அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

 









1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார். 


ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல்வேறு விதமாக வெளிப்படுத்துகிறது. அதுவே தாய், அம்மா என இருவருக்குமிடையான உறவை பாதுகாப்பானதாக தனித்துவமாக மாற்றுகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு என்ற வகையிலான உறவு, வாழ்க்கை முழுக்க நீடிக்கிறது. 


அம்மா, குழந்தை ஆகியோருக்கு இடையிலான உறவு முக்கியமானது. அந்த உறவு சில ஆண்டுகளிலேயே உடைந்து நொறுங்கிப்போனால் அவர்களது பின்னாளைய உறவுகளும் சிறப்பாக அமையாது. அதிலும் எதிர்மறையான அம்சங்களே நிறைய அமையும் என ஜான் கூறினார். பாதுகாப்பு, பராமரிப்பு என்ற வகையில் குழந்தை அம்மாவோடு கொண்டுள்ள உறவு சில ஆண்டுகளுக்கு நீடித்திருப்பது முக்கியம். 


1950ஆம்ஆண்டு, ஜான் பௌல்பை உலக சுகாதார நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப இரண்டாம் உலகப்போரில் ஆதரவற்றவர்களாக மாறி ஆதரவற்றோர் இல்லத்தில், காப்பகத்தில் வாழ்ந்த சிறுவர்களை சந்தித்தார். உரையாடினார். அம்மாவின் அன்பு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு கிடைக்காத குழந்தைகள் பின்னாளில் சமூக, பொருளாதார, தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பின்னடைவுகளை சந்தித்தனர் என ஜான் புரிந்துகொண்டார். இதைப் பற்றி 1951ஆம் ஆண்டு, மேட்டர்னல் கேர் அண்ட் மென்டல் ஹெல்த் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். 


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு ஆய்வை வெளியிட்டார். இந்த ஆய்வில் காசநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் மனநிலை செயல்பாடுகளை ஆராய்ந்தார். இவர்கள் நோய் பாதிப்பு காரணமாக, பிறரோடு போட்டியிடும் விதமாக, ஊக்கமூட்டும் விதமாக செயல்படவில்லை. அம்மாவின் பாசமும், பராமரிப்பும் கிடைக்காதவர்களுக்கு பிறரின் மீது கருணையோ, அக்கறையோ ஏற்படவில்லை. மற்றவர்களோடு நட்பு ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் முயலவில்லை. சமூகத்தில் இருந்து சற்று விலகியவர்களாகவே இருந்தனர். தங்களது செயல்கள் வழியாக பிறருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருந்தனர். 


1944ஆம் ஆண்டு ஜான் பௌல்பை, ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த சிறுவயது திருடர்கள் பற்றி ஆராய்ந்தார். இவர்கள் பெரும்பாலும் ஐந்து வயதுக்குள்ளாக அம்மாவைப் பிரிந்து குறைந்தபட்சம் ஆறுமாதங்களை தனியாக வாழ்ந்தவர்கள். இதனால் இவர்களின் மனதில் பிறரின் மீது ஒட்டுதல் இல்லாத இயல்பு உருவாகிவிட்டிருந்தது. தொடக்க காலத்தில் குழந்தைக்கு அம்மாவிடம் நல்ல உறவு உருவாகாதவர்களுக்கு பின்னாளிலும் கூட உறவுகள் என்பது பிரச்னையாகவே இருந்தது. உறவுகளை தொடங்க, பராமரிக்க, அதை வளர்த்தெடுக்க மிகவும் தடுமாறினர். பிறர் மீது நம்பிக்கையும் வரவில்லை. தன்னை மதிப்புக்குரியவராக கருத முடியவில்லை. சமூகத்தில் நம்பிக்கையுடன் வாழவும் சிரமப்பட்டனர். 


ஜான் பௌல்பை, லண்டனில் மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் பிறந்தார். ஆறு பிள்ளைகளில் நான்காவது பிள்ளை. தாதிகளால் வளர்க்கப்பட்ட ஜான், ஏழு வயதில் உண்டு உறைவிடப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  டிரினிட்டி கல்லூரியில் உளவியல் படித்தார். பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தந்தார். மருத்துவத்தில் பட்டம்பெற்றவுடன் உளவியலாளராக பணியாற்றத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போரில் ஜான், ராயல் ஆர்மி மருத்துவக்குழுவில் பணியாற்றினார். 1938ஆம் ஆண்டு, உர்சுலா லாங்க்ஸ்டாஃப் என்ற பெண்ணை மணந்தார். இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். போருக்கு பிறகு டாவிஸ்டாக் கிளினிக்கிற்கு தலைவராக இயங்கினார். ஸ்காட்லாந்தில் எண்பத்து மூன்று வயதில் மறைந்தார். 


முக்கிய படைப்புகள்


1951 மேட்டர்னல் கேர் அண்ட் மென்டல் ஹெல்த்


1959 செபரேஷன் ஆன்க்ஷைட்டி

1969, 1973, 1980 அட்டாச்மென்ட் அண்ட் லாஸ் 


tenor.com





கருத்துகள்