அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்
காலநிலை மாற்றம்
குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.
1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.
வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச் - எவிடென்ஸ் அண்ட் சேஞ்ச் என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு வெளியான ஆய்வில், ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் மட்டும் வெப்பஅலை தாக்குதல் காரணமாக 2,500 மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு இரண்டரை நாட்களுக்கு நீண்டது என இந்திய வானிலை ஆய்வுமையத்தின் 2023ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. 2040ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் வெப்ப அலை பாதிப்பு 40 மடங்கு கூடுதலாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் தகவல் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆப்பிரிக்கா எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம். 2020 ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரையில், ஆப்பிரிக்காவில் பருவக் காலத்தில் மழை சரியாக பெய்யவில்லை. இதன் விளைவாக இங்கு நாற்பது ஆண்டுகளில் இல்லாத பஞ்சம் மெல்ல உருவானது. பஞ்சத்தின் விளைவாக ஏராளமான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். வேர்ல்ட் வெதர் அட்ரிபூஷன் அமைப்பு, காலநிலை மாற்றம் பஞ்சத்தை நூறு மடங்கு தீவிரமாக மாற்றும் என்று 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும்போது காட்டில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் கூடும். வெப்பம் காரணமாக, மண்ணில் உள்ள ஈரப்பதம் எளிதில் வெளியேற்றப்படுவதால் காட்டுத்தீ சம்பவங்கள் எதிர்பார்த்த காலத்தை விட நீளும். இதற்கு எடுத்துக்காட்டாக கனடாவைக் கூறலாம். இங்கு, கிழக்குப்பகுதியில் 45 மில்லியன் ஏக்கர்கள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத்தீ அபாயமும் இருமடங்காகியுள்ளது.
வெப்பமான காற்று, ஈரப்பதத்தை அதிகம் ஈர்க்கிறது. அதேசமயம், ஏற்கெனவே வறண்டுள்ள பகுதியில் உள்ள மிச்சம் மீது ஈரப்பதத்தையும் கூட உறிஞ்சி எடுத்துவிடுகிறது. இதனால், அப்பகுதியில் பஞ்சம் உருவாகிறது. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் கிழக்கு பசிஃபிக் பகுதியில் 30 சதவீதம் அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என அறிவியல் ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். புயல் உருவாவதோடு, அவை அடிக்கடி உருவாகி நகரங்களை தாக்கும் வாய்ப்பும் அதிகமாகிறது. கடலின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்து வருவதே புயலுக்கு முக்கியமான காரணம்.
அண்மைக்காலமாக வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களை கடலே 90 சதவீத அளவுக்கு ஈர்த்து வைத்திருக்கிறது. 1850ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரை கடலின் வெப்பநிலை 0.9 டிகிரி செல்சியஸ் என உயர்ந்து வந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை 0.6 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை உயர்வு இருந்தது. இப்படி கடலில் உருவாகும் வெப்பமான காற்று காரணமாக புயல் உருவாகிறது. புயல் நிலத்தை அடையும்போது, அதிவேக காற்று, அதிக மழைப்பொழிவு, வெள்ளம் ஏற்படுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக