அரசியலில் கருவியாக பயன்படுத்தப்படும் உளவியல் பற்றி பேசி விமர்சித்ததால் கொல்லப்பட்ட உளவியலாளர்

 










ignacio martin baro


இக்னாசியோ மார்ட்டின் பாரோ ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். 1959ஆம் ஆண்டு, மதக்கல்வியைக் கற்க தென் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈகுவடாரின் கொய்டோவில் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். கொலம்பியாவில் உள்ள ஜாவெரியனா பல்கலையிலும் படித்தார். 1996ஆம் ஆண்டு, பாதிரியாக தேர்ச்சி பெற்றவர், எல் சால்வடோருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சான் சால்வடோரி்ல் உள்ள சென்ட்ரல் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். உளவியல் பற்றி படித்து பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமூக உளவியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் அங்கயே உள்ள உளவியல் துறையில் தலைவராக மாறினார். பிறகு, சென்ட்ரல் அமெரிக்காவிற்கு சென்றார். 


மார்ட்டின் பாரோ, எல் சால்வடோரில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 1986ஆம் ஆண்டு, பொதுமக்களின் கருத்து என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்கினார். ராணுவத்தின் படுகொலைப் பிரிவு, மார்ட்டினோடு சேர்ந்து மேலும் ஐந்துபேர்களை படுகொலை செய்தது. அரசியல் ஊழல், அநீதி என குற்றம்சாட்டி படுகொலையை நியாயப்படுத்தினர். 


முக்கிய படைப்புகள் 


1983 ஆக்‌ஷன் அண்ட் ஐடியாலஜி

1989 சிஸ்டம் க்ரூப் அண்ட் பவர்

1994 ரைட்டிங்க்ஸ் ஃபார் எ லிபரேஷன் சைக்காலஜி


தனிநபருக்கும், சமூகத்திற்கும் உள்ள உறவைப் பொறுத்தே மோசமான சம்பவங்களைப் புரிந்துகொள்ள முடியும் என உளவியலாளர் இக்னாசியோ மார்ட்டின் பாரோ கூறினார். 1980ஆம் ஆண்டு, எல் சால்வடோரில் நடந்த வன்முறை, அநீதியான செயல்களின் அடிப்படையில் மார்ட்டின் அவ்வாறு கூற நேரிட்டது. பொதுவாக உளவியலில் பாகுபாட்டை எப்படி அணுகுவார்களோ அந்த முறையை மார்ட்டின் புறக்கணித்தார். வரலாறு, சமூக உறவுகள் அடிப்படையில் மனிதர்களை ஆய்வு செய்யவேண்டும் என்பதே அவரது கருத்து. 


ஒடுக்கப்பட்டு வருகிற, நெருக்கடிகளை சந்தித்து வரும் இனக்குழுவினர், சமூகத்திற்கு தெரிவிக்கும் எதிர்வினைகள் வேறுவிதமானவை. அது பிற இனக்குழுவின் மனிதர்களின் எதிர்வினைகளை ஒத்திருக்காது. ஒரு மனிதர் எதுமாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறாரோ அதைப் புரிந்துகொண்டு அவரது வாழ்வை ஆய்வுசெய்யவேண்டும் என மார்ட்டின் கருதினார். நெருக்கடியான சூழ்நிலையில், அழுத்தங்களை சமாளித்து  வாழ்பவரது மனநிலை பாதிக்கப்படுகிறது. அவர்களை ஆய்வு செய்வதன் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சமூகத்திற்கு கிடைக்கிறது. 


1980ஆம் ஆண்டு சுதந்திர உளவியல் என்பதை மார்ட்டின் உருவாக்கினார். தொன்மையான உளவியல் என்பது நிறைய குறைபாடுகளைக் கொண்டுள்ளது. நடைமுறையில் சமூக பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்குவதில்லை. பெரும்பாலான கோட்பாடுகள், செல்வம் நிறைந்த நாடுகளில் உருவாக்கப்படுகின்றன. எனவே, அழுத்தப்படும் மனிதர்களின், சமூகங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை. ஒருவருக்கு தேவையான நம்பிக்கை, துணிச்சல், கடமை ஆகியவற்றை வழங்குவதில்லை. மேற்கத்திய உளவியல் என்பது, தனிநபர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க வைப்பதே முக்கிய இலக்காக உள்ளது. மனிதர்களுக்கான சுதந்திரமோ அல்லது நீதிக்கோ எந்த உதவியையும் வழங்குவதில்லை. அதைப்பற்றி பேசுவதும் இல்லை. 


1994ஆம் ஆண்டு ரைட்டிங்க்ஸ் ஃபார் எ லிபரேஷன் சைக்காலஜி என்ற கட்டுரை நூல் வெளியானது. இதில், போர், அரசியலில் உளவியல் எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என விளக்கப்பட்டிருந்தது. மதம் என்பதை ஆயுதமாக பயன்படுத்தி வன்முறை, மோசமான விபத்துகளை ஒருவர் உருவாக்க முடியும் என்பதை உளவியல் ரீதியாக மார்ட்டின் கூறினார். சமூக ரீதியாக விலக்கப்பட்டவர்கள், வறுமையில் உள்ளவர்கள் ஆகிய மக்களை ஆய்வுசெய்தார். அர்ஜென்டினா, சிலி, புவர்டோ ரிகோ, வெனிசுலா, பிரேசில், கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளில் உள்ள மக்களின் நிலையை ஆராய்ந்தார். அந்நாடுகளில் அப்போது வறுமை, உள்நாட்டுப் போர், கலகம், ஊழல், பாகுபாடு நிறைந்திருந்த காலமது. 


அரசியல் அழுத்தம், உள்நாட்டுப் போர் காரணமாக மக்களுக்கு ஏற்படும் மனநிலை பாதிப்புகள் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமூக, அரசியல் நிலைமைகள் மனிதர்களை வெவ்வேறு விதமாக பாதிக்கிறது. மத்திய அமெரிக்காவை மையப்படுத்தியே மார்ட்டின் பாரோவின் ஆய்வுகள் அமைந்தன. ஆனால், ஆய்வை நெருக்கமாக கவனித்தால் மக்களின் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, அரசியல் நிலைமைகளை எளிதாக புரிந்துகொள்ளலாம். அநீதிக்கு எதிராக போராடும் ஒருவரின் செயல்பாடு, மனநலன் ஆகியவை ஒன்றாக இணைந்தே உள்ளன. இவற்றை இணைத்துப் பார்த்தால் மனநிலைக் குறைபாடுகளை எளிதாக புரிந்துகொள்ளமுடியும். 


கருத்துகள்