2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!
பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு?
காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.
GHOSTING
ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்தள கணக்கு, தொடர்புஎண், தங்கியிருந்த இடம் என எங்குமே அவரைப் பார்க்க முடியாது. ஒரு பேய் போல காணாமல் போய்விடுகிறார். பல பத்தாண்டுகளாக இந்த சொல், காதல் உறவில் கையாளப்படுகிறது. தொடக்கத்தில் 2015ஆம் ஆண்டு நடிகர் சீன் பென்னை, அவரது மனைவி சார்லிஸ் தெரன் உறவில் இருந்து விலக்கி காணாமல் போனபோது கூறப்பட்டது. இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர் குழம்பிப் போய், தனது சுய மதிப்பு பற்றி கவலையில் ஆழ்ந்துவிடுவார்.
HAUNTING
திகிலை ஏற்படுத்தும் முயற்சி. சமூக வலைத்தளங்களில் எதுவுமே பேசாமல் லைக் போட்டுவிட்டு உங்களை பின்தொடர்ந்து கண்காணித்தபடி இருக்கும் நபர்களை நடவடிக்கையை இப்படி குறிப்பிடலாம். இன்ஸ்டா, ட்விட்டர் என பின்தொடர்ந்து கண்காணிப்பவர்களை நினைத்தாலே பலருக்கும் ரத்த அழுத்தம் உயர்ந்து மனதில் பீதி கூடும்.
RIZZ
2023ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் இடம்பெற்ற அந்த ஆண்டுக்கான சொல். வசீகரம், கவர்ச்சி, பிறரை கவர்ந்திழுக்கும் தன்மை என்று கூறலாம். இதை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடாது. பழனி படிக்கட்டு போல உடல், ஜில்லெட் ஷேவிங்க் க்ரீம் கன்னம் பற்றியெல்லாம் கூறவில்லை. ஒருவரின் செயல்பாடு வழியாக அவர் உருவாக்கும் கவர்ச்சி என்று புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூப் பிரபலமான கை செனட் என்பவர், ரிஷ் என்ற சொல்லை பிரபலப்படுத்தினார். 2022ஆம் ஆண்டு டிக்டாக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் இந்த சொல் மிக பிரபலமாக இருந்தது. தற்போதைய சூழலில் ஆல்பா மேல் என்று சொன்னால் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா நினைவுக்கு வருகிறார் அல்லவா, அதைப்போல வைத்துக்கொள்ளலாம்.
BREAD-CRUMBING
சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு லைக், கமெண்ட் செய்வார்கள். சந்திப்பார்கள். பேசுவார்கள். ஆனால் உறவில் நம்பிக்கையாக இருக்கமாட்டார்கள். ஓகே அவருக்கு நம் மீது ஆர்வம் இல்லை என்று வேறு ஆட்களை டிண்டரில் தேடும்போது, குறுக்கே கௌசிக் மாறி வந்து குழப்புவார்கள். இந்த சொல்லை சைக்காலஜி டுடே இதழ் பிரபலப்படுத்தியது. இதன் மூலாதாரம், ஹான்செல், கிரேட்டல் எனும் நாட்டுப்புற கதையில் இருந்து பெறப்பட்டது.
BENCHING/COOKIE-JARRING
இந்த சொல்லின் மூலாதாரம் தெரியவில்லை. வண்டி பஞ்சரானால் எப்படி ஸ்டெப்னி வைத்திருப்போமோ அதேபோல சிலர் தங்கள் உறவில் அவருக்கு பதில் இவர் என சப்ஸ்டிடியூட் வைத்திருப்பார்கள். காதலுக்கு, கல்யாணத்திற்கு என இப்படி இன்னொரு ஆளை பெஞ்சில் உட்கார வைத்துக்கொண்டே இன்னொருவருடன் உறவில் இருப்பார்கள். நடப்பில் உள்ள ஆள், வேலைக்கு ஆகவில்லையெனில், பெஞ்சில் அமர்த்தப்பட்டவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
SITUATIONSHIP
2017ஆம் ஆண்டு, எழுத்தாளர் கரினா சைக், பிரபலப்படுத்திய சொல். இருவர் நட்பில் இருக்கிறார்களா, காதலில் இருக்கிறார்களா என்று அவர்களுக்கே தெரியாத நிலை. நட்பு, காதல் என இரண்டுக்கும் நடுவில் சரியா, தவறா என குழப்பத்தில் இருக்கும் நிலை. தங்கள் உறவுக்கு எந்த லேபிளும் குத்தாமல் அதைப் பற்றி ஒருவருக்கொருவர் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
PHUBBING
சிலர் தங்கள் காதலர்/காதலி பேசினால் கூட கவனிக்காமல் போனை நோண்டியபடி இருப்பார்கள். அவர்களை இந்த சொல் குறிப்பிடுகிறது. இந்த சொல்லை 2012ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விளம்பர நிறுவனமான மெக்கேன் உருவாக்கி பிரபலப்படுத்தியது.
Green flag and cobweb
முன்னாள் காதலர், உறவு பற்றிய நினைவுகளிலிருந்து ஒருவரை வெளியே கொண்டு வர செய்யும் முயற்சி எனலாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
tenor.com
கருத்துகள்
கருத்துரையிடுக