மீண்டும் பிளேக் நோய்!

 










2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளேக் நோய், வளர்ப்பு பிராணியான பூனை மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகானில் பிளேக் நோயை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உயிர் எதிரி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிளேக் நோயை ஏற்படுத்திய பூனைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அதை காப்பாற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் 1346 -1353 காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயால் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். இதை கருப்பு மரணம் என்று அழைத்தனர். 


பிளேக் நோய், யெர்சினா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகளை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும். 


நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதன் வழியாக, அதன் உடலில் உள்ள எச்சில், மலம், சிறுநீர் வழியாக, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கிருமிகள் மனிதர்களின் நுரையீரலுக்கு செல்வதன் மூலம் என பிளேக் நோய் பரவ மூன்று காரணங்கள் உள்ளன. ஒருவரின் உடலில் பாக்டீரியா சென்ற பிறகு, அவருக்கு காய்ச்சல், தலைவலி, பலவீனம், உடலில் வலி, தளர்ச்சி ஆகிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. 

ரத்தவோட்டத்தில் கிருமி கலந்தபிறகு வயிற்று வலி, அதிர்ச்சி, தோல் வழியாக ரத்தக்கசிவு, கை, கால் விரல் நகங்கள் கருப்பு நிறமாக மாறுவது ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், நோயை குணப்படுத்த முடியாத நிலை என புரிந்துகொள்ளலாம். ஒருவரின் நுரையீரலுக்கு பாக்டீரியா சென்றுவிட்டால், அவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவும் வாய்ப்பு உள்ளது. 


வரலாற்றில், இன்ப்ளூயன்சாவால் ஏற்பட்ட மரணத்திற்கு அடுத்தபடியாக கருப்பு மரணமே அதிக மக்களை பலிவாங்கிய நோயாக உள்ளது. கருப்பு மரணத்தின் காரணமாக, ஐரோப்பாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை அழிந்துபோனது. இப்போது பிளேக் நோய் ஏற்பட்டால், அதிலிருந்து மனிதர்கள் தப்பி பிழைத்து வாழ்வதற்கு 40 சதவீத வாய்ப்பு உள்ளது. அதுவும் கூட மரபணு ரீதியாக மேம்பட்டு இருந்தால் மட்டுமே சாத்தியம். இப்படி பிழைத்திருப்பவர்கள் வலிமையான, குறிப்பிட்ட உடல் அமைப்பு கொண்டவர்களாக ஆரோக்கியமான பழக்கங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் என சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரான லூயிஸ் பாரிரோ கூறினார். 


ஐரோப்பாவில் கருப்பு மரணம் ஏற்படுத்திய சமூக கலாசார பொருளாதார விளைவுகள் பெரியவை. இதைப்பற்றி எழுத்தாளர் ஜேம்ஸ் பெலிச், 2022ஆம் ஆண்டு எழுதிய 'தி வேர்ல்ட் தி பிளேக் மோட்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். கருப்பு மரண சம்பவத்திற்கு பிறகு, ஐரோப்பா எழுச்சியுடன் மீண்டெழுந்தது. 


பிளேக் நோய் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட பிளேக் நோய் புதிதானதல்ல. அதைக்கண்டு ஒருவர் அஞ்ச வேண்டும் என்பதில்லை. மடகாஸ்கர், பெரு, காங்கோ ஆகிய நாடுகளில் பிளேக் நோய் இன்றும் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பிளேக் நோய் நோயாளிகள் உள்ளனர். இந்த நோயால் ஏற்படும் மரணம் என்பது 11 சதவீதமாக உள்ளது. இன்றைக்கு பிளேக் நோய்களை சற்று முன்னதாக கண்டுபிடித்தாலே உயிர் எதிரி மருந்துகளைக் கொடுத்து அதை குணப்படுத்திவிட முடியும். நோயாளியை தூய்மையான இடத்தில் வைத்து பராமரித்து மருந்துகளை கொடுத்தாலே ஒய் பெஸ்டிஸ் பாக்டீரியாவை தடுக்க முடியும். 


பிளேக் நோயை தற்போதைய உயிர் எதிரி மருந்துகளால் தடுக்கமுடிகிறது. ஆனால், இந்த கிருமிகள் மருந்துகளுக்கு எதிரான ஆற்றலைப் பெறும்போது மீண்டும் பிளேக் நோயைப் பற்றி அனைவரும் பேச வாய்ப்புள்ளது. அதுவரைக்கும் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. 


இந்தியன் எக்ஸ்பிரஸ் 

getty images

Plague is an infectious disease caused by the bacterium Yersinia pestis. Symptoms include fever, weakness and headache. Usually this begins one to seven days after exposure. There are three forms of plague, each affecting a different part of the body and causing associated symptoms. Wikipedia

கருத்துகள்