பெற்றோரால் அடித்து துன்புறுத்தப்படும் சிறுவன், தற்காப்புக்கலை கற்று கொள்ளைக்காரனாக மாறும் கதை!

 














நைன் ஹெவன்ஸ் ஸ்வார்ட் மாஸ்டர் 


மாங்கா காமிக்ஸ்


70--


ரீட்மாங்காபேட்.காம்



சிறந்த வாள் வீரனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் இயோன் ஜூக்கா. அம்மா பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். முதல்மனைவியை விட இரண்டாவது மனைவி மீது காதல் கொண்ட அப்பா, மனைவி இறப்புக்கு காரணம் மகன்தான் என அவனை வெறுத்து ஒதுக்குகிறார். வெறுப்பும் விரக்தியும் அவரை நோயுறச்செய்கிறது. இதனால் இயோன், அவரது முதல் மனைவியான சித்தியிடம் சிக்கி வன்கொடுமைகளை அனுபவிக்கிறார். அடித்து உதைக்கப்படுகிறார். கழித்து கட்டப்பட்ட உணவை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் பாரம்பரிய கலைகளை அவர் அடைத்து வைக்கப்பட்ட அழுக்கு அறையில் கற்கிறார். மொத்தம் பத்து ஆண்டுகள் இப்படி பயிற்சியில் போகிறது. இறுதியாக கலைகளைக் கற்றுக்கொடுத்த கண்ணாடி, தேர்ச்சி பெற்றவுடன் அவனை வெளியே வழியனுப்பி வைக்கிறது. இதுபற்றி அவனது சித்தி அறிவதில்லை. குடும்ப கலையைக் கற்க தனது மூத்த மகனை, கணவரின் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். 


இயோன் உயிர்தப்பி ஓடி காட்டுக்குள் மயங்கி விழுகிறான். அங்கு அவனை கொள்ளையர்கள் குழு கண்டெடுத்து தங்களோடு வேலை செய்ய வைத்துக்கொள்கிறார்கள். அங்கு பாத்திரம் கழுவுவது, சமையல் செய்வது ஆகிய வேலைகளை செய்கிறான். நேரம் கிடைத்தபோது வாள் பயிற்சியை செய்கிறான். அங்கு படிநிலை என்பது யார் வலிமையானவர்களோ அவர்கள்தான் அண்ணன். வலிமை குறைந்தவர்கள் தம்பி. ஒன்று, இரண்டு என வலிமை அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரமும் அப்படித்தான். அப்படியான சண்டை ஒன்றில் இயோன் சுல் சான் என்ற வீரனை நாக் அவுட் செய்கிறான். பிறகு, வணிகர்களிடம் காசு வசூலிக்கப்போகும்போது இயோன் காட்டும் நைன் ஹெவன்ஸ் கலையின் தாக்கத்தில் வணிகர்கள் அலறுகிறார்கள். பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் காசு கொடுக்க மறுத்தவர்கள் என அனைவருமே சாகிறார்கள். கொள்ளைக்கூட்ட தலைவரே கூட இயோனின் தற்காப்புக்கலைக்கு ரசிகனாகிறார். இயோன் மூலமே அந்த கொள்ளைக்கூட்டத்தின் வருமானம் கூடுகிறது. அனைத்து சகோதரர்களும் இயோனை மதிக்கத் தொடங்குகிறார்கள். இயோனின் ஓவியம் பல்வேறு நகரங்களில் தேடப்படும் குற்றவாளி என்ற பெயரில் ஒட்டப்படுகிறது. ஆம். புகழ்பெறுகிறார்.


அதேநேரம் இயோனின் அப்பா, படுக்கையில் கிடந்து இறந்துபோகிறார். அவர் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு மட்டும் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கசெய்கிறார். அவரின் மூன்று பிள்ளைகளும் பயிற்சி செய்து குடும்ப பாரம்பரியக் கலையை கற்றுக்கொள்கிறார்கள். அதை வைத்து க்ரௌச்சிங் டிராகன் குழு, வளர்கிறது. அதை மகன்களின் வலிமை, மருமகள்களின் செல்வாக்கு வைத்து வளர்த்தெடுப்பதே இயோனுடைய சித்தி நோக்கமாக உள்ளது. ஒருகட்டத்தில் அவர் மலையில் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களது இடம், சொத்துகளை அபகரிக்க நினைக்கிறார். மூத்த மகன் மூ பேயக் இதற்கு இசைவதில்லை. இருந்தாலும் அம்மா கண்டிப்பாக கூறி செய்யவேண்டும் என்பதற்காக செய்கிறான். அம்மாவின் பேராசைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைக்கிறான். அவன் தலைவர் போல தெரிந்தாலும் அனைத்து முடிவுகளையும் அவனது அம்மாவே எடுக்கிறார். 


மவுண்ட் முஃபெங்கின் மிகப்பெரிய வீரனாக இயோன் அறியப்படுகிறான். அவன் புகழ் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. பொதுவாக அனைத்து கொள்ளைக்கூட்டங்களிலும் மூன்றாம், நான்காம் தர தற்காப்புக்கலைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயோன் கலை, அவன் அப்பா கற்றுக்கொண்ட வலிமையான கலை. அதற்கு எதிரிகள் யாருமே ஈடுகொடுத்து நிற்கமுடிவதில்லை. ஒருகட்டத்தில் முடாங் இனக்குழுவின் வலிமையான மூத்த தலைவருடன் இயோன் மோதுகிறான். அவர் அந்த சண்டையில் தோற்றுப்போகிறார். பிறகு அவனிடமிருந்தே சில நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறார். இயோனுக்கு தேவையான சில நுட்பங்களையும் கற்றுக்கொடுக்கிறார். அவரோடு இயோன் செய்யும் சண்டை ஓவியங்கள் பிரமாதமாக வரையப்பட்டுள்ளன. 


கொள்ளைக்காரர்களுக்கான பண்டிட் யூனியன் ஒன்று உள்ளது. அதில் வலிமையான தலைவர் இருக்கிறார். அவரின் மாணவன்தான் மவுண்ட் வுபெங்கில் இருக்கிறான் என வதந்தி பரவுகிறது. அதை அந்த யூனியன் தலைவர் அறிந்தே இருக்கிறார். அவரது மாணவர்கள் மொத்தம் பனிரெண்டு பேர். அவர்களை வைத்து போட்டி ஒன்றை நடத்தி அதில் அவர்களை மட்டுமே வலிமையானவர்களாக காட்ட வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் அதற்குள் டிமோனிக் செக்ட் உள்ளே புகுந்து அவர்களது ஆட்களை போட்டிக்கு அனுப்பி, யூனியன் தலைவரது மாணவர்களை அவலமான முறையில் தோற்கடிக்கிறது. இந்த போட்டியில் இயோன் கலந்துகொள்ளத்தான் நினைப்பான். ஆனால், அங்கு வென்று காவலர் வேலை கிடைத்தால் அவனது மூத்த சகோதரர்களை விட்டு பிரியவேண்டும் என்ற சூழலுக்காக போட்டியில் பங்கேற்க மாட்டான். ஆனால் இறுதியில் அவனது இனக்குழு தலைவருக்காக போட்டியில் பங்கெடுத்து கோஸ்ட் ஸ்வார்ட் என்பவருடன் வாழ்வா சாவா போட்டியில் மோதுவான். அதில் கோஸ்ட் ஸ்வார்ட் ஏறத்தாழ தோற்றே விடுகிறார். அவர் கொல்லப்படுவதை யூனியன் தலைவர் கஷ்டப்பட்டு தடுப்பார். அவரோடு இயோன் பயப்படாமல் சண்டை போடுவான். 


தொடக்கத்தில் கதை நன்றாக தொடங்கினாலும் பிறகு கதையில் வேகம் குறைந்துவிடுகிறது. நாயகனுக்கான நோக்கம் என்பது அவனது குழுவை வளர்ப்பது என்று கூட இல்லை. அவன் அந்த குழுவில் இருக்கிறான். சகோதரர்களுக்கு தன்னுடைய பாரம்பரிய குடும்ப கலையைக் கற்றுக்கொடுத்து வலிமையாக்குகிறான். அவனது சித்தப்பா குடும்பம் ஒருமுறை இயோனை சந்தித்தாலும் கூட அவனுக்கு பெரிய உதவிகளை செய்வதில்லை. ஆனால் சித்தப்பாவின் பெண், இயோனின் வீட்டிற்கு வரும்போது அவனைத் தேடுகிறாள். எதற்கு என வாசிப்பவர்களுக்கு புரிவதில்லை. செல்வாக்கு கொண்ட அவளால் அவனைக் காப்பாற்ற முடிந்திருக்கும். குறைந்தபட்ச கௌரவமான வாழ்க்கையை அளித்திருக்கலாம். ஆனால் அவனை புறக்கணிக்கிறார்கள். கொள்ளைக்கூட்டம் மட்டும்தான் அவனை பாகுபாடின்றி ஏற்கிறது. உணவிடுகிறது. பராமரிக்கிறது. இயோனும் அவனது சகோதரர்களை  மதிக்கிறான். அவர்களுக்கு ஏதாவது அவமானம் என்றால் அடுத்தநொடி எதிரிகளை அடித்து நொறுக்குகிறான். அவனது ஆக்ரோஷத்தை பார்த்து மூத்த சகோதரர்களே பயப்படுகிறார்கள். இனக்குழுவில் அவனது பெயரே கார்டியன் காட். 


இயோன் ஜூக்காவின் வருகைக்குப் பிறகு, அவனது சகோதரர்களது தற்காப்புக்கலை பெரிதும் முன்னேறுகிறது. பிளாக் கார்ப்ஸ் எனும் கறுப்பு முகமூடி கொலைகாரர்களை சந்தித்து போரிடுவது முக்கியமான சம்பவம் அதில், ஒட்டுமொத்த மவுன்ட் முபெங் குழுவுமே  பலம், பலவீனத்தை உணர்கிறார்கள். பிறகுதான் அவர்களது தற்காப்புக்கலை பயிற்சியில் வேகம் கூடுகிறது. அதேநேரம் நகரத்தில் உள்ள மக்கள், துறவிகள் கடத்தப்பட்டு நரபலி கொடுக்கப்படுகிறார்கள். இதன் வழியாக டிமன் செக்ட் வளர்ச்சி பெறுகிறது. 


டிமோனிக் குழுவின் வளர்ச்சி, போர் செய்யும் முயற்சி, அதில் இயோன் என்ன பங்களிக்கிறான் என்பதே அடுத்தடுத்த அத்தியாயங்களில் தொடரும் கதையாக இருக்கும். 

இந்த கதையில் நாயகன் பயன்படுத்துவது கத்தி. வாள் அல்ல. வாள் பயன்படுத்தினால் தாக்குதல் துல்லியமாக இருக்கும் என பெரியவர் ஒருவர் கூறுகிறார். ஆனால் நாயகன் ஜூக்கா அதை உணர்ச்சிமயமானதாக கருதி பேசி நிராகரித்துவிடுகிறான். 

கோமாளிமேடைடீம் 

கருத்துகள்