மாணவிகள் மதிப்பெண் பெறுவது தொடர்பான மூடநம்பிக்கைகளை தகர்த்த ஆய்வாளர்!

 











மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவது முயற்சியாலும் உழைப்பாலும்தான்!







மாணவிகள் பத்தாவது, பனிரெண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது நாளிதழ்களில் ஆண்டுதோறும் பார்க்கும் செய்தி. இதை சமூகம் எப்படி பார்க்கிறது? காதலை ஆயுதமாக பயன்படுத்தி மாணவர்களை வீழ்த்தி மாணவிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று திரைப்பட பாடல்கள் வெளிவந்துள்ளன. 

முயற்சியும், உழைப்பும் கைகோக்க வெற்றி என்பது எவருக்கும் கிடைப்பதுதான். இதில் ஆண், பெண் என வேறுபாடு ஏதும் கிடையாது. ஆனால், ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகத்தில் பெண்களின் வெற்றி இழிவு, அவதூறுகளுக்கு உள்ளாகிறது. பள்ளியில் மட்டுமல்ல பெண்கள் சாதிக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் திறமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல் என பலதையும் இழிவுபடுத்தி வெளியேற்ற முயல்வதும் சமூக வழக்கமாகிவிட்டது. உண்மையில் பெண்கள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா? அவர்களின் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைத்ததுதானா என்பதை அமெரிக்க உளவியலாளர் எலினார் மெக்கோபை ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியே ஆண், பெண் பாகுபாடு சார்ந்த மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்தெறிந்தது. இப்படிக்கூட கூறமுடியாது. 

பெண்ணாலும் முயற்சி செய்து உழைத்தால் வெல்ல முடியும் என்பதற்கான அறிவியல் ஆதாரமாக மாறியது. எலினார் தனது மாணவர் கரோலோடு சேர்ந்து 1600 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தார். இதில் கிடைத்த முடிவுகளை வைத்து தி சைக்காலஜி ஆஃப் செக்ஸ் டிஃபரென்ஸெஸ் என்ற ஆய்வறிக்கையை 1974ஆம் ஆண்டு வெளியிட்டார். இதில் ஆண், பெண் பாலினம் சார்ந்த பல்வேறு மூடநம்பிக்கைகளை ஆதாரத்தோடு தவறு என நிரூபித்திருந்தார். மாணவர்கள் பற்றி சாதகமாக சில கருத்துகள் இருந்தாலும், பள்ளிப் படிப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவது முக்கிய அம்சமாக அனைவராலும் பேசப்பட்டது. ஆர்வம், முயற்சி, உழைப்பு ஆகிய அம்சங்களில் மாணவர்களை விட மாணவிகளே முந்தி நின்றனர். ஆசிரியர் வகுப்பறைகளில் கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக பதில் சொல்வது பெரும்பாலும் மாணவிகளாகவே இருக்கும். இதற்கு காரணம், பதிலை யோசித்து அதை உடனே சொல்லிவிடும் எண்ணம்தான். 

மூளையில் உள்ள சிறப்பு அமைப்புகள் ஏதும் காரணம் கிடையாது. தேர்வு நாட்கள் வரை ஏதும் செய்யாமல் தேர்வு முடிவு வந்தபிறகு என் விதியை எழுதும்போடு சாமி தூங்கிருச்சோ என மாணவர்கள் வருத்தப்பட்டு பயனேதும் கிடையாது. விடாமுயற்சி, திட்டமிட்ட உழைப்பு ஆகியவை அனைவருக்கும் பொதுதான். ஆனால் இதை மாணவிகளே அதிகம் பின்பற்றுகிறார்கள். அன்றைய சமூக சூழ்நிலையில், ஆண்களுக்கென்றால் இந்த வேலை, பெண்ணுக்கென்றால் இதுதான் சரி என்று கூறி வேலைகளை ஒதுக்கிய மக்களின் மனப்போக்கையும் கேள்வி கேட்டு அதை தவறு என்று போராடியவர் உளவியலாளர் எலினார். 

எலினார் இ மெக்கோபை eleanor e maccoby அமெரிக்காவின் வாஷிங்டனில் டகோமாவி்ல பிறந்தவர். வாஷிங்டன் பல்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1940ஆம் ஆண்டு, வேளாண்மைத்துறையில் பணியாற்றினார். குழந்தை வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சியை மேற்பார்வை செய்பவராக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் இயங்கினார். ஆனாலும் பாலின பாகுபாட்டால் நிறைய பின்னடைவுகளை சந்தித்தார். எனவே, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு நகர்ந்தார். அங்கு, உளவியல் துறைக்கு முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார். அமெரிக்க உளவியல் சங்கம், அமெரிக்க உளவியல் அமைப்பு என இரண்டிலும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். அமெரிக்க உளவியல் சங்கத்தில் எலினாரின் பெயரில் விருதையும் உளவியல் ஆய்வாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

 பாலின பாகுபாடு, குழந்தைகளின் சமூக வாழ்க்கை பற்றிய பல்வேறு முட்டாள்தனங்களையும் தவறான கருத்துகளையும் எலினார் தனது ஆராய்ச்சி மூலம் தகர்த்துள்ளார்.

 முக்கிய படைப்புகள் 1966 தி டெவலப்மென்ட் ஆஃப் செக்ஸ் டிஃபரன்சஸ் 1974 தி சைக்காலஜி ஆஃப் செக்ஸ் டிஃப்ரன்சஸ் 1996 அடோல்சன்ஸ் ஆஃப்டர் டைவர்ஸ் 

மூலநூல் - தி சைக்காலஜி புக் - டிகே புக்ஸ்

கருத்துகள்