காலதாமதம் ஆன காதலை மீட்டெடுக்க முயலும் அறுவை சிகிச்சை வல்லுநர்!

 










நாட் டூ லேட்


11 எபிசோடுகள்

சீன டிராமா


ராக்குட்டன் விக்கி ஆப்


பள்ளிக்காலத்தில் டிங் ரான், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிக்கிறான். அவன் அகவயமானவன். எனவே, தனது உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்த முடியவில்லை. அவன் காதலிக்கும் மாணவிக்கும் டிங் ரான் மீது விருப்பம்தான். காதல்தான். ஆனால், அதை அவள் வெளிப்படையாக டேட்டிங் பண்ணலாமா என்று கூறும்போது, டிங் ரான் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் மறுத்துவிடுகிறான். காலம் கடக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்த முறை, டிங் ரானின் அப்பா, அவன் காதலித்த பெண்ணின் அம்மாவை மணம் செய்துகொள்ள போகிறார். இதனால் டிங்ரான், அவனது முன்னாள் காதலி என இருவருமே ஒரே வீட்டில் வாழவேண்டிய நிலை. அக்கா, தம்பி என உறவு மாறும் சூழ்நிலை. ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அதுவரை மறைந்திருந்த காதல் புதிதாக துளிர்விடத் தொடங்குகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. 


தொடரில் மொத்தம் ஆறு பாத்திரங்கள்தான். முக்கியப்பாத்திரங்கள். அதனால் பழி, வஞ்சம், துரோகம், வன்முறை என பிரச்னை இல்லாமல் பார்க்கலாம். ரசிக்கலாம். பதினொரு எபிசோடுகள்தான். நேரமும் மிச்சம் பாருங்கள். 


டிங் ரான், மார்பக அறுவை கிசிச்சை நிபுணன். அவன் என்ன யோசிக்கிறான், நினைக்கிறான் என்பது அவனே சொன்னால்தான் தெரியும். அந்தளவு அமைதியாக வாழும் அகவயமானவன். பேபி  என்ற நாயகி, உள்ளாடைகளை வடிவமைப்பவள். தனது தோழியுடன் சேர்ந்து அந்த தொழிலை நடத்துகிறாள். கூடவே இன்னொரு வேலையையும் செய்கிறார். கூடுதல் வேலை மூலம் கிடைக்கும் பணத்தை அம்மாவின் ஓய்வுகாலத்திற்கு கொடுப்பதே நோக்கம். 


இப்படி வேலை செய்துகொண்டிருக்கும் ஒருநாளில் மார்பக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்கிறாள். அங்கு, அவள் தனது பள்ளிக்கால காதலனை சந்திக்கிறாள். வேறு யார் டிங் ரான்தான். அவன் அவளைப் பார்த்து எந்த அதிர்ச்சியும் அடைவதில்லை. அவளது மார்பை இயல்பாக சோதித்து ஆய்வு செய்து அனுப்புகிறான். அவளோ, காதல், அதிர்ச்சி என இரண்டுமே பாதிக்க தனது பிராவைக் கூட மருத்துவமனையில் வைத்துவிட்டு ஓடி வந்துவிடுகிறாள். 


பிறகு, அடுத்த அதிர்ச்சியாக டிங் ரானின் அப்பாவும், தனது அம்மாவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து பீதி அடைகிறாள். அவர்கள் செய்துகொள்ளும் திருமணத்தை விட நால்வரும் ஒன்றாக வாழப் போகிறோம் என்பதுதான் பெரிய சிக்கலாக மாறுகிறது. பேபி, அப்போது இன்னொருவரோடு டேட்டிங் சென்று கொண்டிருக்கிறாள். டிங் ரான், பள்ளிக்காலத்தில் தவறவிட்ட காதலை இந்தமுறை வென்றுவிடவேண்டும் என நினைக்கிறான். பேபியின் அம்மாவுக்கு அவளை, அவள் விரும்புகிறபடி ஒருவனுக்கு மணம் செய்துகொடுக்க ஆசை. 


பேபிக்கு மார்பகத்தில் சிறுகட்டி இருக்கிறது. அதை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துகிறான் டிங் ராங். இதனால் பேபிக்கு அவன் மீது இருந்த பழைய கோபம் குறைகிறது. டிங் ரானும் கூட அவளை நெருங்கி வருகிறான். ஆனால், அப்போது பார்த்து ஸாங் எனும் டேட்டிங் காதலனை பேபி கட்டிப்பிடித்தபடி கஃபேயில் இருப்பதைப் பார்த்து டென்ஷன் ஆகிறான். காதலை மனதிற்குள் பூட்டிவைத்துக்கொள்கிறான். 


பேபியின் தோழி, திருமணத்தில் நம்பிக்கை இல்லாதவள். அதற்காக செக்சில் ஆர்வம் இல்லாதவள் அல்ல. அதை மட்டுமே வாழ்க்கையில் முக்கியமாக நினைப்பவள். அவள்தான் டிங் ரானுக்கு பேபியின் காதலைப் புரிய வைக்கிறாள். ஓல்ட் சிக்ஸ் எனும் அவள் வேறு யாருமல்ல, இருவருடன் படித்த பள்ளித்தோழிதான். அவளுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஆனால் அவளது பெற்றோரது விவாகரத்து வாழ்க்கை காரணமாக அவனை காதலிக்கவோ, திருமணம் செய்துகொள்ளவோ மனமின்றி இருக்கிறாள். அவளது மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் கதை பேசுகிறது. ஓல்ட்சிக்ஸ் - க்யூஃபெய் வரும் காட்சிகள் அனைத்துமே அடல்ஸ் ஒன்லிதான். எப்போதும் டீ குடிப்பதுதான் ஒரே வேலையாக இருக்கிறது. அப்படியென்றால் என்னவென்று தொடரைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 


காதலுக்கான காதலர்களுக்கான தொடர். ஒளிப்பதிவு பளிச்சென இருக்கிறது. நாயகனை, நாயகியை அழகாக காட்ட நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். நாயகன், நாயகிக்கான உடை தேர்வு, அவர்களது அறை, பயன்படுத்தும் பொருட்கள் என  எல்லாம் பிரமாதமாக உள்ளது. மேல்தட்டு வர்க்க காதல் தம்பதியினரின் கதை. தொடர் முழுக்க ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்களுக்கு சமைத்து பரிமாறுகிறார்கள். அன்பு, அக்கறை, பராமரிப்பு என அனைத்திலும் ஆண்களையே முக்கியமானவர்களாக காட்டியிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளாக காதலித்து மணம் செய்துகொள்ளப்போகும் நாயகியின் அம்மா பற்றியும் தொடர் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

கோமாளிமேடை டீம் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்