நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி!

 








தற்காப்புக்கலையைக் கற்கும்போது அடிப்படையான பயிற்சியாக குதிரைபோல நிற்கும் நிலையைக் குறிப்பிடுவார்கள். உடலை அடிப்படையாக பலப்படுத்தினால்தான் தற்காப்புக்கலைகளை உறுதியாக பயன்படுத்தமுடியும். மண்ணில் வேர்பிடித்தது போல ஒருவர் நின்றால் மட்டுமே போரில் வெல்ல முடியும். அந்த வகையில் சாலையில் நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி. இதற்குப் பிறகுதான் எடைப் பயிற்சிகள், கார்டியோ ஆகியவை இடம்பெறுகின்றன. எளிமையாக கூறவேண்டுமெனில் பிரமிடு போல உள்ள உடற்பயிற்சிகளின் கீழே உள்ள அடிப்படைப் பயிற்சி, நடைப்பயிற்சிதான். 


உட்கார்ந்துகொண்டே செய்யும் வேலையில் இடையிடையே பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது கூட மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது. பிற உடற்பயிற்சிகளைப் போல உடலை பெரிதாக கஷ்டப்படுத்தவேண்டியதில்லை. எனவே, நடைப்பயிற்சி என்பது செய்வதற்கு எளிதானது. இதை தினசரி பயிற்சியாக்கும்போது, ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. 


அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு ஆகியவற்றின் பாதிப்பை நடைப்பயிற்சி பெருமளவு குறைக்கிறது. ஓட்டப்பயிற்சியைப் போலவே பயன்களை அளிக்கிறது. 80 ஆயிரம் பெண்கள், வாரத்திற்கு சில மணிநேரம் நடைப்பயிற்சி செய்தனர். இதன் விளைவாக அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 42 சதவீதமாக குறைந்தது. சிறுநீரகம், புராஸ்டேட் சுரப்பி சார்ந்த புற்றுநோய் பாதிப்புகளை நடைப்பயிற்சி பெருமளவு குறைக்கிறது. 


தினசரி பத்தாயிரம் அடிகள் கூட வேண்டியதில்லை. நான்காயிரம் அடி தூரம் நடந்தாலே ஒருவரின் இறப்பு சதவீதம் பெருமளவுக்கு குறைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதாகும்போது வாரத்திற்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அப்படி செய்தால், முழங்கால் வலி ஏற்படு்ம அபாயம் குறைகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. முதியவர்களுக்கு வயதாகும்போது உடலின் இயக்கம் குறைந்துகொண்டே வரும். ஆனால் நடைப்பயிற்சியை ஒருவர் தினசரி விடாமல் செய்யும்போது, அவர்களின் உடல்நல பிரச்னைகள் சற்று குறையும். 


 ஒருவர் நடைப்பயிற்சி செய்யும்போது மன அழுத்தம், பதற்றம் ஆகியவை குறைகிறது. இதற்காக அவர் செய்யவேண்டியது தினசரி பூங்கா அல்லது மரங்கள் அடர்ந்த பாதையில் நடப்பதுதான். ஒருவர் நகரத்தில் வாழ்ந்தால், அவர் பூங்காவில் சென்று தனியாக அல்லது தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து நடைப்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி செய்பவர்களது மனநிலையும் பெருமளவு மாற்றம் பெறுகிறது என்று 2016ஆம் ஆண்டு செய்த ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். 


தி சயின்ஸ் ஆஃப் எக்சர்ஸைஸ் - டைம் வார இதழ் 

tenor.com


 


கருத்துகள்