மாணவர்களை வலுவானவர்களாக மாற்ற முயலும் பலவீனமான தற்காப்புக்கலை ஆசிரியர்!

 









வீக் டீச்சர் 

மாங்கா காமிக்ஸ்


நாம்கூங் இனக்குழுவில் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசியாக உள்ள பையன் பலவீனமாக இருக்கிறான். அதற்கு முக்கியமான காரணம், சிறுவயதில் அவனுக்கு மர்ம நபர் கொடுக்கும் விஷ மாத்திரை. அந்த மாத்திரை காரணமாக அவனது உடலில் விஷம் பரவி, அவனது ஆன்ம ஆற்றலை குன்ற வைக்கிறது. அவனை எல்லாருமே இழிவாக பேசுகிறார்கள். நாம்கூங் குடும்பத்தின் அவமானம் என பேசுகிறார்கள். யாருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவனது அண்ணன்கள் கூட பாராமுகமாக இருக்கிறார்கள். 


முரிம் கூட்டமைப்பில் உள்ள ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே சேர அவனது அப்பா உத்தரவிடுகிறார். அவன் அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்பது அண்ணனின் உத்தரவு. அப்படி வரவில்லை என்றால் மூத்த அண்ணனே அங்கு வந்து கூட்டிச்கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார். எனவே, வேகமாக வலிமையாக முயல்கிறான். அங்கு செல்பவனுக்கு பார்க்கவே பலவீனமாக உள்ள ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். உண்மையில் அவர் டிமன் பிளவர் லீக் என்ற படுகொலை குழுவின் கேப்டன் கிவி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. உண்மையில் அவர் யார் என்று நாம்கூங் மே மெல்ல அறிந்துகொண்டு தன்னை பலப்படுத்திக்கொள்வதுதான் கதை. 


வீக் டீச்சர் என்ற மாங்கா காமிக்ஸின் நாயகன் யாரென்று கூறுவது கடினம். இதில் முறையாக நாயகன் என்றால் டிமன் ஃபிளவர் லீக் முன்னாள் கேப்டனைத்தான் கூறவேண்டும். வெளுத்துப்போன முகம், ஒல்லியான உடல், தற்காப்புக்கலை கற்றவரென நம்பவே முடியாத தோற்றம், அடிக்கடி பயிற்சியின்போது மயங்கி கீழே விழுந்துவிடுகிறார்.


நாம்கூங் மேவிற்கு மட்டுமல்ல அவனோடு உள்ள பலருக்குமே அவர்தான் தங்களின் பாம்பு குழுவிற்கு தலைவர் என நம்பவே முடியவில்லை. ஆனால் அவர்தான் நாம்கூங் மேவின் மனபலத்தைப் பார்த்து அவனை தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார். அவனது உடலில் உள்ள அன்டிரேசபிள் பாய்சன் எனும் ஒருவித விஷத்தைப் பார்த்தவுடன் அவருக்கு தனக்கு அண்ணனால் கொடுக்கப்பட்ட விஷம் நினைவுக்கு வருகிறது. அவனைக் காப்பாற்ற, தனது தற்காப்புக்கலையைச் சொல்லிக் கொடுக்கிறார். அதற்கு முன்னதாகவே, நாம்கூங்கின் அப்பாவிடம் இதற்கான அனுமதியை வாங்கிவிடுகிறார். கிவி என்ற ஆசிரியரின் கடந்தகால கதை மிக சோகமானது. அதையும் கதையின் போக்கில் கூறுகிறார்கள். ஒரே ஒரு மனிதனின் பேராசையால் அவனை சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கை எந்தளவு பேரழிவை சந்திக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு அது. 


அன்றைய காலத்தில் குறிப்பிட்ட குடும்பத்திற்கென தனியாக தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கப்படுகிறது. ரத்தவழி சொந்தங்கள் உறுதியாக அதை கற்கவேண்டும். பிற தற்காப்புக்கலைகளை உறுதியாக கற்க கூடாது. ஆனால் நாம்கூங் மே உடலில் பரவியுள்ள விஷத்தால் அவனது குடும்ப தற்காப்புக்கலையை முழுமையாக கற்று பயன்படுத்த முடியவில்லை. அப்படி பயன்படுத்தினால், அவனுக்குள் உள்ள விஷம் பரவி பலிவாங்கிவிடும். நாம்கூங் மேவின் விஷத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில்தான் அவனது அம்மா இறந்துபோயிருப்பார். இதனால் அவனது அப்பா, நாம்கூங்மேவை கடுமையாக வெறுப்பார். இருந்தாலும் அவனது உயிரைக் காப்பாற்ற தனது ஆன்ம ஆற்றலைப் பயன்படுத்துவார். இப்படி ஆற்றலை செலவிட்டதால், தற்காப்புக்கலையில் நினைத்த உயரத்தை எட்டமுடியாமல் போய்விடுகிறது. இதனால் குடும்பத்தில் நாம்கூங்கிற்கு எதிரான கசப்பு உருவாகும். அந்தக்காலத்தில் வலிமையே அதிகாரத்தை, பொருளாதார பலத்தை கொடுக்கிறது. அது குறைந்தால் பிற விஷயங்களும் குறைந்துவிடுகிறது. 


உண்மையில் நாம்கூங்கிற்கு சிறுவயதில் விஷ மாத்திரையைக் கொடுத்தது யார் என கதையின் போக்கில் நாம் அறிந்துகொள்கிறோம். வேறுயார், டீமன் செக்ட்டும், டேங்க் செக்ட்டும் இணைந்து முரிம் கூட்டமைப்பை அழிக்கவே இப்படியான செயலை செய்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் குறுகியதல்ல. பெரியளவில் அதை செய்கிறார்கள்.  இதைக் கண்டுபிடித்து வீக் டீச்சரான முன்னாள் கேப்டன் கிவி எப்படி எதிரிகளை அழிக்கிறார், விஷ மாத்திரைகளை, டீமன் சாவோஸ் தற்காப்புக்கலையை எப்படி முடக்குகிறார் என்பதே மீதிக்கதை. 


கதையின் தொடக்கதில் பலவீனமான ஆசிரியர் எப்படி தன் மாணவர்களை குழுவிற்கு தேர்ந்தெடுக்கிறார் என்பதே வித்தியாசமாக இருக்கிறது. அவரின் பாடமுறைகளே நேரடியானதாக, களத்தில் சண்டையிடுவதாக உள்ளது. அங்கு கோட்பாடுகளே கிடையாது. நேரடியாக அனுபவத்தின் வழியாக தெரிந்துகொள்வதுதான் உள்ளது. இது அவரது குழுவில் உள்ள மாணவர்களுக்கே புதுமையாக உள்ளது. மொத்தம் ஐந்து மாணவர்கள். அதில், கடைசியாக உள்ளவன் நாம்கூங் மே. மதிப்பெண்கள், உடல், மனம் என இரண்டிலும் பலவீனமாக இருக்கிறான். அனைத்திலும் அவன்தான் இறுதியாக வருகிறான். ஆன்ம ஆற்றலை பிறரைப் போல பயன்படுத்த முடியாத சூழல்தான் இதற்கு காரணம். இந்த மாணவர்கள் அனைவருக்கும் தற்காப்புக்கலையைப் பயில பல்வேறு விதமான  நோக்கங்கள் இருக்கிறது. நாம்கூங் மேவிற்கு ஒரே நோக்கம்தான் உள்ளது. அது பலசாலியாக மாறுவது. 


ஒயிட் அகாடமியில், வணிகர்களை பாதுகாக்க செல்லும்போது ஒரு கிராமம் முழுக்க கொள்ளையர்களால் வேட்டையாடப்பட்டு கிடக்கிறது. அங்கு வரும் நான்கு படுகொலை ஆட்களை நாம்கூங் மே தனியாக நின்று சமாளித்து இருவரை கொல்கிறான். ஆன்ம ஆற்றல் தீர்ந்து, மயங்கி விழுந்தவனை பிறர் கொல்ல முயலும்போது வயதான பிச்சைக்கார இனக்குழுத் தலைவர் வந்து காப்பாற்றுகிறார். 

பிற பாம்பு குழுவினர் வந்ததும்தான், நாம்கூங் மே இரண்டு படுகொலை குழு உறுப்பினர்களை கொன்றான் என்று செய்தி தெரிகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியான செய்தி. திகைத்துப் போகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒன்றாக சேர்நுகொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்டு யாரையும் கொல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். இதில் இன்னொரு ஆச்சரியமான பாத்திரம் ஆன் ரின் என்ற திருநங்கை போன்ற பாத்திரம். இதுபோன்ற பாத்திரங்களை துணிச்சலாக அமைத்ததிற்காகவே எழுத்தாளரைப் பாராட்டலாம். ஆன் ரின்னுக்கும், நாம்கூங் மேவிற்கும் இடையே சொல்ல முடியாத காதல் இருக்கும். இதை ஆன் ரின்னின் ஒரு தலைக்காதல் என்று கூறலாம். எப்போது வேண்டுமானாலும் சாகலாம் என்று இருக்கும் நாம்கூங் மே எங்கு போய் யாரைக் காதலிப்பது?


ஒருமுறை காட்டில் ஆன்ரின் கொள்ளையர்களால் தாக்கப்படும்போது, நாம்கூங் மே மட்டுமே அவளைக் காப்பாற்ற தானே முன்வருவான். படுகொலையாளர்களுடனான சண்டையில் ஆன்ரின் முதுகில் காயம்பட்டு விழுந்து தன்னை காப்பாற்றியதைப் பார்த்தபிறகு நாம்கூங்கின் மனநிலை ஆக்ரோஷமாகிவிடும். தனது ஆபத்தான உடல்நிலையைக் கூட மறந்துவிடுவான். அவனது உடலில் இருந்த விஷம் வெளியே வரத் தொடங்கும். எதிரிகள் அனைவரும் ஆன்ம ஆற்றலை செயற்கையாக அதீதமாக அதிகரிக்கும் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு சண்டையிடுவார்கள். அதனால், இயல்பாக சக்தியுள்ளவர்கள் கூட அவர்களுடன் சண்டையிட தடுமாறுவார்கள். ஆனால், நாம்கூங் மே ஒரே நேரத்தில் ஆறு நபர்களை அடித்து நொறுக்குவான். தன்னிலை மறந்து கொள்ளையர்களோடு சண்டையிடத் தொடங்குவான். அவனது நண்பர்கள், எதிரிகளை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படியான சண்டை நடக்கும். அவனது நண்பர்களுக்கே அது திகைப்பாகிவிடும். நாம்கூங் மே, ஆசிரியர் கிவி ஆகியோரின் சண்டைகள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. ஆக்ரோஷமும், கொலைவெறியும் காமிக்ஸின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெளிவாக தெரிகிறது. நாம்கூங் தனது உடல்நிலையைப் பற்றி நண்பர்களிடம் கூட கூறக்கூடாது என ஆசிரியர் கிவி கூறிவிடுவார். எனவே நண்பர்கள் அவனது சக்தி பற்றி கேட்டால் கூட அதைப்பற்றி நாம்கூங் பேசமாட்டான். 


டீமன் செக்ட், உடலின் ஆன்ம ஆற்றலை அபரிமிதமாக அதிகரிக்கும் மாத்திரை, சாவோஸ் எனும் தற்காப்புக்கலை என இரண்டையும் விற்று மனிதர்களின் பேராசையைத் தூண்டுகிறது. அதை பயன்படுத்துபவர்கள் இறக்கும் வரை ஆற்றல் தீரும் வரை சண்டையிட முடியும். இந்த சக்தியை நேரடியாக எதிர்கொண்டு வெல்வது கடினம். அதை ஆசிரியர் கிவி மட்டுமே செய்கிறார். இதற்கடுத்து அவரது மாணவன் நாம்கூங் மே செய்கிறான். ஒருகட்டத்தில் மாத்திரைகளை அழிக்கும் பணியில் ஈடுபடும்போது கூட தனது பாம்புக்கூட்ட நண்பர்களை உதவிக்கு அழைப்பதில்லை. அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கிறான். டீமன் செக்ட் ஆட்கள், ஆசிரியர் கிவியை பழிவாங்க அவரது பாம்புக்குழு மாணவர்களை கடத்த நினைக்கிறார்கள். இந்த முயற்சியில் நாம்கூங்கின் அண்ணன் கை வெட்டுப்பட்டு போகிறது. நாம்கூங் மே ஆற்றில் விழுந்து பிழைக்கிறான். அவனை ஆசிரியர் கிவியுடன் வேலை செய்த முன்னாள் நண்பர் காப்பாற்றுகிறார். அவர் ஆன்ம ஆற்றலை அதிகரிக்கும் மாத்திரைகளை அழிப்பதை வேலையாக செய்கிறார். அதே பணியில் நாம்கூங் மே இணைந்துகொள்கிறான். இந்த பயணத்தில் நல்லது, கெட்டது, வலிமை, பலவீனம் என பலவற்றையும் யோசித்து தெரிந்துகொள்கிறான். அதற்கான பாடங்கள் கிடைக்கின்றன. 


ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே, அவரது சகோதரன் இருவரும் கடத்தப்பட்டனர் என தகவல் கிடைக்கிறது. பாம்புக்குழு உறுப்பினர்களையும்  டீமன் செக்ட் ஆட்கள் கடத்த முயல்கிறார்கள். அதை ஆசிரியர் கிவி தடுக்கிறார். முரிம் கூட்டமைப்பு, ஒயிட் அகாடமி என இரண்டு இடங்களிலும் டீமன் செக்ட் ஆட்கள் மூலம் தாக்குதல் நடைபெறுகிறது. பாம்புக்குழுவினர், தங்களது நண்பன் கடத்தப்பட்டதால் டிராகன் வாள் வீரர் ஒருவரோடு சேர்ந்து பயணிக்க தொடங்குகிறார்கள். நாம்கூங் மேவை கண்டுபிடிப்பதே நோக்கம். ஆனால், நாம்கூங் மே தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க நினைக்கிறான். அதற்காகவே அவன் ஆசிரியர் கிவியின் முன்னாள் நண்பரோடு இணைந்து பயணிக்கிறான். இதற்குள்ளாகவே கிவி இதற்கு மூலகாரணம் யாரென்று தெரிந்துகொள்கிறார். அந்த எதிரியைக் கொன்றுவிடுகிறார். உண்மையில் அவருக்கு முன்னரே எதிரிகள் அதை செய்கிறார்கள். கிவி கூடுதல் விவரங்களை அறிய நினைக்கிறார். ஆனால் அது சாத்தியப்படுவதில்லை. 


கதை இன்னும் முடியவில்லை. ஆன்ம ஆற்றலை அபரிமிதமாக அதிகரிக்கும் திட்டத்தின் பின்னால் உள்ள தலைவர் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. கதை அப்படியே தொடர்கிறது. 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்