அண்டர்கவர் ஏஜென்டாக இருந்து காணாமல் போன அம்மாவைக் கண்டுபிடிக்க செல்லும் மகனின் கதை!

 














சேஸ் தி ட்ரூத் 

24 எபிசோடுகள்

சீன டிராமா

நாயகன் போலீஸ் அதிகாரி. அவனது அம்மா, சிறுவயதிலேயே வடமேற்கு ஓநாய் குழுவைப் பிடிக்க அதில் இடம்பிடித்தவர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான தொடர்பு காவல்துறையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. அவர் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா, காவல்துறைக்கு துரோகம் செய்துவிட்டாரா என பல கணிப்புகள் நிலவுகின்றன. நாயகன், தனது அம்மாவைத் தேடி வடமேற்கு ஓநாய் குழுவைத் தேடி கிளம்புகிறான். இதில் அவன் சந்திக்கும் சவால்களே கதை. 


இந்த தொடரின் பலம், சண்டைக்காட்சிகளும், உணர்ச்சிகரமான பாசம் தொடர்பான உரையாடல்களும்தான். அதுதான் தொடரை பார்க்க வைக்கிறது. சுவாரசியமானதாக மாற்றுகிறது. 


தொடர் நெடுக ஓநாய்களின் ஓவியங்கள், அதன் பொம்மைகள், கிராபிக்சில் ஓடிவரும் ஓநாய்கள் என பார்க்க அழகாக இருக்கிறது. மனிதர்கள் நகருவது போலவே கேமராவும் ஹான்பெய், காலிசா, பாலைவனம், மலைதொடர்கள் என நகர்கிறது. கதையின் வழியாக அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. காவல்துறைக்கும், வடமேற்கு ஓநாய் குழுவுக்கும் நடைபெறும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் இறுதிப்பகுதியில் வடமேற்கு ஓநாய் குழுவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் குண்டுவெடிப்பு காட்சிகள் பிரமாண்டம். தொடரில் நிறைய கார் துரத்தல் காட்சிகள் உள்ளன. 


முக்கிய பாத்திரங்களின் மனநிலையைப் பார்ப்போம். 


இந்த தொடர் முடிந்தது போல தெரிந்தாலும் உண்மையாக கதை இறுதிக்கு வரவில்லை. ஏனெனில், நிறைய பாத்திரங்களின் பின்னணிக் கதையை நாம் அறிய வேண்டியுள்ளது. ஓநாய் ராஜா இறந்துவிட்டதாக டாய், கு லின்னாவுக்கு புகைப்படம் ஒன்றைக் காட்டினாலும் கூட அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் அவர் பாதுகாப்பான இடத்தில் உதவியாளருடன் இருப்பதை அடிக்கடி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பாலைவன பொக்கிஷம் என்பதும் கூட குறைவாகத்தான் பிடிபடுகிறது. இதையும் டாய் வாய்விட்டே சொல்கிறார். ரெய்டு போகும் விஷயத்தை ஓநாய்ராஜாவின் மூத்தமகள் தெரிந்துகொண்டு இருக்கிறாள். எனவே அவள், தனது தந்தைக்காக உதவி இருக்க வாய்ப்புள்ளது. இதெல்லாம் தொடரை அடுத்த சீசன் எடுத்தால் தெரிந்துவிடும். சில முக்கியமான பாத்திரங்களைப் பார்ப்போம்.



மாமா செங் ஃபேன்


இவருடைய முன்னாள் காதலி வேறு யாருமல்ல நாயகனின் அம்மாதான். அவரைக் காதலித்தாலும் அதை கல்யாணம் வரை கொண்டு செல்லும் சாமர்த்தியம் செங்கிற்கு இல்லை. எனவே, அவர் ஒருதலையாக காதலித்த பெண் இன்னொருவரை மணம் செய்துகொள்கிறாள். பிள்ளையும் பிறக்கிறது. அச்சமயம், ஒருதலைக்காதலி குற்றவாளிகளை பிடிக்க வெளியே செல்வதால், தனது மகனைப் பார்த்துக்கொள்ள செங்கை கேட்டுக்கொள்கிறார். அவரும் சரி என்கிறார். இந்த சமயத்தில் செங்கிற்கு, மருத்துவராக வேலை செய்யும் மு என்ற பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. காதல் கனியும் வேளை என்று கூட சொல்லலாம். 


வடமேற்கு ஓநாய் குழுவை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில், தவறுதலாக இருமி போலீசுக்கு சிக்னல் கொடுத்து அதனால் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளாகிறார். இதனால் வடமேற்கு ஓநாய்க்குழு உஷாராகி தப்பி ஓடுகிறது. செங்கிற்கு இதயம் சரி செய்ய முடியாதபடி பலவீனமாகிறது. அதாவது, எப்போது வேண்டுமானாலும் இறந்துபோகலாம் என்ற நிலை. 


அவர் தன் வாழ்நாளில் மூன்று பெண்களை காதலிக்கிறார். அவர்களில் யாரையும் இவர் பக்கம் திருப்ப முடியவில்லை. இறுதியாக காதலிக்கும் பெண்ணின் அப்பாவையும் கொலை செய்து அந்தக காதலையும் இழுத்து மூடுகிறார். தொடரில், அதுபற்றி குற்ற உணர்வுடன்தான் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்துபோகிறார். காவல்துறையினருக்காக, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். பரிதாபமான பாத்திரம். பிறருக்காக, அவர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை தியாகம் செய்கிறார். 


காவல்துறை தலைவர் டாய்


பத்தாண்டுகளுக்கு மேலாக வடமேற்கு ஓநாய் குழுவை வேட்டையாட முயன்று தோற்றுக்கொண்டே இருப்பவர். இறுதியாக இளைஞர்களை மட்டும் நம்பி களமிறங்கி வெற்றி பெறுகிறார். அதிலும் கணிசமாக பகுதி மட்டுமே வெல்கிறார். ஓநாய்ராஜா நினைவுகளை இழந்துபோனாலும் கூட உயிருடன்தான் இருக்கிறார். அவரின் சொத்துகளை பாதுகாக்க அவரது மூத்தமகள் உதவுகிறாள். இதை தொடரில் இறுதியாகவே டாய், மு லின்னா மூலம் தெரிந்துகொள்கிறார். ஒரே அறையில் இருந்தபடி தனது மாணவர்களை வைத்தே அனைத்து தந்திரமான செயல்பாடுகளையும் முறியடிக்கிறார். பல்வேறு கணக்குகளை போட்டுக்கொண்டு துக்கம் தோய்ந்த முகத்தோடு வலம் வரும் தந்திரமான ஆள் டாய். தாய் செய்யமுடியாததை, அவளது மகனை வைத்தே முடிவுக்கு கொண்டு வருகிறார். தனது செயல்பாடுகளை பிற அதிகாரிகளுக்கு சொல்லாமல் செய்து வெற்றி பெறுகிறார். பிறர் யூகிக்க முடியாத கணக்குகளை போட்டு, அதிகாரிகளை கண்காணிக்கும் மர்மான ஆள் டாய். 


கு லின்னா


கு முலன் எனும் ஓநாய் ராஜாவின் மகள். தொடரில் பாசமா, சட்டமா என குழம்பி இறுதியாக சட்டம் என முடிவெடுப்பவள். போலீஸ் அதிகாரியான நாயகனை காதலிக்கும் பெண். முழுக்கவே காலிஷா எனும் பாலைவனப் பகுதியைச் சேர்ந்த நடனப்பெண். இவளைப் பாதுகாக்கவே தனி பாதுகாப்பு ஆட்கள் உண்டு. கு லின்னாவைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் லட்சியத்தை அடைய நிறையப் பேர் முயல்கிறார்கள். நாயகன் மட்டுமே அதை செய்வதில்லை. லின்னா, ஆபத்தில் இருக்கும்போது அவன் இயல்பாக அவளைக் காப்பாற்றுகிறான். இப்படியான சந்திப்புகள் திடீரென அசந்தர்ப்பான சூழலில் இருமுறை நடக்க, லின்னா நாயகனைப் பற்றி அறிய நினைக்கிறாள். அவளுக்கு நடனத்தில் தான் சாதிக்கவேண்டும் என்பதே ஆசை. ஆனால் கு முலானின் இரண்டாவது மகள் என்ற சாபம் அவளை சும்மாவிடுவதில்லை. 


தனது அப்பா, அம்மா, மாமா ஆகியோரை காவல்துறை கொன்றதோடு இல்லாமல் தனது காலையும் சுட்டு ஊனமாக்கிய கோபம் அவளுடைய மனதில் உள்ளது. ஆனாலும் காவல்துறையோடு போராடி தேவையில்லாமல் வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ள நினைப்பதில்லை. அவளுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, வடமேற்கு ஓநாய் குழுவை இயக்குவது, அல்லது இயங்குவதற்கு ஒத்துழைப்பு அளிப்பது. மற்றொன்று, சட்டப்படி வடமேற்கு ஓநாய் குழுவை ஒடுக்க உதவுவது. லின்னா இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்கிறாள். இதன் மூலம் தனது குடும்பத்தில் மிச்சம் உள்ள ஆட்களைக் காப்பாற்ற நினைக்கிறாள். ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டுமே?


குன் ஃபெய்


வளர்ப்பு பிள்ளை. சட்டத்திற்கு உட்பட்டு வாழவா, இல்லை தன்னை எடுத்து வளர்த்தவரின் வழியைப் பின்பற்றவா என தடுமாறிக்கொண்டே இருக்கும் பாத்திரம். உண்மையில் பல்வேறு குற்றங்களை செய்த பாதி வழியில்தான், தான் வளர்ப்பு பிள்ளை என்றே ஃபெய்க்கு தெரிகிறது. அடுத்த அதிர்ச்சியாக, அவரது உயிரியல் தந்தையைக் கொன்றவரைத்தான் தான் தந்தை என்று அழைத்துக்கொண்டு இருக்கிறோம் என புரிந்து தன் மீதே கழிவிரக்கம் கொள்கிறார். ஃபெய்யின் குண இயல்பு தெரிந்துகொண்டதால் நாயகன் இவனைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தபோதும் கொல்வதில்லை. உண்மையில் ஃபெய் உயிர் வாழ்வதே பிறர் அவனுக்கு போடும் பிச்சைதான். அதை நினைத்து நிறைய சமயங்களில் வருத்தப்பட்டாலும் உயிரோடு இருப்பது முக்கியம் என ஆறுதல் கொள்கிறான். அவனுடைய காதலியைக் காப்பாற்ற நினைத்துப் பார்க்க முடியாத தவறுகளை செய்கிறான். அவளை விலகச்சொல்லி கெஞ்சி கொஞ்சி மிரட்டினாலும் கூட அவளும் போவதில்லை. அவனையும் விடுவதில்லை. 


இயலாமையும், கழிவிரக்கமும் கொண்ட பாத்திரம். கடைசி வரை அப்படி இருக்கிறது. புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து கடைசியில் பிறரால் ஏமாற்றப்பட்டு உயிரையும், காதலியையும் மட்டுமே காப்பாற்றிக்கொள்கிறது. 


குற்றம், அதன் விளைவுகள், அதில் ஈடுபவர்களின் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை சிறப்பாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள், கார் துரத்தல்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார்கள். 


கோமாளிமேடை டீம் 

"Chase the Truth" is a 2023 Chinese drama series directed by Jack Zhao, starring Wang Ziqi, Tian Yu, and Su Xiaotong. It is a suspenseful crime drama with 24 episodes and a duration of 45 minutes.

கருத்துகள்