வகுப்பறையில் சுயமாக கற்கும் மாணவர்கள்

 










குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் 

ஜீன் பியாஜெட் 


குழந்தையின் முதல் நிலை சென்சரி மோட்டார். இதன்படி, குழந்தைகள் தங்களின் புலன்களின் வழியே அனைத்தையும் தெரிந்துகொள்ள முயல்வார்கள். இதில் உடல் இயக்கம் முக்கியமாக இருக்கும். இந்த வயதில் சிறுவர்கள், தன்முனைப்பு கொண்டவர்களாக இருப்பார்ள். உலகை தங்களது பார்வைக்கோணத்தில் பார்ப்பார்கள். இந்த காலகட்டத்தில் நடக்கும் விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பார்கள். இந்த சூழல், எந்த உள்நோக்கமும் இல்லாமல் நடக்கும். பின்னாளில் தங்கள் செயல்களை அவர்கள் பொருட்களுடன் இணைத்து பொருத்திக்கொள்வார்கள். 


கண்ணுக்கு தெரியாத பொருட்களை தேடுவது போல தங்களது செயல்களை அமைத்துக்கொள்வதை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்களை உணர்ந்துகொள்ளும் நிலையில் இருப்பார்கள். அடையாளங்கள், மொழி, புகைப்படங்கள் ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டு இயங்குவார்கள். அடுத்த நிலை, ப்ரீ ஆபரேஷனல். இந்த நிலையில் குழந்தைகள் பொருட்களை தங்களது காரண காரியங்களுக்கு ஏற்பட பொருத்திப் பார்க்க தொடங்குவார்கள்.விளையாடும் பொருட்களை நிறம், உயரம் சார்ந்து அடுக்கிப் பார்ப்பார்கள். இரண்டிலிருந்து  நான்கு வயது வரையில் பெரியது, எடை அதிகமானது என பொருட்களை புரிந்துகொள்வார்கள். இந்த வயதிலும் பிறரது பார்வைக்கோணத்தை அவர்களால் புரிந்துகொள்ள இயலாது. தங்களை மையப்படுத்தியே இயங்குவார்கள். 


அடுத்தது, ஆபரேஷனல் நிலை. இதில் குழந்தைகளின் தன்முனைப்பு நிலை சற்று குறையும். அவர்களால் தங்கள் முன் உள்ள பொருட்களை வேறுபடுத்தி பார்க்கமுடியும், வேறுபாடுகளை துல்லியமாக உணரமுடியும். இதற்கடுத்த நிலையில், குழந்தைகளின் தன்முனைப்பு குறைவாகவே இருக்கும். ஒருவர் கூறும் வாதம் சார்ந்து யோசித்து அதை புரிந்துகொள்ள முடிவெடுக்க தொடங்குவார்கள். 


பியாஜெட்டின் ஆய்வு, ஐரோப்பிய, அமெரிக்க கல்வி முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எழுபது, எண்பதுகளில் குழந்தைகளை மையப்படுத்திய கல்வி முறை உருவானது. கணிதம், அறிவியல் சார்ந்த பாடங்களில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அவர்களே செய்துபார்க்கும்படியான செயல்களை கொடுத்தார்கள். குறிப்பிட்ட செயல்களை செய்து பார்த்து அதன் வழிமுறை வழியாகவே பாடங்களை, மையக்கருத்தை கற்கும் முறை அன்றைய காலத்திற்கு புதிது. வகுப்பறையில் பாடத்தில் பங்கேற்காமல் அமர்ந்து ஆசிரியர் கூறுவதைக் கேட்பதை விட கற்கும் செயல்முறையில் பங்கேற்பது குழந்தைகளை ஊக்குவிக்கிறது. அவர்களின் அறிவுத்திறனை கூர்மையாக்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டு மான்டிசோரி பள்ளி. இங்கு குழந்தைகள் பல்வேறு செயல்பாடுகளை செயல்களில் வழியாக கற்கிறார்கள். மேலும் தங்களின் கருத்துகள் பற்றி பேசுவதும் நடைபெறுகிறது. மாணவர்களை மையப்படுத்திய கல்வியில் கேள்விகள், அதில் கிடைக்கும் பதில்கள், நேரடியான செயல்வழி கற்றல் முறை முக்கியப் பங்காற்றுகிறது. இதில் ஆசிரியர் வழிகாட்டி மட்டும்தான். மாணவர்களே ஒருவருக்கொருவர் பிறருக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். 

cartton stock

கருத்துகள்