உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!
மில்லினியம் அல்செமிஸ்ட்
மாங்கா காமிக்ஸ்
100--
பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம்.
அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சாப்பிட்டு வலிமை பெற மாத்திரைகளை உருவாக்குவதுதான். அனைத்து கலைகளையும் கற்றுவிட்டு தனது வாள் வீச்சுக்கலை மாஸ்டரின் பழிவாங்குதலுக்காக அந்த கிராமத்தில் இருந்து வெளியேற நினைக்கிறான். அதற்கான முயற்சிகளை செய்கிறான்.
இந்தக்கதையில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல டெலிபோர்டேஷன் போர்டல் என்பதை பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஸ்பிரிட் ஸ்டோன் பயன்படுகிறது. அவனது ஆன்ம ஆற்றலை முழுதாக பயன்படுத்தித்தான் பேய் கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். அவனை யே குடும்ப பணியாளர் காப்பாற்றுகிறார். அதற்கு நன்றியாக அந்த குடும்பத்தலைவரின் உடலில் இருந்த புழு ஒன்றை நீக்கி, உயிரைக் காப்பாற்றி நடமாட வைக்கிறான். கூடவே, அக்குடும்பத் தலைவரின் உடலில் புழுவை செலுத்தி படுத்த படுக்கையாக்கிய அயர்ன் செக்ட் இனக்குழுவின் ஒரு தலைவரையும் நாயகன் கொல்கிறான். ஒரே அடிதான். செத்துப்போகிறார். அவரின் உதவியாளனுக்கு விஷமாத்திரை கொடுத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறான்.
பிறகு அயர்ன் செக்டிற்கு மாணவனாக சென்று மூலிகைகளை பயன்படுத்தி ஆன்ம ஆற்றலை பயன்படுத்த முயல்கிறான். அப்போதுதான் அங்கே அவனுக்கு மூலிகைத் தோட்டத்தை பராமரிக்கும் தலைவரது மகள் பழக்கமாகிறாள். உருவமாற்ற உத்தியைக் கொண்டு அயர்ன் செக்டில் உள்ள முக்கியமான தற்காப்புக்கலைகளை, உத்திகளை நாயகன் கற்கிறான். தலைவரது மகள் அவனது சக்தி பற்றி கண்காணிப்பதால், அவளுக்கும் சிலவற்றைக் கொடுக்கிறான். அந்த இனக்குழு திடீரென எதிரிகளால் தாக்கப்படும்போது, நாயகனுக்கு தலைவரின் மகள் செலிஸ்டிகல் பீயிங் எனும் அரியவகை உடலை, சக்தியைக் கொண்டவள் என தெரியவருகிறது. அவளை அழைத்துக்கொண்டு யே குடும்பத்திற்கு செல்கிறான்.
காசுக்கு தகவல்களை விற்கும் பே இன் எனும் இனக்குழுவிற்கு சென்று சில தகவல்களைப் பற்றி கேட்கிறான். அவன் கேட்கும் கேள்வியால் டரியலாகும் அவர்கள், நாயகனை மெல்ல பின்தொடர தொடங்குகிறார்கள். அவர்களுக்கு தங்களை வலிமையாக்கிக்கொள்ள ஒரு திட்டம் இருக்கிறது. அதற்காக நாயகனை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். அதை நாயகன் மனதில் உணர்வதால் தகவலுக்கு தகவல் என்று சொல்லி பணம் கொடுத்து தகவல்களை வாங்குவதில் இருந்து தப்பிக்கிறான்.
ஒரு ரசவாதி அதாவது மருந்துகளை தயாரிப்பவர் பேராசை கொண்டவராக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் நாயகன் தனது உழைப்பிற்கான விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறான். பேராசை எண்ணம் வந்தாலும் கூட அவனது ஆசிரியர்கள் சொன்ன கருத்தை நினைத்துப் பார்த்து நேர்மையாக நடந்துகொள்கிறான். சில இடத்தில் சக்தியை பயன்படுத்தி பொருட்களை அபகரிக்க வாய்ப்பிருந்தும் அதை செய்வதில்லை.
மனிதர்களின் அனுபவங்கள்தானே அவர்களை செழுமையாக்குகிறது. அதேதான். துரோகம் செய்வார்கள் என நினைப்பவர்களுக்கு விஷத்தைக் கொடுத்து விஷ முறிவு மாத்திரையை பிறகு தருகிறேன் என்று சொல்வது அப்படித்தான். இந்த உத்தியை தனதுடிராகன் எதிரியிடமிருந்து கற்கிறான்.
சிலர் எல்லை மீறும்போது கூட அவர்களைக் கொல்லாமல் பிடித்து கட்டி வைத்து, விடுவிக்க குறிப்பிட்ட அளவுக்கு ஸ்பிரிட் ஸ்டோன்களைக் கேட்கிறான். ரிஃப்ட் எனும் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டி ஒன்றில் பங்கேற்று செய்யும் சாகசங்கள் ரசிக்கும்படியாக உள்ளன. இங்குதான். தீயசக்தி கொண்ட குட்டிப்பேய் ஒன்றுடன் மோதி அதை வீழ்த்துவான். ஏறத்தாழ அந்த தீயசக்தியை விட மோசமான பேராசை கொண்ட பெண் ஒருத்தியும் அந்த சண்டையில் இறந்துபோவாள். பின்னாளில் அவளது குடும்பத்தினரோடு, கூட ஒரு சண்டை இருக்கிறது.
கதை நெடுக பேராசை, அதன் பின்விளைவுகள், பாதிக்கப்படும் மனிதர்கள் என்பதை ஏதோ ஒருவகையில் விவரிக்கிறார்கள். பாவோ இன் செக்ட் குழுவுக்கு வலிமையான குழுவாக மாறவேண்டும் என்ற ஆசை. அதற்காக விஷக்காட்டில் வாழும் நீலக்கண் மனிதர்களை வேட்டையாட தயங்குவதில்லை. அவர்களுக்கு முட்டுக்கட்டையாக நாயகனே மாறி தடுக்கிறான். அந்த காட்டு மனிதர்களைக் காக்கிறான். இதேபோல இன்னொரு இடத்தில் இளம்பெண்ணை தனது வப்பாட்டியாக வைத்துக்கொள்ள வயதான தற்காப்புக்கலை வீரர் முயல்கிறார். நாயகன் அதற்காகவே போட்டியில் பங்கேற்று அந்த வீரரை தோற்கடித்து விரட்டுகிறான். இத்தனைக்கு அவன் வந்த வேலை என்பது ஒரு அடையாள சின்னத்தை இளம்பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு செல்வதற்காகவே. ஆனால், அங்கேயே தங்கி அந்த குடும்பத்தை வலுவானவர்களாக மாற்றிவிட்டு, தனது சக்தியால் குடும்ப பொக்கிஷங்களை திறந்து கொடுத்து உதவுகிறான். இந்த இடத்தில் பேராசை தலைதூக்கினாலும் கூட அதை விலக்கிவிட்டு தாராளமாக நடந்துகொள்கிறான்.
மவுன்ட் குவா மாணவன் ஒருவன் பேராசையால் தனது குருக்கள் இருவரை கொல்கிறான். சக மாணவியை கொல்ல முயலும்போது நாயகன் தலையிட்டு அவனை பரலோகம் அனுப்புகிறான். இறந்தவனிடம் இருந்து பெறும் மருந்து ஒன்றைக் கூட அபகரிக்காமல், மாணவிக்கு ஒன்றை பகிர்ந்து கொடுத்துவிடுகிறான். நடந்த சம்பவத்திற்கு இனக்குழு தலைவர் முன்னிலையில் சாட்சியும் சொல்கிறான். பிறகு, அங்கு ஐஸ் மூலம் உருவான தொன்மை மருந்தை பெற பேராசையுடன் போட்டி நடைபெறுகிறது. அதைக்கூட தவிர்க்க நினைக்கிறான். ஆனால் காரியம் கைமீறிவிடுகிறது. எதிரியைக் கொல்வதோடு அந்த மருந்து அவனுக்கு கிடைக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்கிறான். அதோடு மவுன்குவா செக்டின் எதிரியான அயர்ன் ஸ்பியரை வீழ்த்தி அவர்களது இனக்குழுவை ஐநூறு ஆண்டுகளுக்கு மூட வைக்கிறான். இந்த சம்பவம் காட்சியாக நன்றாக வரையப்பட்டுள்ளது. நாயகன், போட்டியில் கூட யாரையும் கொல்வதில்லை. எதிரிகளை தோற்கடிக்கிறான். அவ்வளவுதான்.
அவன் நல்லவன் என்று தன்னைக் காட்டிக்கொள்வதில்லை. அவன் இயல்பே வாழு வாழவிடு என்பதாக இருக்கிறது. எந்த வம்பிற்கும் செல்வதில்லை. பிறர் அவனை பயன்படுத்திக்கொள்ள முயலும்போதுதான் சிக்கல் உருவாகிறது.
நீலக்கண்ணும், ரோஸ்நிற தலைமுடியும் கொண்ட விஷக்காடுகளில் வாழும் இனக்குழுவை பிடிக்க பாவோ இன் ஆட்கள் திட்டமிடுகிறார்கள். அவர்களுக்காக அங்கு செல்லும் நாயகன், பாவோ இன்னின் பேராசைத் திட்டத்தை அறிந்து அவர்கள் கைது செய்து வைத்துள்ள பெண்ணை காப்பாற்றுகிறான். விஷக்காட்டு இனக்குழுத் தலைவரின் மகனை மீட்க உதவுகிறான். இந்த ஒரே நடவடிக்கை மூலம் அவன் பாவோ இன் இனக்குழுவின் ஜென்ம எதிரியாக மாறுகிறான். செலிஸ்டிகல் பீயிங் என்ற மூலிகைத்தோட்ட தலைவரின் மகளை அணைப்பதோடு வலைத்தளத்தில் கதை பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மேலும் அப்டேட்டாகி தொடரும். சுவாரசியமான கதை. ஆனால் போகிறபோக்கில் வாள்வீரரான மாஸ்டரின் பழிவாங்குதலை நாயகன் மறந்தே போய்விடுகிறார். அதை ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக