வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

 










தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள்


2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். 


இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.  


 தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறி வாதாடினார். 


அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக பணம் வழங்கும் நடைமுறையை மாற்றித்தான் தேர்தல் பத்திரங்கள் வந்தன. தேர்தல் பத்திரங்கள் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டது. நிறுவனங்கள், தனிநபர்களின் அடையாளங்களை வெளிக்கூறாமல் நிதியைப் பெறுவதன் மூலம் பிரதிபலன் பெறுவது குறைகிறது என அரசு தரப்பில் சாலிட்டரி ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் பெறப்பட்டது என அரசியல்கட்சிகள் வெளிப்படையாக அறிவித்து வருகின்றன என்று அவர் கூறினார். 


இதற்கு எதிர்தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். தேர்தல் பத்திரங்கள் கறுப்புபணம் ஒழிப்பதை நோக்கமாக கொண்டது அல்ல. தேர்தல் பத்திரங்களை ஒருவர் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறார். அரசியல் கட்சிகள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்கின்றன. இதுபற்றிய தகவல்களை அளிக்காமல் இருப்பது, தகவலறியும் உரிமைச்சட்டம் 19 1,19 2 ஆகியவற்றை மீறுகிற செயலாகவே உள்ளன என கூறினர். 


நீதிமன்றம் எதிர்தரப்பு புகார்தாரர்களின் கருத்தை ஆதரித்தது. நிதிச்சட்டம் 2017 படி, அரசியல் கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவர் நிதியளித்தால் அதைப்பற்றிய விவரங்களை வெளிப்படையாக கூற வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்தபிறகு வெளிப்படைத்தன்மை இல்லாமல் போய்விட்டது. இதற்கு பதிலளித்த சாலிட்டரி ஜெனரல் துஷார் மேத்தா, நன்கொடை அளிப்பவர்களின் அந்தரங்கம் முக்கியமானது. அவர்களின் அடையாளங்களை காப்பாற்றுவது அவசியம். அது அவர்களது உரிமை என்று வாதிட்டார். 


மூத்த வழக்குரைஞர் கபில் சிபில், தனிநபர்களின் உரிமை என்ற பெயரில் அவர்களது நன்கொடை விவரங்களை வெளியிடவில்லை என்றால் நேர்மையான தேர்தல் என்பதே நடைபெறாது என கருத்து கூறி பேசினார். தகவல்களை வெளிப்படையாக கூறாதபோது தேர்தல் பத்திரங்கள் சட்டத்தையே முழுக்க தடை செய்வதுதான் சரி என நீதிமன்றம் கூறியது. அப்போது எதிர்தரப்பு மனுதாரர்கள் சார்பாக வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷன், சதான் ஃபராசத் ஆகியோர் ஒரு பெருநிறுவனம் அளிக்கும் நன்கொடை விவரங்களை அதன் பங்குதாரர்கள் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. நிறுவனத்தின் வளங்களை எப்படி செலவழிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவது அவசியம் என்று கூறினர். இதை பின்தொடர்ந்து பேசிய கபில் சிபல், நிதிச்சட்டம் 2017படி,  ஒரு பெருநிறுவனம் அளிக்கும் நன்கொடைக்கான வரம்புகளை அகற்றியுள்ளது. தொடக்கத்தில் 2013ஆம் ஆண்டில் இருந்த  சட்டப்படி ஒரு நிறுவனம் மூன்று ஆண்டுகளி்ல 7.5 சதவீத தொகையை மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நிதியாக அளிக்க முடியும் என்ற வரம்பு இருந்தது என சுட்டிக்காட்டினார். 


இதை எதிர்த்து வாதிட்ட சாலிட்டர் ஜெனரல் மேத்தா, வரம்புகள் இல்லாமல் இருப்பது நல்லதுதான். அதை மாற்றினால் நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் தொடங்கி அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார். நீதிமன்றம், பெருநிறுவனங்கள், தனிநபர்கள் அளிக்கும் நிதிக்கு வரம்பு தேவை என்பதை வலியுறுத்தியது. கூடவே, பெருநிறுவனங்கள் அளிக்கும் நிதிக்கு குறிப்பிட்ட வரம்பு அவசியம். அதற்காக நிறுவனங்கள் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியது. மேலும் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் நிதி அளித்தாலும் அது அரசிடமிருந்து குறிப்பிட்ட பிரதியுபகாரங்களை பெறும் பொருட்டே என்பதையும் அடிக்கோடிட்டு கூறியது. 



தேர்தல் பத்திர நிதியை யார் அளிக்கிறார்கள் என்பதை மக்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், தலைவர், ஆளுங்கட்சி தலைவர் அறிய முடியும். அதாவது, அறிய வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் ஆளுங்கட்சி தவிர பிற கட்சிகளுக்கு ஒரு பெருநிறுவனம், தனிநபர் நிதியளித்தால் அவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வாய்ப்புள்ளது என புதிய தலைமுறை டிவி சேனல் நேர்காணலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். 


தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதிபெறும் கட்சி ஆளுங்கட்சிதான். இதை யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் நிதி அளிப்பவர்கள் பற்றி எந்த வெளிப்படைத்தன்மையுமில்லை. அதுவே பிரச்னையான அம்சம்.  தேர்தல் நன்கொடைக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் முறையில் நன்கொடை பெறுகின்றன. 

அரசியல் கட்சிகளுக்கு நிறைய செலவுகள் உள்ளன. சட்டப்பூர்வமான முறையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு கட்சி நிதி பெறுகிறது. அதை நீதிமன்றம் மிகச்சரியாக மக்களவை தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு, தவறு என்று கூறி தடை விதிப்பது பொருந்தாததாக தோன்றுகிறது. இதில் அதிகம் பயன்பெற்றது ஆளுங்கட்சிதான். ஐடி விங்குகள் ஒருவருக்கொருவர் பெற்ற நிதி சதவீதம், நிதி பெற்ற கட்சிகள் என அட்டவணைப்படுத்தி வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒன்றிய அரசு இயற்றும் பொதுவான சட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஒருவரைக் குறை சொல்லி ஒருவரை மேன்மைபடுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. சட்டங்களை குறைபாடுகளாக உள்ளது எனக்கூறி விலக்குவது தவறில்லை. ஆனால், அதை பயன்படுத்தி அனைவரையும் அவதூறு செய்வது தவறானது. தேர்தல் பத்திரங்களின் ஆபத்து பற்றி, அவை சட்டமானபோதே பல அரசியல் பிரமுகர்கள், நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். அதை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. 


நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதபோது தேர்தலும், தேர்தலுக்கான போட்டியும் நேர்மையாக இருக்காது. இப்படியான களத்தில் சமமான போட்டியும் நிலவாது. திடீரென உறங்கத்திலிருந்து பதறி எழுந்தது போல நீதிமன்றமும், பிற ஜனநாயக அமைப்புகளும் செயல்படுவது சந்தேகத்தையே அளிக்கிறது. 



இந்தியன் எக்ஸ்பிரஸ் 


மூலக்கட்டுரையைத் தழுவியது.

நன்றி 

ஆனியன் ரோஸ்ட்

புதிய தலைமுறை

cartoon stock

கருத்துகள்