அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!
செஸ்
திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன்
விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள். அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.
படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து எனது சொத்துகள் ஒரே மகனான உனக்குத்தான் என்று சொல்கிறார். அதற்கென உயில் கூட எழுதுகிறார். ஆனால் அங்கு ஒரு திடீர் திருப்பமாக அவர் சில நாட்களில் இறந்துபோகிறார். அவரது வீட்டில் இருந்த விஜயையும் அவனது அம்மாவையும், இறந்துபோனவரின் தம்பியும் நகர கமிஷனருமானவர் அடித்து துரத்துகிறார். விஜய், தங்களுக்கு உரிமை இருக்கிறது என வழக்குத் தொடருகிறான். ஆனால் நகர கமிஷனர் உயில் எழுதிய வக்கீலுக்கே காசு கொடுத்து தன் பக்கம் இழுக்க, கோர்ட்டில் விஜய்யின் அம்மாவை வேசி என வசைபாடி அவமானப்படுத்துகிறார்கள். இதற்கடுத்து, அவளை தீ வைத்து கொளுத்தி கொல்கிறார்கள். விஜய்யை தலையில் அடித்து வீழ்த்துகிறார்கள். உண்மையான உயிலை வாங்கி எரித்துவிடுகிறார்கள். இதற்கு நாயகன் விஜய் எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை.
காமெடி ரூட்டை விட்டு சண்டை போட்டால்தான் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கலாம் என யாரோ திலீப்பிற்கு காதில் கூறியிருக்கிறார்கள். அதன் காரணமாக படத்தில் நகைச்சுவை குறைவாக இருக்கிறது. அசோகனுக்கு கொடுத்த காட்சிகளும் குறைவு. சலீமும் முயல்கிறார். ஆனால் போதவில்லை. சுவாமிநாதன் என்ற தமிழ்நாட்டு ஆள் என ஆசிஷ் வித்யார்த்தியை காட்டுகிறார்கள். அவரை மராத்தி என காட்டியிருந்தாலும் கதையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் ஆள். அதை ட்விஸ்ட் போல காட்டுகிறார்கள். ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்த கதையில் எதிர்பார்க்க ஏதுமில்லை என்பது இடைவேளைக்கு முன்பாகவே தெரிந்துவிடுகிறது.
காதலனுக்கு கண் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன உண்மையாக காதலிப்பவள் காதலிக்கத்தான் போகிறாள். அதை ஏதோ பெரிய விஷயம் போல திலீப் மருத்துவரிடம் பேசுகிறார். பரிதாபம். ஒரு வக்கீல், மூன்று போலீஸ் அதிகாரிகள் என நான்கு பேர்களை கொல்லவேண்டும். அதுதான் பழிவாங்கும் படலம். அப்படி கொல்வதில் ஏதாவது சுவாரசியம் இருக்கிறதா என்றால் ம்ஹூம் எதுவுமில்லை. இத்தனைக்கும் சில கொலைகள் முன்கூட்டியே சொல்லிவிட்டு செய்கிறார் நாயகன். அப்படியும் கூட அவரைப் பிடிக்கமுடியாமல் சுற்றுகிறார் லஞ்ச அதிகாரி சுவாமிநாதன். தத்தியோ தத்தி... இவர் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி வேறு.... பில்டப்புகள் எல்லாம் சாம்பிராணி புகையாக கரைந்து போகிறது.
மருத்துவர், வீட்டு வேலைக்காரர் தாஸ் என இருவர் நாயகனுக்கு மனமுவந்து உதவுகிறார்கள். அடுத்து, உன்னிக்கண்ணன், கள்ளன் பாஸ்கர் என இருவரும் நாயகன் யாரென்றே தெரியாமல் அவனுக்கு உதவி செய்கிறார்கள். படம் நெடுக நாயகன் வெள்ளை நிற ஸ்கார்பியோ காரை ஓட்டு ஓட்டு ஓட்டு.... என ஓட்டுகிறார். அதை ஆனந்த் மகிந்திரா தனது விளம்பர படங்களுக்கு கூட பயன்படுத்தலாம். இறுதியாக வெள்ளையிலிருந்து சிவப்பு நிற ஸ்கார்பியோவுக்கு மாறுகிறார். ஏதோ ஒரு குறியீடு. நல்லது. ஆனால் படத்திற்கு செஸ் என எதற்கு பெயர் வைத்தார்கள் என புரியவில்லை. டைட் சோப் போட்டு ஒரே இழுப்பில் அழுக்கு களைந்து வெண்மை வருகிறதல்லவா, மூன்று தோட்டாக்கள் ஒரு வில்லனுக்கு என திட்டமிட்டு கொல்கிறார். பிறகு கொசுவற்ற உறக்கத்திற்கு குட்நைட் என நாயகனின் பழிவாங்கும் படலம் ரிதம் குறையாமல் மெதுவாக செல்கிறது. கண் தெரியாதவராக நடிக்கிறார். அதையாவது ஒழுங்காக செய்கிறாரா என்றால் அதுவும் இல்லை. யாருக்கு தெரியக்கூடாதோ அத்தனை பேருக்கும் அது பொய் என தெரிந்துவிடுகிறது. பிறகு என்ன மயிருக்குடா அப்படி சொன்னீங்கன்னு கேட்க கூடாது. அது அப்படித்தான். சும்மா ஒரு லுல்லுல்லாயி...
பெருமாள் மீது பாரத்தை போட்டு ஷூட்டிங்கில் திரைக்கதை எழுதியிருப்பார்கள் போல. எப்படியோ போய் எப்படியோ முடிகிறது.
கோமாளிமேடை டீம்
Siby K. Thomas
கருத்துகள்
கருத்துரையிடுக