அளவற்ற அதிகாரம் தரப்படும்போது ஏற்படும் தனிநபரின் நடத்தை மாறுதல்கள்!

 











பிலிப் ஸிம்பார்டோ

philip zimbardo


1933ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சிசிலிய அமெரிக்க குடும்பத்தில் பிறந்தார். பிரான்க்ஸில் உள்ள ஜேம்ஸ் மன்றோ பள்ளியில் படித்தார். இவரது நண்பராக உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் இருந்தார். நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் கல்லூரியில், பிஏ பட்டம் பெற படித்தார். யேல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். 1968ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் செல்லும்வரை ஏராளமான பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு, மக்களுக்கு உளவியலை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் டிவியில் டிஸ்கவரிங் சைக்காலஜி என்ற தொடரை தயாரித்தார். 2000ஆம் ஆண்டு, அமெரிக்க உளவியல் பவுண்டேஷன், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


முக்கிய படைப்புகள்


1972 தி ஸ்டான்ஃபோர்ட் பிரிசன் எக்ஸ்பரிமென்ட் 


2007 தி லூசிஃபர் எஃபக்ட்

2008 தி டைம் பாரடாக்ஸ் 

2010 சைக்காலஜி அண்ட் லைஃப் 


நல்ல மனிதர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அதிகாரம் வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் கீழுள்ளவர்கள் மீது, கீழ்படிந்து நடக்க வேண்டியவர்கள் மீது எப்படி பயன்படுத்துவார்கள் என்பதை உளவியலாளர் பிலிப் ஆய்வு செய்தார். அவரது நோக்கம் எல்லாம் சரிதான். ஆனால் செய்த சோதனை நிறைய பங்களிப்பாளர்களை உடல், மனம் ரீதியாக கடுமையாக பாதித்தது. எதற்காக சோதனையை செய்தோம் என அவரே வருந்துமாறு சூழ்நிலை உருவானது. சோதனை என்றாலே அதன் விளைவுகள், முடிவுகளே முக்கியம். அந்த வகையில் ஸ்டான்ஃபோர்ட் சிறை சோதனை முக்கியமானது. 


பிலிப், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சிறை ஒன்றை உருவாக்கி 24 நபர்களை தேர்ந்தெடுத்து அங்கு அழைத்து சென்றார். இவர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள். இவர்களின் மனநிலையை சோதித்தபிறகு பரிசோதனைக்கு அனுமதித்தார். சிறைக்கைதி, காவலர் யார் யார் என்பதை நாணயத்தை சுண்டிப்போட்டு தேர்ந்தெடுத்தனர். கைதிகளை அவர்களது வீட்டில் போய் கைது செய்து, உண்மையான காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதாவது, பல்கலைக்கழகத்தில் செட் போடப்பட்ட சிறையில் அடைத்து சோதனை தொடங்கியது. 


உண்மையான சிறையில் கைதிகள் எப்படி நடத்தப்படுவார்களோ அப்படித்தான் கைதிகளும் நடத்தப்பட்டனர். கைதிகளின் உடைகள் களையப்பட்டு, புதிய சீருடைகள் வழங்கப்பட்டன. காலில் விலங்குகள் பூட்டப்பட்டன. எண்களைக் கொண்டே கைதிகள் அழைக்கப்பட்டனர். காவலர்கள், கைதிகளின் கண்களை நேரடியாக பார்க்காமல் இருக்க குளிர் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. 

தனது ஆணைகளை கேட்காதவர்களை கடுமையாக தண்டித்தனர். மனித தன்மையற்ற முறையில் அவர்களை நடத்தினர். உணவு, தூங்குவதற்கு அனுமதிக்காமல் வெற்று கரங்களால் கழிவறையை தூய்மை செய்ய கட்டாயப்படுத்தினர். இத்தகைய செயல்களால் கைதிகளின் மீதான சோதனை ஆறு நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. இந்த நாட்களுக்குள் எல்லையற்ற அதிகாரம் கொண்ட காவலர்கள், சிறைக் கைதிகளை விளையாட்டுப் பொருள் போல நடத்த தொடங்கினர். ஒரு கைதிக்கு அழுகையை நிறுத்தமுடியாத அளவுக்கு மன அழுத்தம் கூடியது. பிற கைதிகளும் மனச்சோர்விற்கான அறிகுறிகளை வெளிக்காட்டினர்.இவர்களை வெளியே விடவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. பிலிப்பிற்கு அப்போதே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சோதனையின் முடிவுகள் செல்கின்றன என்று தெரிந்தது. 


இந்த சோதனையின் வழியாக சரி, தவறு என்ற சூழ்நிலை அழுத்தங்களுக்கு மனிதர்கள் உட்படுவார்கள். எப்படி நடந்துகொள்வார்கள் என்று பிலிப் கண்டறிந்தார். மோசமான சூழ்நிலை உள்ள மனிதர்கள் உள்ள இடத்திற்கு செல்லும் நல்லவர்களும் அதேபோலான இயல்பை அடைவார்கள் என்று பிலிப் அடையாளப்படுத்தினார். 


the psychology book - dk


 



கருத்துகள்