டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

 










How To Disappear: Erase Your Digital Footprint, Leave False...

Author: Frank M. Ahearn Publisher: Lyons Press


தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார். 


இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார். 


அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவனத்திற்கு நிரந்தர சிக்கல்களை கொண்டு வரும் என உணர்ந்திருக்கிறார். அப்படியான குற்றவாளிகளை, மனநிலை பாதித்த ஆட்களை சந்தித்த அனுபவங்களை, அதனால் அடைந்த பிரச்னைகளையும் விளக்கியிருக்கிறார். ஃப்ராங்க், ஒருவரின் அடையாளத்தை மறைத்து அவர்கள் வாழ்வதற்கான உதவிகளை வழங்கி வருகிறார். கட்டண சேவைதான். அதை அவர் சட்டப்பூர்வமாக செய்கிறார். அரசுக்கு எதிராக இயங்கவில்லை. இயங்கவும் விருப்பமில்லை என்று கூறுகிறார். 


இணையத்தில் ஒருவர் இயங்கும்போது எப்படி உண்மையான தகவல்களை தராமல் தவிர்ப்பது, தனது அந்தரங்க வாழ்க்கையைப் பாதுகாப்பது, பொருட்களை வாங்கும்போது பெயர், போன் நம்பர் ஆகியவற்றை மாற்றிக்கொடுப்பது, மேலும் பல சேவைகளை குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் வாங்குவது என நிறைய ஆலோசனைகளைக் கூறுகிறார். இணையத்தில் ஒருவரின் உண்மையான அடையாளத்தை தேடி எடுத்து அவரை கேலி, கிண்டல், சித்திரவதை செய்வது, போலி வீடியோக்களை உருவாக்குவது என சூழலே முழுக்க நச்சாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஃப்ராங்க் எழுதியுள்ள நூல் நம்மை எச்சரிக்கை செய்கிறது. நூலை படிக்கும்போதே நமக்கு இணையத்தில் கொடுத்த உண்மையாக தகவல்கள் மனக்கண்ணில் வந்து போகிறது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை இணையத்தில் கொடுத்த தகவல்கள் ஏற்படுத்துகிறது என்கிறபோதுதான் நமக்கு பீதியாகிறது. அதுவரை பகிர்ந்த புகைப்படங்கள், செய்திகள், முகவரிகள் ஏதும் பெரிதாக பாதிப்பதில்லை. 


எந்தெந்த வலைத்தளங்களில் நம்மைப் பற்றிய தகவல்களை சோதித்துக்கொள்வது, பாதுகாப்பாக இருக்க உதவி செய்யும் வலைத்தளங்கள் என நிறைய ஆலோசனைகள் நூலில் உள்ளன. 


நூலின் முதல் அத்தியாயத்தில் இளைஞர் ஒருவர் நூல் கடையில் புத்தகம் ஒன்றை வாங்குவதை நூலாசிரியர் பார்க்கிறார். அதாவது, தனது அடையாளத்தை மறைத்து வாழ்வது பற்றிய புத்தகம். புத்தகத்தை கிரடிட்கார்ட் கொடுத்து வாங்குகிறார். பிறகு, ஃப்ராங்க் அந்த இளைஞரை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடத் தொடங்குகிறார். அப்படித்தான் நூல் சுவாரசியமாக தொடங்குகிறது. ஃப்ராங்க், தன்னை ஸ்கிப் டிரேசர் என அழைக்கிறார். 


போன் அழைப்பில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து பேசி தகவலைகளை கறப்பது பற்றிய எடுத்துக்காட்டுகள் சிறப்பாக உள்ளன. நேரடியாக தனக்கு வேண்டியதை கேட்காமல், வேண்டியதை சுற்றிவளைத்து தொடர்புடைய நபரையே சொல்ல வைக்கும் உத்தி அட்டகாசம். இது ஏஐ காலம். இப்போது இதுபோல தகவல்களை எப்படி அறிவது என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், அண்மையில் ஓப்பன் ஏஐயின் சாட் ஜிபிடியில் குறிப்பிட்ட கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பெற முடியும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. இதை ஆனந்தவிகடன் இதழில்,  தொழில்நுட்ப வல்லுநர் அண்டன் பிரகாஷ் எழுதியுள்ளார். எனவே, முழுக்க தகவல்களை மறைத்து வைப்பது கடினம் என புரிந்துகொள்ளலாம். 


இணையத்தில் தனிநபர் எந்தளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிற நூல். இந்த மையப்பொருள் சார்ந்து கவனம் கொண்டவர்கள் நூலை வாங்கி வாசிக்கலாம்.  

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்