ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான அர்த்தம் - விக்டர் ஃபிராங்கல்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங்
விக்டர் ஃபிராங்கல்
உளவியல் நூல்
ஆஸ்திரியாவைச் சேர்ந்தவரான விக்டர், நாஜிப்படையினரால் பிடிபட்டு வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைத்த வரலாறு கொண்டவர். இதுபற்றி அவர் எழுதிய நூல்தான் இது. சித்திரவதை முகாம் என்றதும், முழுமையாக நூல் முழுவதும் மோசமான சித்திரவதை அனுபவங்கள்தான் இருக்கும் என நினைக்கவேண்டியதில்லை. நூல் 69 பக்கங்களைக் கொண்டது. ஆனால் படித்து முடிக்க அந்தளவு எளிமையாக இல்லை. அந்தளவு அனுபவங்களின் அடர்த்தி உள்ளது.
நூல் இருபாகங்களாக உள்ளது. முதல்பகுதி முழுக்க வதை முகாம்களின் அனுபவங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில், தனது வதைமுகாம் அனுபவங்களின் அடிப்படையில் அவர் கண்டறிந்த லீகோதெரபி எனும் உளவியல் உத்தியை விளக்கியிருக்கிறார். இந்த உத்திகளை படித்து புரிந்துகொள்வது அவர் சார்ந்த துறையினருக்கு எளிமையாக இருக்கலாம். சாதாரணமாக ஒருவர் அதைப் படித்தால் சற்று தலைச்சுற்றிப்போகும் அபாயம் உள்ளது. முயற்சி செய்யலாம். சில நோயாளிகளைப் பற்றிய அனுபவங்களைக் கூறியுள்ளார். அதைப்படிக்கும்போது முன்முடிவுகளின் ஆபத்து கண்களுக்குத் தெரிகிறது.
நூலின் தொடக்கத்திலேயே தான் வதை முகாம் அனுபவங்களை விவரிக்கப் போவதில்லை என்று கூறிவிடுகிறார். ஆனாலும் கூட அவர் எளிமையாக சில அனுபவங்களை, சாடிச காவலர்களின் செயல்பாடுகளை விவரிக்கும்போதே மனதில் வலியும் வேதனையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, யாரொரு ஒரு கைதி செய்த குற்றத்திற்கு அனைவரையும் கடும் குளிரில் அப்படியே உட்கார வைத்திருப்பது, கைதிகள்குளிர் காய வைத்திருக்கும் ஸ்டவ்வை காவலர்கள் உதைத்து தள்ளுவது ஆகிய சம்பவங்கள்.
வதைமுகாமில் ஒருவருக்கு கிடைக்கும் உணவு மிக குறைவு. அங்கிருக்கும் காவலர்கள் சித்திரவதை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். சாடிச குணமுடையவர்கள் அதைக்கடந்து உயிர் வாழ வேண்டும் என ஒருவர் மனதில் நினைக்கிறார் என்றால், அது ஆச்சரியம்தானே? ஒருவர் வதைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றால் அவரது குடும்பமும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு வதைமுகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படும் என்பதே உண்மை. ஒருவர் வதைமுகாமில் இருந்து உயிர் பிழைத்து வெளியே சென்றாலும் அவரை வரவேற்க வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். தனது வாழ்க்கையை மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கவேண்டும். இப்படியான எதார்த்தம் இருந்தாலும், விக்டருடன் பிழைத்திருந்தவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் சேரவேண்டும் என எண்ணத்தை கனவு போல கொண்டிருந்தனர் என்று கூறுகிறார்.
இதை சொல்லும் உளவியலாளர் விக்டர் கூட வதைமுகாமில் மனைவி, பெற்றோர் என அனைவரையும் இழந்தவர்தான். வதைமுகாமில் தனது அனுபவங்களை எழுதி மறைத்து வைத்து உயிர் பிழைத்தபிறகு வெளியே வந்து அதை நூலாக்கியிருக்கிறார். அதைத்தான் நாம் இப்போது இந்த நூலாக படித்துக்கொண்டிருக்கிறோம். செய்யவேண்டிய திட்டம் அல்லது லட்சியம் என இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லாமல் வதைமுகாமில் இருப்பவர்கள் உயிரோடு இருக்கமுடியாது என்று விக்டர் குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக தனது சகாக்களின் அனுபவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
ஒடுக்கப்படும் வரை ஒருவரது மனம் எப்படியிருக்கிறது? ஒடுக்கப்பட்டவர் விடுதலையானபிறகு அத்தனை நாட்கள் அனுபவித்த வலி, வேதனை அவரை எப்படி கசப்பானவராக, அழிவு சக்தி கொண்டவராக ஒடுக்குபவராக மாற்றியிருக்கிறது என்பதை ஒரு இடத்தில் சுட்டிக்காட்டுகிறார். நண்பர் ஒருவர் ஓட்ஸ் விளையும் வயலை மிதித்தபடி நடந்து செல்ல முயல்கிறார். ஆனால் விக்டர் தடுக்கிறார். அப்போது அவர் ஆவேசத்தில் பேசுவதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். விக்டர் உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எப்படி கடந்துவந்து மனநிலையை நேர்மறையாக மாற்றிக்கொண்டு வாழ முற்பட்டார் என்பது இன்றைய காலத்திற்கும் பொருந்துகிற அம்சமாக உள்ளது.
வாழ்க்கையின் கடினமான காலங்களை எப்படி கடப்பது என தடுமாறுபவர்களுக்கு மனநிலையை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று வழிகாட்டுகிற நூலாக உள்ளது.
கோமாளிமேடை டீம்
Man's Search for Meaning is a 1946 book by Viktor Frankl chronicling his experiences as a prisoner in Nazi concentration camps during World War II, and describing his psychotherapeutic method, which involved identifying a purpose to each person's life through one of three ways: the completion ... Wikipedia
https://www.litcharts.com/lit/man-s-search-for-meaning/summary
கருத்துகள்
கருத்துரையிடுக