துரோகம் செய்த இனக்குழு தலைவரை மறுபிறவி எடுத்து பழிவாங்க கிளம்பும் வீரனின் பயணம்!
மூன் ஸ்வார்ட் எம்பரர்
மாங்கா காமிக்ஸ்
டிமோன் செக்டில் உள்ள ஆட்களுக்கு காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட வீரன், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இறந்துபோகிறான். இறக்கும் கடைசி நேரத்தில் புத்த துறவி மூலம் மறுபிறவி வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் வாய்ப்பை அவன் எப்படி பயன்படுத்தி டிமோன் செக்ட் இனக்குழு தலைவரை அழிக்கிறான் என்பதே கதை. இந்த கதை இன்னும் நிறைவடையவில்லை.
மறுபிறவியில் கூட டிமோன் செக்ட் ஆட்களிடம்தான் நாயகன் அடிமைச் சிறுவனாக இருக்கிறான். ஏற்கெனவே டிமோன் செக்ட் ஆட்கள், அடிமை சிறுவர்களை எப்படி சித்திரவதை செய்து பிறரை கொலை செய்ய பயிற்சி வழங்குவார்கள் என்பது தெரியும். எனவே, அவர்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு, சில பெண்களைக் காப்பாற்றி அவர்களின் மூலம் தங்குவதற்கான இனக்குழு ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இனக்குழுவில் நிர்வாகியின் உதவியாளராக பணிக்குச் சேர்கிறான். டிமோன் செக்டில் பயன்படுத்தும் கலைகளை நேரடியாக கற்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அடிப்படையான ஆன்ம ஆற்றல் சக்தியை மட்டும் உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்கு மின்னல் சக்தியை அடிப்படையாக கொண்ட வூ ஜின் என்ற வீரரின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஏனெனில் முற்பிறவியில் அவர்தான் டிமோன் செக்ட் வீரர்களை எளிதாக வீழ்த்தி பெருமையும் புகழும் பெற்றவர். எனவே அவரின் மாணவனாவதே நாயகனின் லட்சியம்.
அதற்காகவே அவன் நிர்வாகியின் உதவியாளராக இருக்கிறான். பணம் முக்கியம் என்பதால் அதையும் சேர்த்துவைக்கிறான். கூடவே நிலவு வாள் பயிற்சியையும் செய்து வருகிறான். அங்கு கிடைக்கும் உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொள்கிறான். பிறகு வூ ஜின் என்ற வீரரின் மாணவனாக சேர முயல்கிறான். கடந்தகால நினைவுகளின் அடிப்படையில், வூ ஜின்னின் மகனை டிமோன் செக்ட் ஆட்கள் கடத்தி கொன்றுவிடுகிறார்கள். காரணம், அவனின் உடல் அரிய சக்தியைக் கொண்டது. அதை தீயசக்திகள் பயன்படுத்திக்கொண்டால் பலம் கூடும். இந்த வகையில் வூ ஜின் மகனது கொலைக்கு பழிவாங்க முரிம் கூட்டணியில் சேர்ந்து டிமோன் செக்ட் ஆட்களை டரியல் செய்வார்.
நாயகன், வூ ஜின்னின் மகன் கடத்தப்படுவதைத் தடுத்து, அவரின் நன்றிக்கடனைப் பெற்று தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்கிறான். இந்த நேரத்தில் டிமோன் செக்ட் தலைவர், முக்கியமான இனக்குழுக்களுக்கு சில தவறான தற்காப்புக்கலை நூல்களை எழுதி அனுப்பி படிக்கச் செய்கிறார். அதைக் கற்பவர்கள் நோயில் வீழ்கிறார்கள். உடலின் ஆன்ம ஆற்றலே நோயுறுகிறது. நாயகன், டிமோன் செக்ட் தலைவரின் ஐந்து மாணவர்களில் ஒருவன் என்பதால், அதை எப்படி சரிசெய்வது என்று தெரியும். எனவே, அந்த வகையில் ஹாவோ செக்ட்டின் பெண் வாரிசு ஒருவரைக் குணப்படுத்துகிறான். ஆனால் அவர்களோ, நாயகனை டிமோன் செக்டைச் சேர்ந்தவனோ என சந்தேகப்படுகிறார்கள். கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நாயகன், தனது மாஸ்டரின் உதவி பெற்று சமாளிக்கிறான்.
நோய் குணமான ஹாவோ செக்ட்டின் பெண் வாரிசு, நாயகன் மீது இனம் புரியாத ஈர்ப்பு உருவாக அவனைச் சுற்றிவர தொடங்குகிறாள். நாயகனின் பலத்தை ஒருமுறை சோதித்துப் பார்த்து, சண்டையில் தோற்றுப்போகிறாள். அத்தோடு தான் பெரிய வீராங்கனை என்ற எண்ணம் தகர்ந்துபோகிறது. தன் உயிரைக் காப்பாற்றியவன் என்பதால், அவனை மெல்ல பின்தொடரத் தொடங்குகிறாள். டிமோன் செக்ட் இனக்குழு தலைவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை நாயகன் முன்னமே அடையாளம் கண்டதால், அந்த விஷயங்கள் நடைபெறாமல் தடுக்க முயல்கிறான். வணிக சங்கத்தின் தலைவரின் மகன் கூட ஆன்ம ஆற்றலை இழந்து நோயுற்று படுக்கையில் கிடக்கிறான். அவனைக் குணப்படுத்தி வணிகரிடம் உள்ள தற்காப்புக்கலை பற்றிய நூலை வாங்கிக்கொள்கிறான். அந்த நூல்தான், மாஸ்டரின் மகனுக்கான தற்காப்புக்கலைக்கு உதவுகிறது. அதை நாயகன் மாஸ்டர் கற்றுக்கொடுத்த கலைக்கான நன்றிக்கடன் என்று சொல்லியே கொடுக்கிறான். தனது மகனை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றி வரும் மாஸ்டருக்கு கண்கள் கலங்கிவிடுகிறது.
மாஸ்டர், நாயகனுக்கு விஷத்தை எதிர்கொள்ளும் திறன் வேண்டும் என்பதற்காக டேங்க் இனக்குழுவிற்கு அழைத்துச் சென்று அரிய மாத்திரை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இடைவெயில் மாத்திரையை சாப்பிட வேண்டும். நாயகனின் மாஸ்டர், டேங்க் இனக்குழுவைச் சேர்ந்த இளவரசியின் உயிரைக் காப்பாற்றியதால் அவர்கள் அதற்கான நன்றிக்கடனாக மாத்திரையை வழங்குகிறார்கள். அந்த சமயத்தில் இளவரசிக்கும், நாயகனுக்கும் ஒரு சண்டை ஏற்பாடாகி மாஸ்டரின் ஒப்புதலோடு நடக்கும். அதில் நாயகன் வென்றுவிடுவான். இளவரசிக்கு, நாயகனின் திறமையை சோதித்து பார்ப்பதே நோக்கம்.
நாயகன், வணிகரின் சங்கத்தில் முதலீடு செய்வான். அதன்மூலம் எதிர்காலத்தில் நிறைய பணம் கிடைக்கும் என்பதை ஏற்கெனவே அறிந்திருப்பான். பத்திரங்கள் வாங்கி அதன் வழியாக முதலீடு. அந்த வணிகர் பின்னாளில் மிகப்பெரிய சங்கத்தை நடத்துவார் என்பதும் நாயகனுக்கு தெரியும். மாஸ்டரிடம் விடைபெற்றுக்கொண்டு, உலக அனுபவத்தை பெறுவதற்காக கிளம்புகிறான். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு டேங்க் குடும்பத்தின் இளவரசியும், ஹாவோ செக்ட் இளம்பெண்ணும் வந்து சேர்கிறார்கள். வேறுவழியின்றி இருவரோடும் நாயகன் பயணிக்கிறான். இரு பெண்களாலும் நிறைய சண்டைகள் வருகின்றன. அழகான பெண்கள் என்றால் பிரச்னையும் இணைப்பிதழாக வரும்தானே?
டேங்க் இளவரசி வெளியுலக அனுபவத்திற்காக நாயகனுடன் பயணிக்கிறாள். அவளுக்கு விஷம் பற்றியும், பொறிகளை அமைப்பது பற்றியும் தெரியும். அவளை நன்றிக்கடனுக்கு உட்படுத்தினால் அதை பயன்படுத்தி, பொக்கிஷங்களை அடையலாம் என நாயகன் திட்டமிடுகிறான். இந்த முயற்சியில் பொறிகளை அமைக்கும் திறன் கொண்ட நபரைத் தேடி கண்டுபிடிக்கிறான். அவனுக்கு நாயகன் பற்றி ஏதும் தெரிவதில்லை. ஆனால் அவன் கூறும் விஷயங்களில் ஆர்வம் இருக்கிறது. உதவி செய்ய ஒப்புக்கொள்கிறான். நாயகன் கூடவே மவுன்ட் குவா இனக்குழுவைச் சேர்ந்த தற்பெருமை கொண்ட வாள்வீரன் ஒருவன் இருக்கிறான். நாயகன் அவனை அடித்து உதைத்து கடுமையாக உழைக்கும் வீரனாக்குகிறான். நான்கைந்து நாட்கள் தூங்காமல் கொள்ளைக்காரர்களோடு சண்டை போடுகிறான். அந்தளவு நாயகன் அவனை அடித்து உதைத்து வழிக்கு கொண்டு வருகிறான். நாயகனுக்கு புகழ் தேவை. பணம் தேவை. பணம் சம்பாதித்துவிட்டதால், அவன் புகழுக்கு கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைக்கிறான். இதை நரி முகம் கொண்ட முகமூடியை அணிந்து செய்கிறான். இதனால் நகரெங்கும் நரி முகமூடி ஹீரோ என பிரபலமாகிறான்.
நாயகனுக்கு முரிம் அலையன்ஸ் அமைப்பில் மூத்த மரியாதைக்குரிய வீரராக மாறுவதே லட்சியம். அப்போதுதான் நிம்மதியாக பிரச்னையின்றி வாழலாம் என நினைக்கிறான். அதற்கு பணம், செல்வாக்கு, முரிம் அமைப்பில் உள்ள மூத்த தலைவர்களின் அங்கீகாரம், ஆதரவு தேவைப்படுகிறது. அதைத் தேடி பெறுவதிலும் நாயகன் ஈடுபடுகிறான். அவன் லட்சியம் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை. ரீட்மாங்காபேட் வலைத்தளத்தில் கதை மேலும் பதிவேற்றப்படும்போது நீங்கள் அடையாளம் கண்டறியலாம்.
தனது வாழ்வின் லட்சியங்களை கணக்குபோட்டு நிறைவேற்றிக்கொள்பவனின் கதை. எங்கும் எதற்கும் சமரசமே இல்லாமல் கவனமாக அனைத்து விஷயங்களையும் நாயகன் செய்கிறான். கதையில் அவன் எதிர்பார்க்காத சம்பவங்களாக நடப்பவை சில விஷயங்கள்தான். ஒன்று டேங்க் இனக்குழு இளவரசி, நாயகனோடு தொடர்ந்து பயணம் செய்வது.ஜப்பான் கொள்ளையர்கள், நாயகனது பொருட்களை கொள்ளையடிப்பது, சூஜ் இனக்குழுவைச் சேர்ந்த இளம்பெண் நாயகனது அடையாளத்தைக் கண்டுபிடிப்பது. ஜப்பான் கொள்ளைப்படைத் தளபதியோடு நடைபெறும் வாள் சண்டை சிறப்பாக உள்ளது. நாயகனை விட பலமடங்கு வலிமையான எதிரி அவர். அவரை உள்ளுறுப்புகளை காயப்படுத்தி நிலைகுலைய வைத்து தோற்கடிக்கிறான் நாயகன். தன் வாழ்க்கையை விருப்பப்படி வாழ நினைக்கும் வீரன் ஒருவனின் கதை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக