ராயலசீமா காரப்பொடியை லெக்பீஸில் தடவி சாப்பிட்டால்... அல்லரே அல்லரி - வேணு, நரேஷ், பார்வதி மெல்டன், மல்லிகா கபூர்

 









அல்லரே அல்லரி 


வேணு தொட்டம்பள்ளி, அல்லரி நரேஷ், மல்லிகா கபூர், பார்வதி ஷெல்டன்



வேணு சிறுவயதில் இருக்கும்போது அவரது அத்தை. தனது கணவரைக் கொன்ற இருவரைக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆட்களில் ஒருவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். அவரை தனது தம்பி மகனை வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது அவரது திட்டம். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. 



இப்படி கேட்டாலே நிறைவேறாது என்பதுதான் விஷயம். அதேதான். வேணு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அங்கு வரும் இளம்பெண் வயிற்றில் கருவோடு இருக்கிறாள். தற்கொலைக்கு முயன்றவளை அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணம் யார் என தெரிந்துகொண்டு அவனைக் கூட்டிவந்து கல்யாணம் செய்து வைக்கிறார். இவரது தலையீட்டால் இன்னொரு பெண்ணின் திருமணம் நின்றுபோகிறது. அந்த பெண் தன் கல்யாணம் நின்றதால் செலவு செய்த ஏழு லட்ச ரூபாயைக் கேட்கிறார். நாயகன் மாதசம்பளம் வாங்கும் மருத்துவர் என்பதால், தான் கல்யாணம் செய்து வைத்த ஆட்களிடமே போய் காசு கேட்கிறார். ஆனால் அவர்களோ காசு தர முடியாது என்கிறார்கள். அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தாலும் டௌரி ஏழு லட்சம் கேட்கிறார்கள். அதை நாயகன் கொடுக்கவேண்டும் என்பதே கல்யாணப் பெண்ணின் வேண்டுகோள். மிரட்டல் என்று கூட சொல்லலாம். இறுதியாக அந்த பெண் தன்னை மணந்துகொண்டால் காசு வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால் நாயகன் தனக்கும் அத்தை பெண்ணுக்கும் ஏற்கெனவே கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்று கூறுகிறான். இதில், வீரபாபு என்ற மருத்துவரின் அபார்ட்மென்ட் வாட்ச்மேன் உதவ முன்வருகிறான். அவன்தான் நாயகன் போல சென்று அத்தையை சந்திக்கிறான். அவளது பெண்ணை காதலிக்கிறான். இந்த உண்மை ஊருக்கே தெரிய வந்தால் என்ன ஆகும் என்பதே மீதிக்கதை. 


பார்வதி மெல்டன் காதலைக் காட்ட முயல்கிறார். நடிப்பு தெரியவில்லை. ஆனால்,முகம் பிளாஸ்டிக் போல இருப்பதால் எதுவும் வேலைக்காவதில்லை. உடல் மட்டுமே தெரிகிறது. அவரும், படத்தின் பின் பாதியில் வரும் மல்லிகா கபூரும் கவர்ச்சிக்கான தேவையை நிறைவேற்றுகிறார்கள். அதிலும் மல்லிகா கபூருக்கு தொப்புளைக் காட்ட வசதியாக டிரஸ் போட்டு நிற்கவைத்தே அனுப்புகிறார்கள். பரிதாபம். மற்றபடி, நாயகன் வேணு நல்லவன். வீரபாபு பாத்திரத்தில் நடித்துள்ள நரேஷ், சினிமா வெறியர். இந்த இருவர்தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். ரகுபாபுவின் குளியல் காமெடி சகிக்கவில்லை. ராயலசீமாவைக் காரப்பொடி வைத்தே அடையாளம் காட்டுவது எதற்கு? 


பழிக்குப்பழி வஞ்சத்தை காட்சியாக காட்டுவதை விட இரைச்சலாக வசனமாக காட்டியிருக்கிறார்கள். படத்தில் எதுவும் புதிது என்று சொல்ல முடியாது. அனைத்தும் நினைத்த வரிசையில் அப்படியே நடைபெறுகிறது. அவருக்குப் பதில் இவர் என அடையாள மாறுதல் நடக்கிறது. அதில் நடக்கும் காமெடிகள், களேபரங்களே கதை. வேறு எந்த விஷயங்களும் சுவாரசியமாக இல்லை. நாயகியை மணக்கவிருக்கும் மணமகன் நேர்மையில்லாதவன். அவன் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து, இன்பம் அனுபவித்து ஏமாற்றியிருக்கிறான். அந்த உண்மை தெரிந்துகூட நாயகி தன்னை காப்பாற்றியவனுக்கு நன்றி கூறவில்லை. அவளது தந்தையும் அப்படியே இருக்கிறார். நாயகன் செய்த உதவிக்காக அவனை காசு கேட்டு தொந்தரவு செய்கிறாள் நாயகி. அதை நாயகியின் அப்பா, அன்பு, காதல் என்று விளக்குகிறார். ஆனால் அதை சாதாரணமாக பார்த்தால் சித்திரவதை, ஸ்டாக்கிங் என்றுதான் சொல்லவேண்டும். மருத்துவரான நாயகன் அறுவை சிகிச்சை செய்யும்போது கூட அவனை காசு கேட்டு மிரட்டுகிறாள் நாயகி. கேட்டால், அதெல்லாம் காதல் என்று சொல்லி காதில் பூ சுற்றுகிறார்கள். நாயகியின் பாத்திரம் சாடிஸ்ட் என்றுதான் கூற வேண்டும். 

அமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்த மல்லிகா கபூர் என்ற பாத்திரம் இன்னுமொரு அரைவேக்காடு. அம்மா சொன்ன காரணத்திற்காக மாமாவை கல்யாணம் செய்துகொள்ள திட்டமிடுகிறாள். இதில் அவளது சம்மதத்தை யாரும் கேட்கவில்லை. அவளுக்கு வேறு வாய்ப்புமில்லை. ஒருவனை கொலை செய்துவிட்டு வந்த ரத்தக்களறியாக வந்து நிற்கும் வீரபாபுவை காதலோடு பார்க்கிறாள். அங்கே ஒரு டூயட் சாங். என்ன நடக்கிறது உலகத்தில்? இங்கு காதல், கல்யாணம் என்பதெல்லாம் அவரவர்க்கான பாதுகாப்பு, சுயநலம் என்று கூறிவிடலாம் அல்லவா?


சித்திரவதை


கோமாளிமேடை டீம்

Produced byS. K. Basheed

கருத்துகள்