பிடிவாதமாக குழந்தையுடன் உள்ள நாயகனை காதலிக்கும் குழந்தைநல மருத்துவர்!

 









சந்தோஷம் 


நாகார்ஜூனா, ஷ்ரியா சரண், பப்லு


வெளிநாட்டில் வாழும் நாயகனுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. பள்ளி சென்று வருகிற வயது. நாயகனின் தங்கை, அவளது கணவர் என மூவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று, அஞ்சலில் வருகிறது. அது வேறு யாருமல்ல. நாயகனின் மனைவி வழி சொந்தங்கள்தான். நாயகன் தனது தங்கை, மாப்பிள்ளை ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இந்தியாவிற்கு செல்கிறார். ஆந்திரத்திற்கு மாமனார் வீட்டுக்கு சென்றாலும், அங்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், நாயகன் அவர்கள் வீட்டு பெண்ணை சம்மதமின்றி அழைத்துச் சென்று காதல் மணம் செய்துகொண்டதுதான். இந்த பின்னணிக் கதையில் நாயகன் விரும்புகிற பெண், அவனை விரும்புகிற மனைவி வழி சொந்தக்காரப் பெண் என இருவர் வருகிறார்கள். திருமணம் செய்து சொற்ப ஆண்டுகளில் மனைவி விபத்தில் இறந்துவிட, நாயகனை விரும்பும் சொந்தக்கார பெண் மீண்டும் அவனது வாழ்க்கைக்கு வருகிறாள். அவளை நாயகன் ஏற்றானா, மனைவி வழி சொந்தங்கள் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினார்களா என்பதே மீதிக்கதை. 


படத்தில் வில்லன் என யாருமே கிடையாது. இங்கு எதிரியாக ஒருவருக்கு முன்னே நிற்பது காலம்தான். குறிப்பிட்ட காலத்தில் புரிந்துகொள்ளப்படாத உணர்வுகள், பின்னாளில் பெரிய தடைக்கற்களாக மாறி உறவுகளுக்கு குறுக்கே நிற்கின்றன. நாயகனின் மாமனார் வீடு அப்படிப்பட்டதுதான். அவர்கள் இருபத்தைந்து வயது வரையில் பெண்ணை வளர்த்திருக்கிறார்கள். ஆனால், பெண் அவர்களது அனுமதியைப் பெற போராடாமல் தனது காதலைக் கூறியவுடனே ஏற்காதபோது அவளே முடிவெடுத்து மணம் செய்துகொள்கிறாள். இதனால் அவர்களுக்கு மனசு விட்டு போகிறது. பாசமாக வளர்த்த தன்னை விட காதலனிடம் என்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது, இப்படி தூக்கிப்போட்டுவிட்டு போய்விட்டாள் என அவளது அப்பா நினைக்கிறார். அந்த கோபம், அவருக்கு கடைசிவரையில் இருக்கிறது. அதாவது, மருமகன், தனது பேரனோடு வந்தபிறகும்கூட அவருக்கு அவர்களை அங்கீகரிக்க மனம் வருவதில்லை. பெயர் அடையாளம் தெரியாதபோது சிறுவனை அள்ளிக்கொஞ்சுகிறார். ஆனால் அவன்தான் தனது பேரன் என்று தெரிந்தபோது சங்கடமாகி காரில் ஏறி வீட்டுக்குப் போகிறார். 


நாயகன், மாமனாரிடம் கடைசியாக கல்யாணம் முடிந்து வெளிநாடு கிளம்பும்போது தான் அவரது மகளை, காதலுக்காக பிரித்தது தவறு. அன்றைய காலகட்டத்தில் என் மனதில் சம்பாதிக்கிற தைரியம் இருந்தது. ஆனால் உறவு பற்றி தெரியவில்லை. அதைப் பற்றி இப்போதுதான் யோசிக்கிறேன் என்கிறார். அதுவே அவனது மாமனாரை சற்று இளக்கமாக்குகிறது. மருமகனின் மனநிலை பற்றி புரிந்துகொள்கிறார். அவர்களை வழியனுப்ப அவருமே கூட வருகிறார்.


படத்தின் தலைப்பான சந்தோஷம் என்பது உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் புரிந்துகொள்ளவேண்டியதுதான். நாயகனுக்கு தங்கையை, அவரது கணவர் தவிர வேறு உறவில்லை. ஆனால், அவனது மனைவிக்கு ஏராளமான உறவுகள் உண்டு. திருமணமான பிறகு அவர்களை சந்திக்க முடியாமல் தவிக்கிறாள். அவர்களை மகன் பிறந்தபிறகு சந்திக்கப்போகும்போதுதான் விபத்து நேர்ந்து இறந்துபோகிறாள்.எனவே, நாயகன், மனைவி வழி சொந்தங்களோடு நல்ல உறவில் இருக்கவேண்டுமென நினைக்கிறான். ஆனால் அந்த சூழ்நிலையும் இணக்கமாகி வரும்போதுதான் மனைவியின் உறவாக வரும் தங்கையாக ஷ்ரியா வருகிறார். அவர் ஏற்கெனவே தனது அக்காவைப் பார்க்கப் போய் அவளைப் பார்ப்பதற்கு முன்னதாகவே நாயகனை ரயில் நிலையத்தில் பார்த்து காதல் வசப்படுகிறாள். அக்கா, நாயகனை தனது காதலன் என்று கூறிவிட்டதால் அவளது காதலை வெளிப்படையாக கூற முடியாமல் போகிறது. 


குழந்தை மருத்துவராக இருப்பவள், தனது அக்காவின் காதலை குடும்பம் ஏற்காததால் அங்கு வராமல் இருக்கிறாள். நாயகன் குழந்தையுடன் வந்தபிறகு அவனைப் பார்க்க அதுவரை வைத்திருந்த காதலுடன் வருகிறாள். ஆனால், அதை அவன் நட்பாக பார்க்கிறான். அவனுடைய சூழலில் அப்படி பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஷ்ரியாவை காதலிக்கும் இளைஞனாக பிரபுதேவா வருகிறார். அவருக்கு காதல் யோசனைகளை நாயகனே சொல்கிறார். ஆனால் கடைசியில் எல்லாமே ட்விஸ்ட் ஆகிறது. 


முதல் திருமணத்தில் முதிர்ச்சி இல்லாமல் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்ட நாயகன் இந்தமுறை அவனை சுற்றியுள்ள, அவனைக் காதலிக்கும் பெண்ணைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி யோசிக்கிறான். எனவே, ஷ்ரியாவின் காதலை மறுக்கிறார். மாறாக அவள் பிடிவாதமாக இருக்கிறாள். அவளுடைய மனப்போக்கில் யோசித்தால் இதுதான் அவளுக்கு கிடைத்த வாய்ப்பு. நாயகனுக்கு வயது கூட இருந்தாலும், அவளுக்கு தான் நினைத்த ஃபேன்டசி உலகத்தில் உள்ள காதலனைப் போல நினைத்துக்கொள்கிறாள். அவரவர் காதலுக்கு ஏதோ ஒரு காரண காரியங்கள் இருக்கவேண்டும்தானே?


நாகார்ஜூனா, ஷ்ரியா, பப்லு, கே விஸ்வநாத் ஆகியோர் தங்களது பாத்திரங்களை நன்றாக நடித்திருக்கிறார்கள்.  


உறவுகளை முக்கியமாக கருதி காதலை பின்சீட்டுக்கு தள்ளிவைத்து யோசித்து எடுத்திருக்கிறார்கள். மோசமில்லை. அப்பாவி தியாகியாக பிரபுதேவா மாற்றப்பட்டாலும் நடனத்திற்கு உதவியிருக்கிறார். 


கோமாளிமேடை டீம்


கருத்துகள்