வணிகம் மூலமே எதிரிகளை நசுக்கி அழிக்கும் வீரனின் ஏகபோக வணிக வாழ்க்கைக் கதை!

 











ஆர்டினரி மேன் இமிக்கிரேட் டு முரிம் வேர்ல்ட்


மாங்கா காமிக்ஸ் 


ஜோ வீ, நவீன உலகில் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறான். அவன் கையில் பணமில்லை. உணவுகளை டெலிவரி செய்யும் வேலையை செய்தபடி படிக்கிறான். பொருளாதார பிரச்னைகளால் காதலும் கடந்துபோகிறது. அம்மாவையும் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையி்ல் உணவு டெலிவரி செய்பவனை சொகுசு கார் ஒன்று மோதி சாய்க்கிறது. அப்போது கழுத்தில் உள்ள சிவப்பு முத்து டாலர் கீழே விழுகிறது. தனது ஒரே குடும்ப சொத்தான அதை கையில் தொடுகிறான். இறந்துபோகிறான். மறுபிறப்பு எடுக்கிறான். 


கொல்லர் குடும்பத்தில் பிறக்கிறான். ஒரு அண்ணன், தங்கை என இருவர் இருக்கிறார்கள். வட்டிக்கு கடன் வாங்கித்தான் உணவே சமைத்து சாப்பிடும் நிலை. இதை ஜோ தனது புத்திசாலித்தனத்தால் மாற்றுகிறான். ஒரு வணிகரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உழவுப்பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கிறான். இதற்கான ஒப்பந்தம், சம்பளம் ஆகியவற்றை நவீன உலகில் வாழ்ந்த அனுபவம், செய்த வேலையிலிருந்து கிடைத்த அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். ஏறத்தாழ அனைத்தும் முதலாளித்துவ உத்திகள். ஆனால், அதை முரிம் உலகில் பலரும் அறியாத காரணத்தால் உழவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் வெல்கிறான். குடும்பமும் பொருளாதார வளர்ச்சி பெறுகிறது. அப்போது அவனது அப்பா, இனி நீதாம்லே முத்து என்பது போல குடும்ப சொத்தான சிவப்பு முத்தை அவனுக்கு வழங்குகிறார். அதாவது, குடும்பத்தலைவர் என்ற அதிகாரம். முற்பிறவியில் இருந்த அவனது சிவப்பு முத்து டாலரேதான். அதாவது, அவன் ஆன்மா, முன்னோர்களது உடலில்தான் புகுந்திருக்கிறது.சிவப்பு முத்துக்குள் உள்ள முன்னோர்களிடம் ஜோவால் உரையாட முடிகிறது. 


அதில் மொத்தம் எட்டு முன்னோர்களின் ஆன்மா உள்ளது. அவர்கள் அனைவருமே கலை, கல்வி, தற்காப்புக்கலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். அந்த டாலரை அணிந்தவர்கள் இறந்துபோனால் அவர்களது ஆன்மா, சிவப்பு முத்துவிற்குள் சென்றுவிடும். ஜோவிற்கு அவனது தொழிலை முன்னேற்ற வேண்டிய அவசியம் உருவாகிறது. எனவே, அங்கு பிரபலமாக உள்ள நாம்கூங் குடும்பத்திடம் சென்று வணிகம் தொடங்குவதற்கான அனுமதி பெற நினைக்கிறான். தினசரி ஆயிரம் பேருக்கு மேல் அங்கு நிற்கிறார்கள். பரவாயில்லை. எப்படியாவது ப்ளூ டோக்கனை பெற்றுவிட்டால் தொழிலை மேம்படுத்தலாம் என நினைக்கிறான். அந்த பயணத்தில் நாங்கூங் குடும்பத்தின் படையில் இணைய ஜோவின் அண்ணன் துடிப்பாக இருக்கிறான். தெருவில் ஜோவின் அண்ணனுக்கும், இன்னொரு இனக்குழுவைச் சேர்ந்த வீரனுக்கும் தற்காப்புக்கலை வீரர் பற்றி வாக்குவாதம் வருகிறது. அதை வயதான பெரியவர் கவனிக்கிறார். ஜோ அண்ணனை ஆற்றுபடுத்தி வந்த வேலையைப் பார்ப்போம் என அழைத்துச் செல்கிறான். ப்ளூடோக்கன் வாங்கி காத்திருக்கும்போது, தெருவில் பார்த்த வயதான பெரியவர் அங்கு வருகிறார். அவர்களை தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார். அவர் அந்த நாம்கூங் இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர். படிப்பாளி. 


அவரைப் பார்க்க, அங்கு எதேச்சையாக அவரது அண்ணன் வருகிறார். அவருக்கு, ஜோவைப் பார்க்கும்போது அவனது உடலில் உள்ள ஆன்ம ஆற்றல் கண்ணில் படுகிறது. அவனை தனது மாணவனாக்கி கொண்டால் நாம்கூங் இனக்குழுவே வளமாகும் என கணக்குப்போடுகிறார். இந்த முயற்சியில் வாய் வழியாக தற்காப்புக்கலை சண்டை போடுகிறார்கள். அதாவது, ஒருவரை எப்படி தாக்குவேன் என்பதை கலையின் பெயரைச் சொல்லி விளக்க வேண்டும். எதிரில் உள்ளவர் அதற்கு பதில் சொல்லவேண்டும். ஆனால், பெரியவர் பதிமூன்று முறை விவாதம் செய்து தோற்றுப்போகிறார். இறுதியாக, அனுபவ தரிசனமும் பெறுகிறார். அதனால் ஜோ கேட்டபடி கடையை திறக்க அனுமதிக்கிறார். அவனது அண்ணனை தனது இனக்குழு படையில் சேர்த்துக்கொள்கிறார். 


சிவப்பு முத்தில் உள்ள ஸ்வோர்ட் காட் அவனுக்கு பெரியவரோடு சண்டையிட உதவுகிறார். அதோடு பிறரும் தங்களது அறிவை ஜோவுக்கு பகிர்கிறார்கள். இதனால், இசை, கணிதம், தற்காப்புக்கலை என அனைத்திலுமே அவன் முன்னிலையில் இருக்கிறான். உணவு, மதுபானம், குதிரை இழுக்கும்படிமான வண்டிகள், உற்சாக பானம், ஹோட்டல், பப் என நிறைய விஷயங்களில் கால் பதிக்கிறான். கூடவே, உணவு டெலிவரி வணிகத்தையும் புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்துகிறான். இதனால், ஜோ எனும் வணிக இனக்குழு தனியாக உருவாகிறது. நாம்கூங் இனக்குழுவின் ஆதரவு இருப்பதால், எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. 


ஜோ வியைப் பொறுத்தவரை அவன் தற்காப்புக்கலை வீரனாக விரும்புவதில்லை. அவனுக்கு வணிகமே இஷ்டம். அதை நோக்கியே நகர்கிறான். வணிகத்தில் அவன் யாரையும் விட கெட்டிக்காரன். ஜெகல் குடும்பத்தின் இரண்டாவது மாஸ்டர், நாங்கூம் குடும்பத்தின் மாஸ்டர், க்ரீன் ஃபாரஸ்ட் கொள்ளைக்கூட்ட தலைவரது மகன் ஆகியோரை ஜோ கண்டுபிடித்து தன்னோடு வைத்துக்கொள்கிறான். அத்தனை பேருமே திறமைசாலிகள். 

இந்த நிலையில் தீயசக்திகள் கூட்டாக சேர்ந்து படையெடுத்து வந்து அன்ஹூயி எனும் பிரதேசத்தை கைப்பற்ற முயல்கிறார்கள். இதை தடுக்க ஜோ வி தனியாக முயன்று வெல்கிறான். அவனுக்கு முரிம் கூட்டமைப்பு தனது சொத்தை தந்திரமாக கைப்பற்றுவது பிடிக்கவில்லை. எனவே, நாம்கூங் குடும்பத்தில் பதவி ஒன்றை பெற்றுக்கொண்டு, தனது வணிகத்தை நடத்துகிறான். தீயசக்திகளை நேரடியாக சென்று தாக்கி சேதத்தை விளைவித்து அவர்களின் போர் படையை திரும்ப பின்வாங்க செய்கிறான். அவனது திட்டத்தைப் பார்த்து வியந்துபோன ஜெகல் குடும்பத்தின் இரண்டாவது மாஸ்டர், தனது முரிம் கூட்டமைப்பு வேலையைக் கைவிட்டு ஜோவுடன் கைகோர்க்கிறான். அவன், ஜோ வணிக குழுமத்தின் துணைத்தலைவராக செயல்படுகிறான். திட்டமிடல் அவனது பணி. பப், ஹோட்டல் எல்லாம் கொள்ளைக்கூட்ட தலைவரின் மகனின் பொறுப்பு. 


ஜோ வி தற்காப்புக்கலையை குகை ஒன்றுக்கு சென்று மூன்று ஆண்டுகள் செலவிட்டு கற்கிறான். ஆனாலும் கூட அவன் பெரிதாக சண்டை போட விரும்புவதில்லை. முடிந்தளவு வணிகத்தை காப்பாற்றவேண்டும். அதற்காகவே சண்டையிடுகிறான். கதை நெடுக வணிகத்தை எப்படி செய்வது, எந்தளவு லாபம் வரும் என்பதை மட்டுமே நாயகன் பேசுகிறான். அதுவே கதைக்கு தனி அடையாளத்தை கொடுக்கிறது. அவனுடன் வேலை செய்யும் நண்பர்களே இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா, பொருட்களை தயாரித்து விற்க முடியுமா என வியந்துபோகிறார்கள். தீயசக்தி இனக்குழு தலைவர், ஜோவை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருக்கிறார். அந்த நேரமும் வருகிறது. ஜோ, தனது தொழிலாளர்களை காப்பாற்ற தீயசக்தி இனக்குழு வீரர்களோடு போரிடுவதோடு கதையின் அத்தியாயம் நிறைவடைகிறது. கதை இன்னும் முடியவில்லை. 


அரசியல், இனக்குழு, புகழ் என எதற்கும் ஆசைப்படாத நாயகன். பணத்திற்கு மட்டுமே செவி சாய்க்கிறான். பணம் மூலமே பலரையும் வெல்கிறான். நண்பர்களை அமைத்துக்கொள்வதே லாபத்திற்காகத்தான். சொன்னபடி ஒப்பந்தம் போட்டு ஊதியத்தையும் தந்துவிடுகிறான். வணிகத்தை கெடுக்கும் ஆட்கள் வரும்போதுதான் தனது தற்காப்புக்கலையைப் பயன்படுத்துகிறான். வணிகம் சார்ந்த சுவாரசியமான கதை. தொன்மைக்காலத்தில் கோலா, பர்கர், உணவு டெலிவரி இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். அருமை.


கோமாளிமேடை டீம் 

https://tenor.com/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்