எனனை காயப்படுத்துது. இனி அப்படி செய்யாத’’

நான் காதலிக்கறது லீயைத்தான். அவன் என் இல்லாதபோது எனக்கு அவனைப் பார்க்கணும்னு தோணும். இப்ப என்ன செஞ்சிட்டிருப்பான்னு யோசிப்பேன். அவனைப் பார்க்க பதற்றத்தோடு காத்திட்டிருப்பேன். சியோ வான் மீது இருக்கிறது மரியாதை, பக்தி. அது வேற மாதிரி ஒண்ணு. ரெண்டும் வேற வேற’’

 லீ காங் டு, ஹன் மூன் சூ, சியோவோன் என மூவர்தான் முக்கியமான பாத்திரங்கள். இவர்கள் மூவருமே தாங்கள் செய்யும் பணியை நேர்மையாக செய்யவேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால், அதில் ஏராளமான தனிப்பட்ட தொழில் ரீதியான சவால்கள் வருகின்றன. அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே தொடரின் சம்பவங்களாக விரிகிறது.

சியோவோனின் அப்பா, கட்டுமான நிறுவனத்தின் கட்டுமான கலைஞர்களில் ஒருவர். மேலும், அங்கு பொறியாளராகவும் வேலை செய்கிறார். இறுதியில் இவரை பலியாடாக மாற்றிவிட்டு எஸ் மால் நிர்வாகத்தினர் தப்பிவிடுகிறார்கள். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள மகன் சியோவோன் மனதில் அதை மறக்க முடிவதில்லை. அந்த  கசப்பு வாழ்நாள் முழுக்க தொடர்கிறது. இந்த நிலையில், விதவையான அம்மா, எஸ் மால் கட்டுமான நிறுவனரை மணம் செய்கிறார். இதனால் சியோ வோன் அவர்களின் குடும்பத்திற்குள் செல்ல வேண்டிய சூழல்.

 அங்குள்ள மூத்த மகன், சியோ வோனை கரித்துக் கொட்டி வன்மத்துடன் பேசுகிறார். நடந்துகொள்கிறார். இரண்டாவது பெண் பிள்ளை, கல்லூரி காலத்தில் இருந்தே சியோ வோனை மணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் காதலுடன் இருக்கிறாள். அவள் அவனை எங்குமே விட்டுக்கொடுப்பதில்லை. அந்த காதலை சியோ வோன் உணர்கிறான். உயிரியல் ரீதியாக இல்லை என்றாலும் குடும்ப ரீதியாக தங்கை உறவு வருகிறவளை மணக்க வேண்டுமா? குறிப்பாக அவன் அப்பாவை வீண் பழி ஏற்கச்செய்தது அவள்தான் என அறிந்தே இருக்கிறான்.

மூன்று முக்கிய பாத்திரங்களுமே மனதில் பாறாங்கல்லைப் போல கடந்த கால நினைவுகளை குற்றவுணர்ச்சியை சுமந்துகொண்டே இருக்கிறார்கள். அது அவர்களது வாழ்க்கையை உருக்குலைக்கிறது. இறந்தவர்களை காப்பாற்ற முடியவில்லை என்ற இயலாமை தினசரி ஏதோ ஒருவகையில் அவர்களை நினைவுகளாக வேட்டையாடுகிறது.

கடந்த கால கொடும் நினைவுகளால் இரவுகளில் வேதனைப்படுகிறார்கள். தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதெல்லாம் கடந்து அவர்கள் நினைவிடத்தை கட்டி முடித்தார்களா, லீ காங் டு, ஹன் சூகி ஆகியோர் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தினார்களா என்பதே இறுதிக்காட்சி.

கோமாளிமேடை டீம்

 --------------------

Also known as: Just Lovers
Genre: Romance; Melodrama
Original language: Korean
Original network: JTBC
Original release: December 11, 2017 –; January 30, 2018
Producer: Park Woo-ram
-----------------

https://mydramalist.com/24230-just-between-lovers


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்