ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

 










 hi venus (ஜஸ்ட் வித் யூ) 

சீன டிராமா

24 எபிசோடுகள்


பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள். 


நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள் வேலையை மறக்காமல் செய்துகொண்டே இருக்கிறாள். அவளது கிராமத்தில் பிரசிடென்ட் லூ ஒருமுறை சென்று மாட்டிக்கொள்கிறான். மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட கார் அதில் மாட்டிக்கொள்கிறது. அந்த நேரத்தில் ஒரு செம்மறி ஆடு காயம்பட்டு கிடக்க அதைக் காப்பாற்றுகிறான். அங்கு தனது ஆட்டைத் தேடிவரும் டாக்டர் யே, லூவை திருடன் என தவறாக புரிந்துகொள்கிறாள். காயம்பட்டவனுக்கு உதவினாலும் கூட அனைத்திற்கும் காசு தரவேண்டும் என மிரட்டுகிறாள். 


லூ, பணக்காரன். நிதி நிர்வாகம் பற்றி படித்த ஆள். அவனுக்கு கிராமத்து ஆட்கள் பற்றி ஏதும் தெரியாது. சகல வசதிகளோடு வாழ்ந்தவன். அவனுக்கு யே சில்லான் பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறாள். வேலை செய்தால்தான் உணவு என்று சொல்லி ஆட்டுப்பட்டி, வாத்துப்பட்டி என அனைத்தையும் சுத்தம் செய்ய வைக்கிறாள். அவன் தன்னை ஆன்ஷிங் மருத்துவமனை தலைவர் என்று சொன்னாலும் யே சில்லான் நம்புவதில்லை. அதற்கு அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. 


யே சில்லான் வேலை செய்யும் மருத்துவமனை ஆன்ஷிங்கிற்கு சொந்தமானது. இலவசமாக கிராம மக்களுக்கு உதவி வருகிறது. மருத்துவமனையில் போதிய கருவிகள் இல்லை என்றாலும் மூத்த மருத்துவர்கள் இருவரும் அமைதியாக முடிந்தவரை உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதாக லூ வாக்களிக்கிறான். பிறகு அங்கிருந்து நகரத்திற்கு சென்று முதல் வேலையாக மருத்துவக்கருவிகளை தாவோயூன் கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறான். அடுத்து யே சில்லானை மீண்டும் தலைமை மருத்துவமனைக்கு வர வைக்கிறான். குழந்தை மருத்துவத்துறை தலைவர் டீன் சூவுக்கு ஆதரவான ஆள். தந்திரமானவர். அரசியல் செய்பவர். எனவே, யே  சில்லானுக்கு கிளினிக் ஒதுக்க மறுத்து, தனது நூலை எழுத்துப்பிழை பார்க்க உத்தரவிடுகிறார். லூ, அலுவலகத்திற்கு வந்ததும் யே சில்லானை கூப்பிட்டு அதுவரை கடன்பட்ட தொகையை ரொக்கமாக கையில் கொடுத்து எண்ணிப்பார்க்க சொல்கிறான். அவளுக்கோ அது திகைப்பாக மாறுகிறது. கிராமத்தில் லூவை என்னென்ன வேலைகளை செய்ய வைத்தோம். அது அப்படியே நமக்கு ரிப்பீட் ஆகுமோ என மிரள்கிறாள். 


லூ பணக்கார இளைஞன். ஆனால் அதேசமயம் நீதியுணர்வு கொண்டவன். அவன் அந்த மருத்துவமனைக்கு வந்ததே ஊழல் ஆசாமிகளை அங்கிருந்து நீக்கி மருத்துவமனையை பிரபலமாக்கத்தான். அவனுக்கு யே சில்லானின் துணிவும், நேர்மையும் பிடித்துப்போகிறது. அவளுக்கு வேலை கொடுக்காமல் குழந்தை மருத்துவ பிரிவு தலைவர் குவாங் அரசியல் செய்ய, யே சில்லானை தனது உதவியாளராக மாற்றிக்கொள்கிறான். 


மெல்ல இருவருக்குள்ளும் காதல் பூக்கிறது. 


அந்த காதல் நிறைவேறியதா, மருத்துவமனையில் என்னென்ன அரசியல் சமாச்சாரங்கள் நடந்தன, யே சில்லான் மீண்டும் மருத்துவர் வேலைகளை செய்தாரா என்பதே கதை. 


மருத்துவ டிராமா கிடையாது. ஆபரேஷன், எமர்ஜென்சி, நோயை ஆய்வுசெய்வது என்றெல்லாம் கதை பயணிக்கவில்லை. கதை நடக்கும் இடம் மருத்துவமனை அவ்வளவுதான். மற்றபடி பிரசிடென்ட், அவரது அசிஸ்டென்ட் என இருவருக்குமான காதல் , ஊடல், கலாய், கேலி, கிண்டல், அவநம்பிக்கை, நம்பிக்கை, ஆறுதல், தேறுதல்தான் கதை. நிறைய விதம்விதமான உணவு வகைகள், அதன் தயாரிப்பு, காபி, நிறைய காதல் என கதை நகருகிறது. 


பிரசிடென்ட் லூ, யே சில்லானுக்கு வாழ்க்கையை நேர்மறையாக பார்க்க, புரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கிறான். அவள் மூலம் அவன் உலகின் இன்னொரு பக்கத்தைப் பார்த்து புரிந்துகொள்ள முயல்கிறான். வறுமையான மக்கள், அவர்களின் உயிர் வாழ்வதற்கான போராட்டம், எளிமையான கனவு, சிக்கனமான வாழ்க்கை என பலதும் அவனுக்கு ஆச்சரியமூட்டுகிறது. இந்த வேறுபாடுகளே ஒருவரையொருவர் ஈர்க்கிறது. யே சில்லானின் தோழி ஜியா, லூவின் கூடவே இருக்கும் அசிஸ்டென்ட் லின் ஆகியோரது பாத்திரம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கதையில் அசிஸ்டென்ட் லின் பாத்திரம் தொடக்கத்தில் எதிர்மறையாக இருப்பது போல தெரியும். ஆனால் இறுதியில் அவர் நாயகன் லூவுக்கு தோழன் போல மாறுவார். யே சில்லானின் எழுத்தாளர் தோழியை லின் காதலிப்பார். இவர்களின் காதல் காட்சிகள் நன்றாக உள்ளன. 


லூ, யே சில்லானின் காதல் கதைதான் முதன்மையானது. ஆனால் அதற்கு இணையான சுவாரசியத்தோடு ஜியா, லின் ஆகிய இணையரின் சந்திப்பும் காதலும் உள்ளது. லின் பரபரப்பான ஆள். வேகமாக சாப்பிட்டுவிட்டு பணிக்கு செல்பவன். பிறரது மனநிலையை பார்வையாலேயே படிக்கும் திறன் கொண்டவன். அதை வளர்த்துக்கொள்ள இணையத்தில் எழுதும் ஜியாவின் கதைகளே அவனுக்கு உதவுகிறது. அவளின் கதையில், ஒருகட்டத்தில் அவன் கஃபேயில் வாங்கும் காபி இடம்பெறுகிறது. அதைக் கண்டுபிடித்து எழுத்தாளர் ஜியா, கஃபேயில் வேலை செய்கிற பெண் என அடையாளம் கண்டுபிடிக்கிறான். தன்னைப் பற்றிய விவரிப்புகளை மாற்றச்சொல்லுகிறான். அவளும் மாற்றுகிறாள். இப்படி தொடங்குகிற உறவு மெல்ல அடுத்த கட்டத்திற்கு நகருகிறது. லின்னே அவளது கதைக்கு தேவையான பற்றாக்குறையாக உள்ள விஷயங்களை எழுதி ஆவணமாக்கி கொடுக்கிறான். ஜியாவின் ரசிகன் லின். அவனது உலகம் ஓய்வு நேரத்தில் படிக்கும் காதல் நாவல்கள்தான். அதில் பெரும்பாலானவை ஜியா எழுதியவை. 


மனிதர்கள் பற்றிய பார்வை, காதல் பற்றிய அறிவை லின், ஜியாவின் எழுத்துக்களிலிருந்து அறிந்துகொள்கிறான். இப்படி தான் பெற்ற வாசிப்பு மகிழ்ச்சி காரணமாகவே ஜியாவின் கதையை சினிமா ஏஜென்சிக்கு விற்றுத்தரவும், அவளின் மேனேஜர் ஆகவும் இருக்க அவனே விருப்பம் தெரிவிக்கிறான். கூடவே ஜியாவின் கனவாக உள்ள கஃபே ஒன்றை விலைக்கு வாங்கி நடத்துவதற்கும் லின் உதவுகிறான். 


உங்களோட கதைகளைப் பத்தி என்னோட நண்பர்களுக்கு சொல்றதுக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா, என்னோட கேர்ள்பிரண்டோட கேரியருக்கு நான்தானே உதவணும்? என ஒரு வசனத்தை லின் பேசுவார். அதில் அவ்வளவு காதல் இருக்கும். இத்தனைக்கும் ஜியா செய்தது. தனக்கான அடையாளத்தை எழுத்து மூலம் தேடியதுதான். ஆனால் அந்த எழுத்து ஒருவரின் உலகத்தை எப்படி மாற்றியிருக்கிறது. அவள் தனது எழுத்து மூலமாக உருவாக்கிய அன்பு உலகம், அவளுக்கு எப்படியான காதலை திருப்பித் தருகிறது என்பதே பார்க்க அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. லின்னிடம் காதல் கதைகளை மக்கள் படித்து எப்படியான கமெண்டுகளை எழுதுகிறார்கள், தான் அதை எப்படி பார்க்கிறேன் என்பதை விளக்கிப் பேசுவாள். தொடரில் அது முக்கியமான காட்சி.


யே சில்லானுக்கு தனது அப்பா வாக்களித்த வீட்டை அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும்விதமாக காசு சேர்த்து வாங்கவேண்டுமென்ற ஆசை உள்ளது. அதற்காக, ஒருகட்டத்தில் தனது நீதியுணர்வைக்கூட அடமானம் வைக்கிறாள். அதை லூ கண்டுபிடித்து தடுத்து அவள் தனக்கு யார் என்பதைக் கூறுகிறான். அவள் எப்படி இருக்கவேண்டுமென நினைவுபடுத்துகிறான். இன்னொரு இடத்தில் அவளது அம்மா நகரத்திற்கு வரும்போது, யே சில்லான், அவளது அம்மாவுடன் லூ சாப்பிடச்செல்கிறான். யே சில்லானைப் பொறுத்தவரை லூ பணக்காரன். ஆனால் அவனது புகைப்படத்தை தனது காதலன் என்று அனுப்பிவிட்டதால் சாப்பிட அழைத்துச்செல்லும் நிர்பந்தம் உருவாகிறது. அவனை அம்மாவிற்கு பிடிக்காதமாறு செய்துவிட்டால் தான் செய்த தவறை சரி செய்துவிடலாம் என நினைக்கிறாள்.


லூவையும் அதற்கேற்ப சொல்லிக்கொடுத்து நடிக்க வைக்க முயல்கிறாள். ஆனால், லூ , யே சில்லான் தனது முன்னாள் காதலனான ஜியாங்கை மனதில் நினைத்துக்கொண்டு இப்படி தன்னை செய்யச் சொல்கிறாள் என புரிந்துகொள்கிறான். 


யே சில்லான் சொன்னதுக்கு மாறாக அவளது அம்மாவுடன் நன்றாக பேசுகிறான். நன்றாக நடந்துகொள்கிறான். அம்மாவிற்கு லூ பிரசிடென்ட் என்று தெரியாது. அவளுடன் வேலை செய்யும் சக மருத்துவர் என புரிந்துகொள்கிறாள். ஆனாலும் லூ காட்டும் காதலை மதிப்புடன் அங்கீகரிக்கிறாள். முதல் கணவருக்கு பிறந்த குழந்தை யே சில்லான். இரண்டாவது கணவருக்கு பிறந்த மகன் இருக்கிறான். அவளுக்கு தனது மூத்த மகள் நன்றாக இருக்கவேண்டுமென ஆசை இருக்கிறது. 


யே சில்லான் வறுமையான சூழலில் பிறந்தாலும் கூட அவருக்கு சுயமரியாதை தன்மானம் உண்டு. அதனால்தான் தனது துறையில் நடைபெறும் தவறுகளை முதல் ஆளாக எதிர்த்து கேள்வி கேட்கிறாள். ஆனால் அப்படி கேட்டு, அதன் காரணாக தான் குழந்தை மருத்துவராக இனி வேலை செய்யமுடியாதோ என்ற பயத்தில் தான் செய்தது என மருத்துவர் குவாங்கிடம் மன்னிப்பு கேட்கிறாள். அதை பார்த்து லூ மனம் உடைந்துபோகிறான். அவன் பேசியதைக் கேட்டதும் தனது இயலாமையை வெளிப்படையாக கூறுகிறாள். இந்த சம்பவம் லூ, யே என இருவரையும் மாற்றுகிறது. இருவருக்குமான வாழ்க்கை சமூகம், பொருளாதாரம், கலாசாரம் என நிறைய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. 


பூக்களைப் பற்றி அதற்கு என்ன அர்த்தம் என இருவரும் உரையாடும் பகுதி நன்றாக உள்ளது. யேவுக்கு சிக்கனமாக வாழ்ந்து, தன் அப்பா தனக்கு வாக்களித்த வீட்டைப்போலவே ஒன்றை அவரது நினைவுக்காக வாங்கி அதில் வாழவேண்டும். தனது குடும்பமே அந்த வீடுதான் என்று வெளிப்படையாக லூவிடம் கூறுகிறாள். இதில் முக்கியமானது, லூ அவளது காதலன் என்பதால் வீடு வாங்குவதை அவன் மூலம் அதை நிறைவேற்றி்க்கொள்வதில்லை. தானே உழைத்து வீட்டை வாங்கவேண்டுமென்ற சுயமரியாதை உள்ளது. குழந்தைநல மருத்துவராக உழைத்து தனக்கென பெயர் உருவாக்கிக்கொள்ள நினைக்கிறாள். ஆனால் இடையில் வரும் லூவின் காதல், அவளது திறமை, படிப்பு ஆகியவற்றை கீழே தள்ளி எதிர்காலத்தில் திருமணம் மூலம் கிடைக்கும் சமூக அந்தஸ்து சார்ந்து நெருக்கடியில் தள்ளுகிறது. பிறர் அவளை மருத்துவமனை தலைவரின் காதலி, எதிர்கால மனைவி என பார்க்கிறார்கள். மருத்துவராக அவளது திறமையை யாரும் கவனிப்பதில்லை. இதை அவள் வருத்தமாக தோழியிடம்(ஜியா) பகிர்கிறாள்.


லவ்வோ, கல்யாணமோ ஏன் பொண்ணுகளை மட்டும் மோசமா திட்டுறாங்க, இதில ஆண்களுக்கும் பங்கிருக்கில்ல.. 


சின்ன வசனம்தான். அதிலேயே சீன சமூக வலைத்தளங்களில் எப்படி பாகுபாடான பார்வை உள்ளது. அதை நம்பி எப்படியெல்லாம் தங்களது பொறாமை வக்கிரங்களை கமெண்டுகளில் கொட்டுகிறார்கள் என்பதை காட்சிகளில் காட்டுகிறார்கள். 


நேர்மறையான எண்ணங்கள் மகிழ்ச்சியோ, துயரமோ எது நடந்தாலும் வாழ்க்கையை நல்ல திக்கில் வழிநடத்தும் என சொல்லியிருக்கிறார்கள். 


 

கோமாளிமேடை டீம்

 A light-hearted tale of opposites attracting, “Hi Venus” is a 2022 Chinese romantic comedy drama directed by Wang Wheng.


Hi Venus9.3(24,916)
2022
U/A 13+24 episodes
GenresMedical Drama,
Romantic Comedy
CastJoseph Zeng,
Liang Jie





கருத்துகள்